search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை
    X
    அண்ணாமலை

    வெள்ளை வேஷ்டியுடன் ஸ்டாலின் விவசாயம் செய்வது திராவிட மாடலா?- அண்ணாமலை கேள்வி

    தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தைரியமாக நடமாடி வருகின்றனர் என்று பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.
    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள புஷ்பத்தூர் ஊராட்சி வயலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேட்கக்கூடாது. ஏனெனில் தேர்தல் வாக்குறுதிகளை எழுதியவர் டி.ஆர்.பாலுதான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். அப்படியெனில் டி.ஆர்.பாலுவை முதல்வராக்கி விடுங்கள். தமிழகத்தில் எது நடந்தாலும் திராவிடமாடல் ஆட்சி என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்.

    வயலில் சிவப்பு கம்பளம் விரித்து கஞ்சி போட்ட வேஷ்டி-சட்டையுடன் விவசாயம் செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் ஏமாற்றுவேலை. இந்தியாவில் அதிக பொய் பேசுவதில் நம்பர் 1 முதல்-அமைச்சராக ஸ்டாலின் உள்ளார். தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிடுவதாக நான் தெரிவித்தேன். சில அமைச்சர்கள் தற்போது என்னிடம் தூது விடுகின்றனர்.

    எல்லா முடிவுகளும் கோபாலபுரத்தில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. எங்களுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்கின்றனர். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அமெரிக்காவில் 2 வங்கிகளை திவால் செய்துவிட்டு வந்தவர். பிரதமர் மோடி 8 ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினை முதல் உள்நாட்டு நக்சலைட் பிரச்சினை வரை தலையிட்டு குறைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் முன்னாள் பிரதமரை கொன்ற குற்றவாளியை தமிழக முதல்வர் கட்டி தழுவுகிறார்.

    சென்னையில் பட்டப்பகலில் முகத்தை மறைக்காமல் கூலிப்படையினர் கொலை செய்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் ரவுடிகள் தைரியமாக நடமாடி வருகின்றனர். தி.மு.க ஆட்சியின் 2-வது வருட தொடக்கத்தில் மகன், மருமகன் ஆகியோரை தொடர்ந்து 3-வது பவர் சென்டராக துர்கா ஸ்டாலின் உருவாகி வருகிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் புகழ்வது 23-ம் புலிகேசி படத்தில் வடிவேலுவை மந்திரிகள் புகழ்வது போல் உள்ளது.

    உக்ரைனில் இருந்து தமிழக அரசு மாணவர்களை மீட்க சுவட்டர் கம்பெனிக்கு ரூ.1½ கோடி கொடுத்துள்ளதாக தெரிவித்தது. இதேபோல் டிராவல் ஏஜென்சி கம்பெனிக்கும் பணம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து கச்சத்தீவை தாரை வார்த்ததுடன் மீன்பிடி உரிமையையும் ரத்து செய்தனர். தற்போது கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுக்கிறார்.

    தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை முழுவதையும் மத்திய அரசு கொடுத்துவிட்டது. எனவே இப்போதாவது மாநில அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    Next Story
    ×