என் மலர்
புதுச்சேரி

முத்ரா திட்டத்தில் பயனடைந்தவர்கள் கூறிய உருக்கமான பேச்சால் கண் கலங்கிய கவர்னர்
- முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார்.
புதுச்சேரி:
பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி இந்தியன் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்தது. விழாவிற்கு கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது பயனாளிகள் முத்ரா வங்கிக் கடன் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வந்ததாக கூறினர். மேலும் குறைந்த வட்டியில் தொழில் முன்னேற்ற ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டதுடன், தற்போது மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி உதவி வருவதையும் உருக்கமாக எடுத்துக் கூறினர். முத்ரா கடன் திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன் பேசும்போது முத்ரா கடன் திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது ரூ.40 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 52 கோடி பேர் பயனடைந்து இருக்கிறார். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த திட்டம் அதன் இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய படி கவர்னர் கைலாஷ்நாதன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் கண் கண்ணாடியை கழற்றி விட்டு கண்ணீரை துடைத்தார்.
தொடர்ந்து புதிய பயனாளிகளுக்கு முத்ரா கடன் வழங்குவதற்கான ஆணைகளை கவர்னர் வழங்கினார்.