என் மலர்
புதுச்சேரி
- காரின் ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தபோதும் அந்த காவலர்கள் தேவையற்ற சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.
- இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரத்திற்கு அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம். இவரது நண்பர்கள் சிலர் புதுவை கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். இவர்கள் காரில் புதுவையை சுற்றி பார்த்து விட்டு ரிசார்டுக்கு திரும்பினர்.
அப்போது கிருமாம்பாக்கம் போலீசார் அவர்களின் காரை மடக்கி விசாரித்துள்ளனர். இதில் காரின் ஆவணங்கள் அனைத்தையும் காண்பித்தபோதும் அந்த காவலர்கள் தேவையற்ற சில ஆவணங்களை கேட்டுள்ளனர்.
அதோடு வலுக்கட்டாயமாக அபராதம் கொடுக்க வேண்டும் எனக்கூறி தகராறு செய்து அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய ஏட்டுகள் ஞானமூர்த்தி, திவித்ரசன், நவீன் காந்த் மற்றும் போலீஸ்காரர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் அதிரடியாக ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி. சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.
- 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டதாக புகார்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன் பொது இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நெல்லித்தோப்பு சிக்னல் சந்திப்பு, திருவள்ளுவர் சாலை நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக கொசப்பாளையம் சிலம்பரசன் ரசிகர் மன்றம் சார்பில், பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகள் பசுபதி, அசோக் ராஜா, மற்றும் பாபு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் உள்ள கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2-ந் தேதி நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க வரும் வி.ஐ.பி.க்கள், அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்று 60-க்கும் மேற்பட்ட பேனர்கள் சாலை முழுதும் வைக்கப்பட்டிருந்தன.
இதைக்கண்ட பொதுப்பணித்துறை மத்திய கோட்ட சாலை பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், பேனர் வைத்தவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் பேனர் வைத்த மர்ம நபர்கள் மீது புதுச்சேரி திறந்தவெளி அழகு சீர்கெடுத்தல் பிரிவின் கீழ் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
- கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
- கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சமீப காலமாக உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நிகழ்வு தொடர் கதையாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் செயல்கள் நடந்து வருகிறது.
எனவே மாணவிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் எம்.பி.பி.எஸ். பயிற்சி மருத்துவ மாணவிகள் 2 பேருக்கு முதுநிலை மருத்துவ மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர். அதன் பேரில், கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மருத்துவ மாணவரை 6 மாதம் சஸ்பெண்டு செய்துள்ளது.
இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகருக்கு தொழில் வளர்ச்சி, வனம், வனத்துறை, கல்வி, அறிவியல் தொழில் நுட்பத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
அரசு செயலர் முத்தம்மாவுக்கு, திட்டம் மற்றும் ஆராய்ச்சி, போக்குவரத்து, மின்சாரம், குடிமைப்பொருள் வழங்கல்துறை, பொதுப்பணி, தகவல் தொழில்நுட்பம், ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
காரைக்கால் கலெக்டர் மணிகண்டன், புதுச்சேரி கவர்னரின் செயலராகவும், கூடுதலாக சுற்றுலா, மீன்வளத்துறை செயலராகவும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு செயலர் சுந்தரேசனுக்கு சமூகநலம், பிற்படுத்தப்பட்டோர்நலம், பொருளாதாரம், புள்ளியியல்துறை, இளைஞர் நலம் விளையாட்டுத்துறை, பாண்கேர் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசு செயலர் ஜெயந்த்குமார் ரேவுக்கு சுகாதாரத்துறை, குடும்பநலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு செயலர் நெடுஞ்செழியனுக்கு வேளாண், கால்நடைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வக்புவாரியம், கலை, பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு செயலர் கேசவனுக்கு பொது நிர்வாகம், நகர அமைப்பு குழுமம், வீட்டு வசதி, உள்ளாட்சி, தீயணைப்பு, செய்தி விளம்பரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன், நகர மேம்பாடு, டி.ஆர்.டி.ஏ., வருவாய் சிறப்பு செயலர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார். சோமசேகர அப்பாராவ் காரைக்கால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கவர்னர் உத்தரவின்படி தலைமை செயலர் சரத்சவுகான் பிறப்பித்துள்ளார்.
- ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் கொள்ளை அடித்துள்ளார்.
- சிவானந்தம் 2 வீடுகளிலும் கொள்ளை அடித்ததை ஒப்பு கொண்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலில் போலீசார் எல்லைப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பைக்கில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரனாக பேசினார். இதனால் அவரை கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று உரிய முறையில் விசாரித்தனர். அப்போது அவர் பூம்புகாரை சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் (வயது 34) என தெரிய வந்தது.
தச்சுத்தொழில் செய்யும் சிவானந்தம் தன்னை அப்பாவி போல காட்டி கொண்டார். ஆனால் அவரது செல்போனை சோதனை செய்த போது கடந்த டிசம்பர் 10-ந் தேதி காரைக்கால் வந்துள்ளார். அதேபோல ஜனவரி 14-ந் தேதி மீண்டும் காரைக்காலுக்கு வந்துள்ளார்.
அதே நாளில் காரைக்காலில் 2 இடங்களில் 2 வீட்டை உடைத்து நகைகள் திருடு போய் இருந்தது. அவரது செல்போன் டவரும் அந்த வீட்டு அருகே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில் சிவானந்தம் 2 வீடுகளிலும் கொள்ளை அடித்ததை ஒப்பு கொண்டார். அங்கு திருடிய ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை உருக்கி தனது வீட்டு தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
தச்சு வேலை செய்யும் சிவானந்தம் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க வழி இல்லாத காரணத்தால் வீடுகளில் கொள்ளை அடித்துள்ளார்.
காரைக்காலை போல மயிலாடுதுறையில் 4 வீடுகளை உடைத்து நகை-பணத்தை அவர் கொள்ளை அடித்துள்ளார். மேலும் ஒரு கொலை வழக்கிலும் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பகலில் தச்சு வேலை செய்யும்போது வீடுகளை நோட்டமிடும் இவர் இரவில் மது குடித்து விட்டு அந்த வீடுகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சினிமா கதாநாயகனை போல பகலில் தச்சு தொழிலாளியாகவும், இரவில் வீடு புகும் கொள்ளையனாகவும் இரட்டை வேடங்களில் உலாவி வந்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த கோட்டுச்சேரி போலீசார் உருக்கிய நகைகளை மீட்டனர்.
- விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது.
- இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கல்வித்துறைக்கும் புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்தில் இயங்கும் சில தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்தும், வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை அளிக்கும் தினங்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக கவனத்துக்கு வந்துள்ளது. இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
எனவே பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதன்படி எந்த ஒரு தனியார் பள்ளியும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் மற்றும் பிற திறன் சார்ந்த வகுப்புகளை நடத்தக்கூடாது. அதேபோல் வார விடுமுறை, பொதுவிடுமுறை, அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களிலும் இத்தகைய வகுப்புகளை நடத்தக்கூடாது.
இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். இதில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டல்.
- போலீசார் வெடிமருத்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பொறையூர்பேட் புதுநகரை சேர்ந்தவர் குருபஞ்சராவ். இவரது மகன் யோகேஷ் என்ற யோகரத்தினம் (வயது 21).
இவர் மீது கஞ்சா, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முகேஷிற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.
சில வாரங்களுக்கு முன், கிராத்திற்கு செல்லும் சாலையில் முகேஷ் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த யோகரத்தினத்தை நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த யோகரத்தினம் பட்டாசு வாங்கி வந்து யூடியூப் சேனல் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தார். அதனை தனது எதிரி ரவுடி முகேஷ், வீட்டின் சுவற்றில் வீசி வெடிக்க செய்து பரிசோதித்தார். பின்னர் தலைமறைவானார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் யோகரத்தினத்தை தேடி வந்தனர். பொறையூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த யோகரத்தினத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.
யோகரத்தினத்திடம் இருந்து வெடிமருந்து, நூல் உருண்டை, கூழாங்கல், செல்போன் உட்பட பொருட்களை பறிமுதல் செய்து, வில்லியனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். யோகரத்தினம் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 10-ந்தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
- விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் கோடியக்கரை அருகே விசைப்படகில் மீன் பிடித்த காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
துப்பாக்கி சூட்டில் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த செந்தமிழ் மற்றும் நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த பாபு என்ற 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை 10-ந்தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ பஞ்சாயத்து மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புதுச்சேரி வந்து முதலமைச்சர் ரங்கசாமி, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்தனர்.
அப்போது மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ரங்கசாமி காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார்.
- துப்பாக்கி முனையில் படகில் இருந்த11 மீனவர்கள், கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் என 13 பேரையும் கைது செய்தனர்.
- காயமடைந்த பாபு, செந்தமிழ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் புதுவை, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகளை பிடித்துச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தவேல். அவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த 26-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். இதனால் மீனவர்கள் செய்வதறியாமல் திகைத்த நிலையில் நடுக்கடலில் வைத்து வானத்தை நோக்கியும், படகு மீதும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் பயந்து போன மீனவர்கள் பாபு, செந்தமிழ் ஆகியோர் கடலுக்குள் குதித்து தப்ப முயன்றனர். இதில் அவர்கள் இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து துப்பாக்கி முனையில் படகில் இருந்த11 மீனவர்கள், கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் என 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவர்களில் காயமடைந்த பாபு, செந்தமிழ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சி காட்சிகள் வெளியானது.
மீனவர்களின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
- மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
- துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- புதுச்சேரியை சேர்ந்த 20 படகுகள் இலங்கையில் உள்ளன.
புதுச்சேரி:
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இலங்கை கடற்படை 13 பேரை சிறை பிடித்துள்ளது. இதில் 2 மீனவர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காரைக்காலை சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 13 பேர் இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் கிளிஞ்சல் மேடு செந்தமிழன், நாகை நம்பியார் நகர் பாபு ஆகியோர் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு நமது நாட்டுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுத உள்ளார். தொலைபேசி மூலமும் பேசி அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பார்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சை அளிக்க புதுச்சேரிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பும் புரிதலும் இருக்க வேண்டும்.
கடலில் எல்லை எங்குள்ளது என்று யாருக்கும் தெரியாது. மீன் வளர்ந்தது மேட் இன் இந்தியாவா? மேட் இன் இலங்கையா? என கூற முடியாது. கடலில் மீன் என்பது பொதுவான விஷயம்.
இதனால் இலங்கை அரசு இலங்கை ராணுவம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நாமும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.
நாமும் புரிதலோடு நடந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுப்பதும் புரிதலும் இலங்கை ராணுவத்திடம் இல்லை. அவசரப்படுகிறார்கள்.
புதுச்சேரியை சேர்ந்த 20 படகுகள் இலங்கையில் உள்ளன. அவற்றையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும்
தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை மீனவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் இந்த முறை துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க. டெல்லி தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
- மாத இறுதிக்குள் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு பா.ஜ.க.வுக்கு புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகம், புதுச்சேரியில் தொகுதி, மாவட்டம், அணி அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் புதுச்சேரி, தமிழகத்தில் மாநில தலைவரை தேர்வு செய்வதில் 2 மாநிலங்களிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இன்னும் ஓராண்டில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நிலையில் தமிழகம், புதுச்சேரி உள்ளது. இதனால் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலான ஒரு மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைமை உறுதியாக உள்ளது.
புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்தும் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கிய அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை சந்தித்தார். இது வரும் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமோ? என பா.ஜ.க. தலைமை அச்சப்படுகிறது.
இதனால் கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க. டெல்லி தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நமச்சிவாயம் பொருத்தமாக இருப்பார். ஆனால் அவர் அமைச்சர் பதவியோடு, தலைவர் பதவியை அளித்தால் ஏற்க தயார் என தலைமைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க.வை பொறுத்த வரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதனால் விதியை வளைத்து மாநில தலைவர் பதவி வழங்க கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. அதேநேரத்தில் புதுச்சேரியில் தற்போதைய தலைவரான செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 20-ந் தேதியே புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை. அனைவரும் ஏற்கும்படியும், தேர்தலை எதிர்கொள்ளும்படியும் ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்பதால் இந்த இழுபறி நீடிப்பதாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் மாத இறுதிக்குள் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.






