என் மலர்
கிரிக்கெட் (Cricket)

கை குலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் கேப்டனிடம் சூர்யகுமார் கைகுலுக்கினார் - அப்ரிடி
- இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
- கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, "ஆசிய கோப்பை தொடங்கும்போதே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிரான புறக்கணிப்பு பிரசாரங்கள் இணையத்தில் அதிகரித்தன. அது வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ கூறியதில் ஆச்சரியமில்லை.
இதற்காக இந்திய வீரர்களை நான் குறைகூறவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு படி அவர்கள் நடந்துகொண்டார்கள்.
செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரிடம் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.
ஆனால் இந்திய அரசாங்கத்தால் சமூக ஊடக அழுத்தத்தைக் கையாள முடியாததால் மைதானத்தில் மக்களின் முன்பு அவரால் கைகுலுக்க முடியவில்லை. இதனால் இந்திய வீரர்கள் உலகத்தின் முன் அவமானமடைந்தனர்" என்று தெரிவித்தார்.






