search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் நிறுவனங்களின் பாலை பரிசோதிக்க தமிழக அரசுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு
    X

    தனியார் நிறுவனங்களின் பாலை பரிசோதிக்க தமிழக அரசுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு

    2 தனியார் நிறுவனங்களின் பால் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அண்மையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும், இதை அருந்தும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் வரும் என்றும் கூறினார். மேலும், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பால் பொருட்களிலும் இதுபோல கலப்படம் செய்யப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஆதாரம் இல்லாமல் இதுபோல குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், ஹட்சன் மற்றும் விஜய் பால் நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்துள்ளன. அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் நிறுவனம் விற்பனை செய்யும் பாலின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம், மத்திய அரசின், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த பரிசோதனையை மாநில அரசு மேற்கொள்ள முடியாது.

    ஆனால், பால்வளத்துறை அதிகாரிகள், எங்கள் நிறுவனத்தின் பால் முகவர்களை மிரட்டி, சட்டவிரோதமாக பால் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்கின்றனர். வெளி மாநிலங்களில் உள்ள ஆய்வுக்கூடங்களுக்கும் அந்த பால் மாதிரிகளை அனுப்பி வைக்கின்றனர்.

    ஆவின் நிறுவனத்தின் பால் அதிகமாக விற்பனையாகவேண்டும் என்பதற்காக, அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றனர். எங்கள் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ள ஆவின் நிறுவனத்தின் ஆணையருக்கு, எங்கள் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலையும், பால் பொருட்களையும் பரிசோதனை செய்ய அதிகாரம் கிடையாது.

    ஆனால் ஆவின் அதிகாரிகள் சட்டவிரோதமாக பால் மாதிரிகளை எங்களது முகவர்களிடம் இருந்து எடுத்து சென்று, பரிசோதனை செய்கின்றனர். இதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அதிகாரிகள் முறையாக எங்கள் நிறுவனங்களை ஆய்வு செய்கின்றனர். அவர்கள் இதுவரை எந்தப் புகாரும் கூறவில்லை.

    தற்போது தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டை தமிழக பால்வளத்துறை அமைச்சரே குற்றம் சாட்டுகிறார். அதனால், எங்கள் நிறுவனத்தின் பாலை தமிழக அரசு பரிசோதனை செய்தால், அது உண்மையாக இருக்காது. அதனால், பால் மாதிரிகளை ஆய்வு செய்ய நடுநிலைமையான குழுவை அமைக்க வேண்டும்.

    எங்கள் நிறுவனங்களின் கொள்முதல், விற்பனை மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி போன்ற அன்றாட தொழில் நடவடிக்கைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடைவிதிக்க வேண்டும். எங்களது நிறுவனத்தின் பால் மாதிரிகளை பரிசோதனை செய்யவும், வேறு ஆய்வுக்கூடத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கவும் தமிழக அரசுக்கு தடைவிதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி ஆஜராகி வாதிட்டார். அவர், ‘நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பாலில், 68.4 சதவீதம் பாலில் கலப்படம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படியே பால் கலப்படத்தை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விற்பனைக்கு வரும் பாலின் தரத்தை ஆய்வு செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது’ என்று கூறினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.துரைசாமி, மனுதாரர்களான 2 நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை நடத்த தமிழக அரசுக்கு இடைக்கால தடைவிதித்தும், இதுதொடர்பாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடைத்துறை முதன்மைச் செயலாளர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆணையர் உள்ளிட்டவர்கள் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டார். 
    Next Story
    ×