search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளருக்கு பா.ஜனதா ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு
    X

    ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளருக்கு பா.ஜனதா ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

    • அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
    • நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    சென்னை:

    பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவை பாரதிய ஜனதா கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டப்பூர்வ அ.தி.மு.க. வேட்பாளரை முன்நிறுத்தி இருக்கும் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பொதுநலன் கருதி கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆளும் கட்சியின் அராஜகங்களை, ஊழல்களை அத்துமீறல்களை, மக்கள் விரோத போக்கை, கொடுத்த வாக்கில் எதையும் நிறைவேற்ற முடியாமல், திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசை, வீழ்த்துவதற்காக ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும்.

    இந்த இடைத்தேர்தல் வெற்றி, வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும்வண்ணம் அமைக்க, கண்ணுறக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

    ஆட்சியின் பலம், அதிகாரத்தின் பலம், அளவின்றி குவித்திருக்கும் பணபலம், என்று எத்தனை பலத்துடன் நம் எதிரி வந்தாலும், மக்கள் பலத்துடன், நாம் மனதார உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×