என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
- ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.
வெள்ளத்தால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாபிற்கு மத்திய அரசு அறிவித்த ரூ.1,600 கோடி நிதி உதவி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.
மத்திய அரசு அறிவித்த சொற்ப உதவி பஞ்சாப் மக்களுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், மழைப் பொழிவால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
வெள்ளத்தால் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிலங்களை பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது நியாயமற்றது. முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குருதாஸ்பூர் விவசாயிகளிடம் பேசினார்.
இதற்கிடையில், சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர், அங்குள்ள நிலைமையை வான்வழியாக ஆய்வு செய்தார். இந்த மாதம் 9 ஆம் தேதி, பஞ்சாபிற்கு ரூ.1,600 கோடி நிதி உதவியை அறிவித்தார். இந்த சூழலில், ராகுல் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "The Scourged Back" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் நீக்கப்பட உள்ளது.
- அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி பொருட்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்க தேசிய பூங்காக்களில் உள்ள கறுப்பின அடிமை முறை, அடிமைகள் வணிகம், பழங்குடியினர் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்களை நீக்குமாறு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "The Scourged Back" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் நீக்கப்பட உள்ளது. இது, பிரம்பால் அடிக்கப்பட்ட ஒரு அடிமையின் முதுகில் உள்ள காயங்களை காட்டும் புகைப்படம்.
அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி பொருட்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாக உத்தரவை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள பூங்காங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஒரு சிறந்த நாடு அதன் வரலாற்றை மறைக்காது. நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் இரண்டிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று வரலாற்றாசிரியர்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
- பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.
- மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா, பிரிட்டனுக்கு இரண்டாவது அரசு முறைப் பயணமாக வந்துள்ளனர்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, விண்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோரை சந்தித்து விருந்தில் கலந்து கொண்டனர்.

பீரங்கிகள் முழங்க, குதிரைப்படை வீரர்கள் மற்றும் ராணுவ இசைக்குழுவினருடன் கூடிய பிரம்மாண்டமான வரவேற்பு டிரம்ப்புக்கு அளிக்கப்பட்டது.
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமில்லாவுடன் சேர்ந்து குதிரை வண்டியில் பயணம் செய்த டிரம்ப், ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார்.
டிரம்ப் விண்ட்சர் கோட்டையில் இருக்கும் அதே நேரத்தில், மத்திய லண்டனில் நூற்றுக்கணக்கான மக்கள் டிரம்ப் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
- 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது
பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த மும்பை கோல்டன் கிரவுன் ஹோட்டல் உரிமையாளர் கொலையை அரங்கேற்றியவர் ஆவார்.
இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீதான வழக்கு கடந்த மே மாதம் மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் சோட்டா ராஜனை குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டை விதித்தார் நீதிபதி ஏ.எம். பாட்டீல்.
இந்த தண்டனையை எதிர்த்து சோட்டா ராஜன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்தும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் சோட்டா ராஜன் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை கடந்த வருடம் அக்டோபரில் விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சோட்டா ராஜனின் ஆயுள் தண்டனையை இடைநீக்கம் செய்து, அவருக்கு ரூ.1 லட்சம் பிணை தொகையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இருப்பினும் மற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக ராஜன் தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல் உருவானது.
இதனை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, 2 கொலை வழக்குகள் உள்பட 4 வழக்குகளில் ராஜன் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
சோட்டா ராஜன் 4 வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவருக்கு ஏன் தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது? என உச்சநீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றத்தை எழுப்பியது.
சாட்சிகள் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல முன்வரவில்லை. அதனால், பல வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறிய உச்சநீதிமன்றம், இந்த வழக்கில், வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
- அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
- 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி களமிறங்கியது.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இறுதி நேரத்தில் ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில், ஜுனைத் சித்திக் 3 விக்கெட்டுகளையும், சிம்ரன்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது.
17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
- காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.
மகாராஷ்டிர காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கட்சிரோலி மாவட்டத்தில் எடாபள்ளி தாலுகாவில் உள்ள மோடாஸ்கே கிராமத்திற்கு அருகில் காட்டிற்குள் மாவோயிஸ்டுகளின் குழு முகாமிட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், நேற்று (புதன்கிழமை) காலை காவல்துறையினர், சிஆர்பிஎஃப் மற்றும் நக்சல் ஒழிப்பு கமாண்டோ படைப்பிரிவினர் ஐந்து குழுக்களாகச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
காவல்துறையினர் காட்டைச் சுற்றி வளைத்துத் தேடும்போது, மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு காவல்துறையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.
துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பிறகு, தேடுதல் வேட்டையில் இரண்டு பெண் நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
அவர்கள் உடல்களில் இருந்து ஏகே-47 துப்பாக்கி, பிஸ்டல், வெடிபொருட்கள், நக்சலைட் புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இறந்தவர்கள், உள்ளூர் ஸ்குவாட் தலைவர் சுமித்ரா என்கிற சுனிதா வேலடி, மற்றும் கமிட்டி உறுப்பினர் லலிதா என்கிற லட்டோ கோர்சா என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களின் தலைக்கு முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.6 லட்சம் மகாராஷ்டிரா காவல்துறை வெகுமதி அறிவித்திருந்தது.
2021-ஆம் ஆண்டு முதல் இதுவரை கட்சிரோலியில் 93 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர், 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 75 பேர் சரணடைந்துள்ளனர் என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினருடனான மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது பரிசளித்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கடம்ப மரக்கன்றை பரிசளித்துள்ளார்.
பிரிட்டன் தூதரகம் எக்ஸ் (X) வலைத்தளத்தில் பகிர்ந்த தகவலில். "பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாராஜா கடம்ப மரக்கன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதமரின் 'Ek Ped Maa Ke Naam' என்ற முன்முயற்சியால் ஈர்க்கப்பட்ட இந்த செயல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இருவரின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி பிரிட்டனுக்குச் சென்றபோது, இதே முன்முயற்சியின் கீழ் மன்னர் சார்லஸுக்கு "சோனோமா" மரக்கன்றை பரிசளித்ததையும் தூதரகம் குறிப்பிட்டது.
"காலநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி ஒத்துழைப்பு என்பது காமன்வெல்த் மற்றும் பிரிட்டன்-இந்தியா கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் ஒன்றாகும்" என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ek Ped Maa Ke Naam "ஒரே மரம் தாயின் பெயரால்" என்ற முன்முயற்சியின் நோக்கம், ஒரு மரத்தை ஒருவரின் தாயின் பெயரால், அடையாளபூர்வமாக நடுவது ஆகும்.
பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலிய பிரதமர் மெலோனி உள்ளிட்ட பல உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது.
- விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் மும்பை சென்ட்ரல்-வல்சாத் பயணிகள் ரெயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்த ரெயில் 7.56 மணியளவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள கெல்வே ரோடு ரெயில் நிலையத்தை அடைந்த போது மின்சார என்ஜினில் தீவிபத்து ஏற்பட்டு புகை கிளம்பியது.
உடனடியாக ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு நடவடிக்கையாக எஞ்சினுக்கு மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக பிற ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
- உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டினர்.
- மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.
செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள் மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பெங்களூரு காவல்துறையின் லோகோவைக் காட்டி அவரை மோசடிக்காரர்கள் நம்ப வைத்துள்ளனர்.
பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டிய மோசடி செய்பவர்கள் அவரது ஓய்வூதியக் கணக்கிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு ரூ.6.6 லட்சத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.
பணம் செலுத்தப்பட்ட பிறகும், வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளான அவர் ஒரு கட்டத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- கடந்த 12ஆம் தேதி நடிகை திஷா படானி வீட்டில் துப்பாக்கிசூடு.
பாலிவுட் நடிகை திஷா படானிக்கு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரில் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன் கடந்த 12ஆம் தேதி அதிகாலை இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர். அப்போது திஷா படானியின் தந்தை ஜெக்திஷ் சிங் படானி (ஓய்வு பெற்ற டிஎஸ்பி), அவரது தாய் மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
துப்பாக்கியால் சுட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டது.
இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்திபப்ட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதிற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரைலர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் பதிவிட்டிருந்தார். இவருக்கு கிரிமினல் அமைப்பு நெட்வொர்க் உடன் தொடர்பு உள்ளது. இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரையும் தேடிவந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தின் சிறப்பு அதிரடிப்படையின் நொய்டா குழு மற்றும் டெல்லி போலீசின் குற்ற புலனாய்வுத்துறை குழு ஆகியவை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
அப்போது காசியாபாத்தில் இருவரும் இருப்பதை கண்டறிந்து அங்கு சென்றனர். அப்போது போலீசார் நோக்கி இருவரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் போலீசாரும் தாக்கல் நடத்த இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து, மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
- முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- ஸ்மிரிதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார்.
சண்டிகர்:
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 49.5 ஓவரில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மந்தனா 117 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் டார்சி பிரவுன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அன்னாபெல் சதர்லேண்ட் 45 ரன் எடுத்தார். இதன்மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் கிராந்தி கவுட் 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
- ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல்
- சோதனை முடிவில் புரளி எனத் தெரியவந்தது.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சென்னை வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டலை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி வீட்டைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.






