search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கூட்டத்தில் சீமான் பேசிய காட்சி.
    X
    கூட்டத்தில் சீமான் பேசிய காட்சி.

    தமிழகத்துக்கு இதுவரை செய்யாத மோடி இனி என்ன செய்துவிடப் போகிறார்- சீமான் கேள்வி

    5 ஆண்டுகளாக ஆட்சி செய்த மோடி தமிழகத்துக்கு என்ன செய்தார்? இனி ஆட்சிக்கு வந்து என்ன செய்துவிடப் போகிறார்? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #Seeman
    சேலம்:

    நாம் தமிழர் கட்சி சார்பில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து சேலத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-

    சேலம்-சென்னை இடையே ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தி 8 வழிச்சாலை தேவை தானா? இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியவர்கள், கஜா புயலுக்கு ஒதுக்கீடு செய்த தொகை எவ்வளவு? சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு, 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாக கூறியதால், நிலம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்து விட்டு சென்ற சேலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நெஞ்சு வலியால் இறந்தார். இதை பற்றி பேசிய என் மீது வழக்கு போட்டு அடக்கு முறையை கையாண்டனர்.

    தெரு, தெருவாக சென்று வாக்கு கேட்கும் முறையை ஒழித்து விட்டு, ஒரு இடம் தேர்வு செய்து அங்கே அரசியல் கட்சியினரை பேச வைக்க வேண்டும். யார் பேசுவது சரியாக இருக்கிறதோ அதை மக்கள் கேட்டு ஓட்டு போடட்டும். புதிய தேசத்தை நாங்கள் நினைக்கிறோம். நோட்டாவுக்கு ஓட்டு போடுவதால் என்ன மாறுதல் வரும். நோட்டாவுக்கு ஓட்டு போட நினைக்கும் இளைஞர்கள், நோட்டா என்ற அமைப்பை தொடங்கி தலைமை பண்புக்கு வரவேண்டும்.

    எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், நல்ல கருத்தையும், உயர்ந்த கொள்கையையும் கொண்டு நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். விவசாயியின் உழைப்பில் தான் நாடு வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் விவசாயி சின்னத்தோடு சந்திக்க வருகிறோம்.

    எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் வளமுடன் இருந்தவை. அந்த நாடுகளில் விவசாயம் அழிக்கப்பட்டதால், அங்கு பஞ்சம் ஏற்பட்டது. அந்த நாடுகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.10-க்கு கிடைத்தது. ஆனால் உணவும், குடிநீரும் கிடைக்கவில்லை. அந்த நிலை தமிழகத்துக்கு வந்துவிடக் கூடாது. 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த மோடி தமிழகத்துக்கு என்ன செய்தார். இனி ஆட்சிக்கு வந்து என்ன செய்துவிடப் போகிறார். 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்துவிட்டது? அ.தி.மு.க.விடம் 37 எம்.பி.க்கள் இருந்ததால் தமிழகத்துக்கு என்ன பயன் கிடைத்தது. அநீதியை இழைத்த இவர்களுக்கா உங்கள் வாக்கு. ஒற்றை வாக்கு உலகை புரட்டிப்போடும் என்பதை உணர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #NaamThamizharKatchi #Seeman
    Next Story
    ×