search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதக்கத்துடன் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்.
    X
    பதக்கத்துடன் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்.

    இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ‘சாம்பியன்’

    இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
    ஜகர்தா :

    இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டித் தொடர் ஜகர்தாவில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 22-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டிய 47-ம் நிலை வீரர் ஜப்பானின் கசுமசா சகாயை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த மோதலில் முதல் செட்டை எளிதில் வசப்படுத்திய ஸ்ரீகாந்த் 2-வது செட்டில் சற்று தடுமாறினாலும் பிறகு சரிவில் இருந்து மீண்டு 19-19 என்று சமன் செய்தார். இறுதியில் இரண்டு ஷாட்டுகளை அடித்து வெற்றிக்கனியை பறித்தார்.

    இறுதியில் ஸ்ரீகாந்த் 21-11, 21-19 என்ற நேர் செட்டில் 37 நிமிடங்களில் சகாயை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைச் தட்டிச்சென்றார். அவருக்கு ரூ.48¼ லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது.



    35 ஆண்டு கால இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் இந்த கோப்பையை இந்திய வீரர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்திய வீராங்கனைகளில் சாய்னா நேவால் இந்த பட்டத்தை மூன்று முறை (2009, 2010, 2012) வென்று இருக்கிறார்.

    ஐதராபாத்தை சேர்ந்த 24 வயதான ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘சகாய் 2-வது செட்டில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார். இதில் நான் 6-11 என்று பின்தங்கி இருந்து அதன் பிறகு 13-13 என்று சமன் செய்ததே ஆட்டத்தின் திருப்பு முனையாகும். சமீபத்தில் சிங்கப்பூர் ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்தேன். இப்போது இங்கு பட்டத்தை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக கிடைத்த இந்த வெற்றி, எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது’ என்றார்.



    ஸ்ரீகாந்த், இத்தகைய சூப்பர் சீரிஸ் பட்டத்தை சுவைப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2014-ம் ஆண்டில் சீனா சூப்பர் சீரிஸ், 2015-ம் ஆண்டில் இந்திய சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றுள்ளார்.

    அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பேட்மிண்டன் சம்மேளனம், ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
    Next Story
    ×