search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 6 பேரை படத்தில் காணலாம்
    X
    கைதான 6 பேரை படத்தில் காணலாம்

    ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய 6 பேர் கைது

    குடியாத்தம் அருகே ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்தியது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் பணம், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் உள்ளது. மேலும் பல நிதி நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார்.

    கடந்த 6-ந்தேதி காலையில் தொழிலதிபர் சேகர் நடைபயிற்சி முடித்து விட்டு குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த 6 பேர் கும்பல் துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றனர். அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டுள்ளனர். மேலும் சேகரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தொழிலதிபர் குடும்பத்தினர் பல லட்ச ரூபாயை கடத்தல் கும்பலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடத்தல் கும்பல் அவரை விடுவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து குடியாத்தம் போலீசில் புகார் செய்தனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    சேகர் கடத்தப்பட்ட அன்று அவரது குடும்பத்தினருக்கு வந்த செல்போன் அழைப்புகளையும், சேகரின் செல்போன் சிக்னல்கள் இருந்த டவர்களும் தீவிரமாக ஆராயப்பட்டது. அப்போது ராணிப்பேட்டையை அடுத்த காரைகூட்ரோடு பகுதி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த என்.ஆர்.பேட்டை பகுதியை காட்டியது.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் குறித்தும் துப்பு கிடைத்தது. இதனையடுத்து நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகர் வீட்டிற்கு தேவையான ஸ்டீல் கிரில் செய்ய குடியாத்தத்தை சேர்ந்த ஒரு வெல்டிங் கடையில் ஆர்டர் கொடுத்து அதற்கான பணத்தை கொடுத்துள்ளார்.

    ஆனால் பலமாதங்கள் ஆகியும் ஸ்டீல் கிரில் செய்து கொடுக்கவில்லை. அப்போது சேகர் வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தி என்பவரை அவதூறாக பேசியுள்ளார்.

    இதனால் கோபமடைந்த மூர்த்தி, சேகரை பழிவாங்க முடிவு செய்து தனது கடை ஊழியருடன் பெங்களூருவை சேர்ந்த கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு சேகரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர்.

    இதனையடுத்து பெங்களூருவை சேர்ந்த கடத்தல் கும்பல் சித்தூர் என்.ஆர்.பேட்டையை சேர்ந்த சிலருடன் குடியாத்தத்திற்கு வந்துள்ளனர். பின்னர் வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தியின் காரில் துப்பாக்கி முனையில் சேகரை கடத்தி சென்று ராணிப்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் என்.ஆர்.பேட்டையில் உள்ள மாந்தோப்புக்கு கொண்டு சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பணம் பெற்று சேகரை விடுவித்தது தெரியவந்தது.

    இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக குடியாத்தத்தை சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தி (39), ஊழியர் பாபு (34) மற்றும் சித்தூர் என்.ஆர்.பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (24), சங்கர் (25), ராஜாமணி (28), முன்னா என்கிற முனீஷ்கான் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம், ஒரு கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெங்களூர் பசவேஸ்வரா நகரை சேர்ந்த நவீன், அருண், ரபீக், சித்தூரை சேர்ந்த சுதாகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.#tamilnews
    Next Story
    ×