search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடிய விடிய பயணிகள் அவதி: கோவை-திருப்பூர் - நீலகிரியில் அரசு பஸ்கள் ஓடவில்லை
    X

    விடிய விடிய பயணிகள் அவதி: கோவை-திருப்பூர் - நீலகிரியில் அரசு பஸ்கள் ஓடவில்லை

    தமிழ்நாடு முழுவதும் அரசு பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி பயணிகள் பஸ் நிலையத்தில் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

    கோவை:

    அரசு பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கோவை, திருப்பூரில் பயணிகள் பஸ் நிலையத்தில் தவித்தனர்.

    தமிழ்நாடு முழுவதும் அரசு பஸ் ஊழியர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று இரவு 8 மணியளவில் ஸ்டிரைக் அறிவிப்பை வெளியிட்டனர்.

    கோவையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் அரசு பஸ் சேவை முற்றிலும் முடங்கியது. கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து போதுமான பஸ்கள் இயங்கவில்லை.

    கோவை மாநகரில் சுங்கத்தில் 2 டெப்போக்களும், ஒண்டிப்புதூரில் 3 டெப்போ, உக்கடத்தில் 2, அவினாசி மேம்பாலம் உப்பிலிபாளையய்தில் 1, மேட்டுப்பாளைம் சாலையில ஒரு டெப்போ என 9 டெப்போக்கள் உள்ளது.

    இங்கிருந்து தினமும் டவுன் பஸ் மற்றும் வெளியூர் பஸ்கள் என 650 பஸ்கள் புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் இன்று காலை மிக குறைந்த அளவில் 90 பஸ்கள் மட்டுமே புறப்பட்டு சென்றதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர்.

    கோவை புறநகரில் மேட்டுப்பாளையத்தில் 2, பொள்ளாச்சியில் 3, வால்பாறை, வடவள்ளி, சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர் ஆகிய இடங்களில் அரசு பஸ் டெப்போக்கள் உள்ளது.

    இங்கிருந்து தினமும் 354 டவுன் பஸ்கள், வெளியூர் செல்லும் 184 பஸ்கள் என 538 பஸ்கள் புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் இன்று காலை 8 மணி வரை 93 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.

    பொள்ளாச்சியில் உள்ள 3 டெப்போக்களில் மொத்தம் 180 பஸ்கள் உள்ளது. அவைகளில் இன்று 20 பஸ்கள் மட்டுமே ஓடியது.

    கோவையில் உள்ள சுங்கம் டெப்போ முன் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாநகரில் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கியது. இதில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. படிக்கட்டு வரை நின்று அவர்கள் பயணம் செய்தனர்.

    கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் பஸ் நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும் இன்று வரவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். அவர்கள் பஸ் நிலையத்தில் விடிய, விடிய தவித்தனர்.

    வெளியூர்களில் இருந்து இன்று கோவை வந்த ஆம்னி பஸ்களை வெளியூர்களுக்கு இயக்க போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை சிங்காநல்லூரில் இருந்து வெளியூர்களுக்கு ஒரு சில ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பூர், தாராபுரம், காங்கயம், உடுமலை, வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கயம், உடுமலை,தாராபுரம் உள்ளிட்ட 6 இடங்களில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது.

    இங்கிருந்து தினமும் 470 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று இரவு முதல் பஸ்கள் இயக்கடவில்லை. இந்த டெப்போக்களில் இருந்து காலை 9 மணி வரை 350 பஸ்கள் புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் இன்று காலை 9 மணி வரை 50 பஸ்கள் மட்டுமே சென்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 89 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.

    பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூர் பனியன் கம்பெனிக்கு தினமும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து செல்வார்கள். இன்று பஸ் வேலை நிறுத்தம் காரணமாக அவர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    தொழிலாளர்கள் ரெயில்களில் வந்ததால் ரெயிலில் கூட்டம் அலை மோதியது. அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ்களுக்கு அனுமதி இல்லை. இந்த மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், கூடலூர் ஆகிய இடங்களில் அரசு பஸ் டெப்போக்கள் உள்ளது.

    இங்கிருந்து இன்று அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மினி பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சியில் பயணம் செய்தனர். ஆனால் அவர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

    கோவையில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்தை போக்க ஆம்னி பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கோவை மாநகரில் பயணிகள் சிரமத்தை போக்க மினி பஸ்களை கூடுதல் தூரம் வரை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை உக்கடத்தில் இருந்து கேரளா செல்லும் தமிழக அரசு பஸ்களும் இன்று ஓடவில்லை.

    Next Story
    ×