search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா?-  பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம்
    X

    கஜா புயல் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா?- பொன் ராதாகிருஷ்ணன் விளக்கம்

    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்த பின்னரே, அது தேசிய பேரிடரா? என்று தெரியவரும் என மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #GajaCyclone
    நாகர்கோவில்:

    பிரதமர் மோடியின் 50-வது ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி நேற்று வானொலியில் ஒலிபரப்பானது. இந்த உரையை பொதுமக்கள் கேட்பதற்காக நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் பா.ஜனதாவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் பிரதமர் மோடியின் உரை தமிழில் மொழிபெயர்த்து கூறப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜனதாவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. புயல் பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் 16 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் புயல் சேதத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் முழுமையாக ஆய்வு நடத்திய பிறகுதான் புயலின் தாக்கம் முழுமையாக கண்டுபிடிக்கப்படும். பின்னர்தான் அது தேசிய பேரிடரா? என்பது பற்றியும் தெரியவரும்.

    புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நான் சந்தித்தேன். அப்போது ஒரு முகாமில் சிலர் நிவாரண பொருட்கள் கிடைத்ததாக கூறுகிறார்கள். வேறு சிலர் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

    சபரிமலைக்கு சென்ற என்னை போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தியதில் எந்த தவறும் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருக்கிறார். சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா மட்டும் தான் போராட்டம் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது அவருக்கு தெரியவில்லையா?

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளிக்கு இயக்கக் கூடாது என்பது குறித்து ரெயில்வே மந்திரிக்கு நான் கடிதம் அனுப்பி உள்ளேன். இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே அதுமுடிந்ததும் குமரி மாவட்டத்தை மதுரை ரெயில்வே கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #BJP #PonRadhakrishnan #GajaCyclone
    Next Story
    ×