search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    பள்ளி பொதுத்தேர்வை மே மாதத்தில் நடத்த வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

    கொரோனா தொற்று நோய் பாதிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி பொதுத்தேர்வை மே மாதத்தில் நடத்த வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழை என்பது இயல்பாக டிசம்பர் 15-ந்தேதி வரை இருக்கும் என்றாலும் தற்போது நிலவும் பருவநிலை மாற்றத்தில் வடகிழக்கு பருவமழை எத்தனை நாள் நீடிக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

    முந்தைய ஆண்டுகளில் டிசம்பர் மாத இறுதிவரை வடகிழக்கு பருவமழை பெய்துள்ள நிலையில் இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது எஞ்சியிருக்கின்ற காலங்களில் பாடத்திட்டங்களை முடிப்பது என்பது மிகவும் சிரமம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

    மாணவ-மாணவியர் பொதுத்தேர்விற்கு தயாராகுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை ஓரளவுக்கு குறைப்பதும், பொதுத்தேர்வினை மே மாதத்தில் நடத்துவதும் தான் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து மாணவ- மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.

    இந்த நிலையில் மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது என்றும், கூடுதல் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர மாணவ-மாணவியர் மன நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது.

    பாடத்திட்டங்களை குறைத்து பொதுத்தேர்வை மே மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்பதே மாணவ-மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு கொரோனா தொற்று நோய் பாதிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதில் தொடர்புடையவர்களை அழைத்து பேசி மாணவ- மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×