search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஆர்பி உதயகுமார்
    X
    அமைச்சர் ஆர்பி உதயகுமார்

    நீலகிரி மாவட்டத்தில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பருவமழையால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி முதல் கனமழை பெய்தது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது.

    முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க நிவாரணப்பணிகளை துரிதப்படுத்திட குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 155 முகாம்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் ஏறத்தாற 3500 நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் மிகவும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்தது அங்கு இருந்த 15 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரி பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய ஜே.சி.பி. வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோது அங்கு ஆற்றில் துணி துவைத்து கொண்டிருந்த 5 நபர்களை பத்திரமாக மீட்டுள்ளோம்.

    நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    மழை ஓயும்வரை முகாமில் பொதுமக்கள் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நீரோட்டம் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மேலும் அங்கு குழந்தைகளுக்கு வேடிக்கை காட்ட வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    குறிப்பாக செல்பி எடுப்பதில் ஈடுபாடு காட்ட வேண்டாம் என்று முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டுகிறேன்.

    மேலும் கனமழையால் பலியான குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதுபோல் பாதிப்படைந்த நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

    நீலகிரி மாவட்டத்தில் தமிழக தேசிய பேரிடர் மீட்பு படை, இந்திய தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×