search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணத்தை தவறவிட்ட சீனியம்மாளிடம் போலீசார் ஜெகன், அஜித்கண்ணன் ஆகியோர் ஒப்படைத்தனர்
    X
    பணத்தை தவறவிட்ட சீனியம்மாளிடம் போலீசார் ஜெகன், அஜித்கண்ணன் ஆகியோர் ஒப்படைத்தனர்

    ஓடும் பஸ்சில் ரூ.40 ஆயிரத்தை தொலைத்த பெண்- 10 நிமிடத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த போலீசார்

    பணம் தொலைந்தது குறித்து பெண் கொடுத்த தகவலையடுத்து துரிதமாக செயல்பட்ட சட்ட ஒழுங்கு காவலர் ஜெகன், அஜித்கண்ணன், போக்குவரத்துக் காவலர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
    அவனியாபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மனைவி சீனியம்மாள் (வயது 48). இவர் சம்பவத்தன்று ரூ. 40 ஆயிரத்தை ஒரு துணிப்பையில் வைத்துக்கொண்டு கமுதியில் இருந்து மதுரைக்கு தனியார் பஸ்சில் வந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மதுரை அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலா நகர் பஸ் நிறுத்தத்தில் சீனியம்மாள் இறங்கினார்.

    அப்போது அவர் தன் கொண்டு வந்த பையை பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் அவர் வந்த பஸ் சென்றுவிட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த சீனியம்மாள் மண்டேலா நகரில் போக்குவரத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த சதீஷ்குமார் என்ற காவலரிடம் தன் நிலையை எடுத்துக் கூறினார்.

    உடனே போலீஸ்காரர் சதீஷ்குமார் விரைந்து செயல்பட்டு மதுரை சிந்தாமணி சோதனைச்சாவடியில் பணிபுரியும் போலீஸ்காரர் ஜெகனுக்கு பணம் தொலைந்ததும் குறித்தும், தனியார் பஸ் குறித்த தகவலையும் அளித்தார்.

    சிறிது நேரத்தில் சிந்தாமணி சோதனை சாவடிக்கு சீனியம்மாள் பயணம் செய்த தனியார் பஸ் வந்தது. உடனே போலீஸ்காரரர் ஜெகன் அந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் இருந்த ஒரு நபர் பேருந்துக்குள் கிடந்த பணப்பையை எடுத்து போலீசாரிடம் கொடுத்தார்.

    பின்னர் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்தனபோஸ் ஆகியோர் விசாரணை நடத்தி ரூ. 40 ஆயிரத்தை சீனியம்மாளிடம் ஒப்படைத்தனர். பணம் தொலைந்தது குறித்து பெண் கொடுத்த தகவலையடுத்து துரிதமாக செயல்பட்ட சட்ட ஒழுங்கு காவலர் ஜெகன், அஜித்கண்ணன், போக்குவரத்துக் காவலர்கள் சதிஷ் குமார், அருள் ஆகிய காவலர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.



    Next Story
    ×