என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • நேரு எம்.எல்.ஏ.வை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்வதாக உத்தரவு.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாத சபாநாயகருக்கு சபையை நடத்த தகுதியில்லை என ஆவேசமாக கூறினார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தொடர்ந்து சபை நிகழ்வுகளை நடத்தினார். இதையடுத்து சபாநாயகர் இருக்கை முன்பு சென்று தரையில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது சட்ட விரோதம், ஜனநாயக விரோதம், அவமானகரமான செயல் எனக்கூறி கோஷம் எழுப்பினார்.

    இதனிடையே சபைக்குள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் நுழைந்தனர். அப்போது தர்ணா செய்த நேரு எம்.எல்.ஏ. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரை அழைத்தார்.

    அவர்களும் நேரு எம்.எல்.ஏ.வுடன் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இருப்பினும் சபாநாயகர் தொடர்ந்து சபை நிகழ்வுகளை நடத்தினார்.

    இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சிவாவை பேச சபாநாயகர் அழைத்தார். அப்போது நேரு எம்.எல்.ஏ. சட்டமன்றங்களில் எதிர்க்கட்சி தலைவர்தான் சக உறுப்பினர்களின் உரிமைகளை பெற்று தருகின்றனர் என பேசினார்.

    இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம், அவையை தொடர்ந்து நடத்த ஏதாவது ஒரு முடிவு எடுங்கள். எங்கள் உரிமைகள் மீறப்படுகிறது. சொந்த பிரச்சினைகளுக்காக உங்களுக்கு ஆதரவாக செயல்பட முடியாது என ஆவேசமாக பேசினார்.

    அப்போது நேரு எம்.எல்.ஏ. தொடர்ந்து கோஷம் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரும் பேசினர்.

    இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் நேரு எம்.எல்.ஏ.வை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்வதாகவும், அவரை அவையிலிருந்து வெளியேற்றும்படியும் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து சபை காவலர்கள் நேரு எம்.எல்.ஏ.வை வெளியேற்றினர். மற்ற 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் தங்கள் இருக்கைக்கு வந்து அமர்ந்தனர்.

    புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்ட மன்ற விதிகள், மரபுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக கூறி அவர் மீது நேரு எம்.எல்.ஏ. நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபை செயலரிடம் அளித்திருந்தார்.

    அவரை தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரும் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை அளித்திருந்தனர்.

    இந்த தீர்மானத்தை சட்ட விதிகளின்படி விவாதத்திற்கு அனுமதிப்பேன் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியிருந்தார். ஆனால் இன்றைய சட்ட மன்ற அலுவல் பட்டியலில் இது இடம்பெறவில்லை. இதை கண்டித்தே சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • மத்தியிலும், புதுவையிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது.
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறுக்கிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து சபையின் அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு பேசியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து புதுவையை வஞ்சித்து வருகிறது. நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு கூடுதல் நிதி வழங்கவில்லை. ரெயில்வே, துறைமுக விரிவாக்க திட்டங்கள் இடம்பெறவில்லை. நாட்டிலேயே ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரிதான் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்தியிலும், புதுவையிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது.

    தமிழகத்தை போல மாற்று ஆட்சி இருந்தாலும், வஞ்சிப்பதில் அர்த்தம் இருக்கும். இதனால் மத்திய அரசு புதுவையை வஞ்சிப்பதை கண்டித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறுக்கிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது என்றார்.

    அமைச்சர் நமச்சிவாயம்:- மத்திய அரசு புதுவைக்கு தேவையான நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்போடுதான் புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    அவருக்கு ஆதரவாக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு, வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், சீனிவாச அசோக் ஆகியோர் பேசினர். இதற்கு எதிராக தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்

    இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர், மத்திய அரசு பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம், இன்று உங்கள் நாடகம் என்ன? வெளியில் ஒன்று செய்வீர்கள், உள்ளே ஒன்று செய்வீர்கள், முதலில் மண்ணை நேசியுங்கள், பின்னர் கட்சியை நேசியுங்கள் என்றார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகள் மத்திய அரசு நிதி தரவில்லை என குற்றம்சாட்டி பேசுகின்றனர். கடந்த ஆட்சியில் ஒரே ஒரு செங்கலைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை என கூறினர். 5 ரூபாய்கூட மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை என உள்துறை அமைச்சராக இருந்தவரே கூறியுள்ளார்.

    தற்போது எத்தனை கோடியில் பணிகள் நடக்கிறது? காலாப்பட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடிக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எந்த திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை? கொண்டு வரவில்லை? என சுட்டிக்காட்டுங்கள்.

    இலவச அரிசி வேண்டும் என மக்கள் கேட்டனர். ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்கியுள்ளோம். புயல் நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5 ஆயிரம், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கியுள்ளோம். மத்திய அரசு தேவையான நிதியை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு வகைகளில் கூடுதல் நிதி பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்காமல் எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக.தியாகராஜன், ரமேஷ்பரம்பத், வைத்தியநாதன் ஆகியோர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
    • பட்ஜெட் மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.

    ஆகஸ்ட் 14-ந் தேதி கூட்டத்தொடர் முடிந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபை விதிப்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சபை கூட்டப்பட வேண்டும். அதன்படி வருகிற 14-ந் தேதிக்குள் சபை கூட்டப்பட வேண்டும்.

    இதன்படி புதுச்சேரி சட்டசபை நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சபையில் ஒப்புதல் பெறப்படுகிறது.

    மேலும் தணிக்கை அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. புதுச்சேரி பட்ஜெட் தொகையை இறுதி செய்யும் பணியில் நிதித்துறை உட்பட அரசு துறைகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் அனுமதிக்காக கோப்பு டெல்லிக்கு அனுப்பப்படும்.

    மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மீண்டும் வருகிற மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்படும். அப்போது நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார்.

    • புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி முருகன் புதுச்சேரி வந்தார். மத்திய நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நிருபர்களிடம் விளக்கினார்.

    இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, பா.ஜ.க. மாநிலத்தலைவர் செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமார் ஆகியோரைச் சந்தித்து புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், பா.ஜ.க. வளர்ச்சி குறித்தும் கேட்டறிந்தார்.

    இதையடுத்து புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    அப்போது புதுச்சேரிக்கான திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க தயாராக இருப்பது குறித்து மத்திய இணை மந்திரி முருகன் கூறினார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி பெற பிரதமர் மோடியை சந்திக்க மார்ச் மாதம் டெல்லி செல்ல திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மாநில வளர்ச்சி தொடர்பாக பிரதமரை வந்து சந்திக்க வேண்டும் என மத்திய இணை மந்திரி முருகனும் கேட்டுக் கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து ராஜ் நிவாஸ் சென்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவர்னர் கைலாஷ்நாதனும் வருகிற மார்ச் மாதம் பிரதமரை சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநிலத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழலில் புதுச்சேரிக்கு அளித்த வாக்குறுதிகள் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என ஆளும் பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

    அதன்படி சிறப்பு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பிரதமரை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.

    • வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாறி இருப்பதாக கூறப்படுகிறது.
    • கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார்.

    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பெயரில் மீண்டும் போலி வெப்சைட் உலா வருவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்ப்பாரண்னேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தர முடியாத பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெப்சைட்டில் சென்று, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தேவையான அர்ச்சனை, அபிஷேகங்களை செய்து பிரசாதங்களை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் வெப்சைட் போலவே போலியான வெப்சைட் ஒன்று உருவானதையடுத்து, காரைக்கால் மாவட்ட கிரைம் போலீசார் கண்டுபிடித்து அதனை சரி செய்தனர். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு மீண்டும் கோவில் பெயரில் போலியான வெப்சைட் உலா வருவதாக கூறப்படுகிறது. அதில் பக்தர்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    இந்த வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாறி இருப்பதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிநாடான ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாட்டை சேர்ந்த பக்தர்களும் கோடிக்கணக்கில் பணம் கட்டி ஏமாந்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் உள்ளூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அதிகாரிகளும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.

    குறிப்பாக சனிக்கிழமை நடைபெறும் ஆசூஷா அர்ச்சனைக்கு இந்தியர்களுக்கு ரூ. 2750 மற்றும் வெளிநாட்டினருக்கு 82 டாலர்களும் வசூல் செய்தது தெரிய வந்தது. இதே போல் மாதந்தோறும் நடைபெறும் சவர்சனம் அர்ச்சனைக்கு இந்தியர்களுக்கு ரூ.5001 மற்றும் வெளிநாட்டினருக்கு 151 டாலர்களும் வசூல் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலி வெப்சைட்டில் ஏமாந்த பக்தர்கள் அல்லது கோவில் நிர்வாகம் போலீசாரிடம் புகார் கொடுக்கும் பட்சத்தில் ஏமாந்தவர்கள் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் போலி வெப்சைட் உலா வருவது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்க தடை விதித்தனர்.
    • சாராயக் கடை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துதர வலியுறுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 110 சாராயக்கடை, 92 கள்ளுக்கடைகள் உள்ளன.

    புதுச்சேரி அரசு ஆரியப்பாளையம் சாராய வடிசாலையில் இருந்து சாராய கடைகளுக்கு சாராயம் சப்ளை செய்யப்படுகிறது. சாராயக்கடைக்கு தேவையான மொத்த சாராயத்தில், 180 மி.லி., கண்ணாடி பாட்டிலில் 50 சதவீதமும், கேன்களில் 50 சதவீத சாராயம் வழங்கப்படுகிறது.

    சாராய கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் கவரில் சாராயம் பார்சலில் கட்டி கொடுப்பர். இதுபோல் ஒரு நாளைக்கு மொத்தம் 25 ஆயிரம் லிட்டர் சாராயம் விற்பனையாகிறது.

    புதுச்சேரியில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவான மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக், ஸ்ட்ரா, டீ கப், ஸ்பூன் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

    சாராயம் குடித்து வீசும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மது கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆறு மற்றும் குளகரைகளில் குவிந்து ஆடுமாடுகள் மேய்வதும், நீர் நிலைகளில் மிதப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி சாராயத்தை பாக்கெட்டில் அடைத்து விற்க தடை விதித்தனர். இதையடுத்து சாராயக் கடை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்துதர வலியுறுத்தினர்.

    அதன்படி பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக சோள தட்டை மூலம் தயாரித்த எளிதில் மக்கக் கூடிய கவர்கள் மற்றும் கப்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதில் சாராயம் ஊற்றினால் கசியாது மேலும் எளிதிலும் உடையாது. மண்ணில் வீசினால் 4 நாட்களில் மக்கி விடும். கால்நடைகள் சாப்பிட்டாலும் பாதிப்பு வராது. இத்துடன், 3 கிலோ பொருட்களை தாங்கும் பை ஒன்றும், பிளாஸ்டி கப்பிற்கு மாற்றாக சோள தட்டையில் தயாரிக்கப்பட்ட கப்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு சாராயக்கடைகள் மற்றும் மது கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    • குடிபோதையில் சத்தியசீலனுக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் அப்பகுதியை சேர்ந்த சிலருடன் ஒதுக்குபுறமான இடத்தில் மது குடித்து கொண்டிருந்தார்.

    அப்போது குடிபோதையில் சத்தியசீலனுக்கும் அந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதனையறிந்த சத்தியசீலனின் தாய் உஷா சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது அவரையும் அந்த கும்பல் தாக்கியது. இந்த மோதலில் சத்தியசீலனுக்கும் அவரது தாய் உஷாவுக்கும் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சத்தியசீலனின் நண்பர்கள் அவர்களை காலாப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு நர்சுகள் மற்றும் ஊழியர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது குடிபோதையில் இருந்த சத்தியசீலனின் நண்பர்கள் நர்சுகளிடமும், ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் அவர்கள் ஆஸ்பத்திரி முன் பக்க கண்ணாடிகளையும், பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனை கண்டு நர்சுகள், ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    தகவல் அறிந்த காலாப்பட்டு போலீசார் 2 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களையும் அந்த கும்பல் தாக்க முயற்சித்தது. இதையடுத்து கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

    ரகளையில் ஈடுபட்டவர் ளை சமாதானம் செய்து காயமடைந்த சத்தியசீலன் மற்றும் அவரது தாய் உஷா ஆகியோரை மேல் சிகிச்சைக்காக அனுமதிக்க புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்சில் சத்தியசீலனின் நண்பர்களும் ஏறிக் கொண்டனர்.

    ஆம்புலன்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருக்கும் போது அவர்கள் டிரைவரிடம் வாக்குவாதம் செய்து ஆம்புலன்சை நிறுத்தும்படி தகராறு செய்தனர்.

    இதையடுத்து டிரைவர் ஆம்புலன்சை நிறுத்தினார். உடனே சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர்கள் ஆம்புலன்சில் இருந்து இறங்கி தப்பியோடி விட்டனர்.

    பின்னர் காயமடைந்த உஷா மட்டும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தினால் காலாப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.
    • இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆண்டு விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி பேசினார். அப்போது வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை அரசியல் ரீதியாக உருவாக்கியுள்ளது.

    தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் பா.ஜ.க. விரும்புகிறது.

    அதே நேரத்தில் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பு இந்த கூட்டணியை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

    புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, மயிலாடுதுறை ஆகிய தமிழக பகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் அவர் சார்ந்த சமூகத்தினரும் அதிகளவில் உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது த.வெ.க.வைத் தொடங்கி ஓராண்டு நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் நடிகர் விஜயை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். முதல்-அமைச்சர் என்ற புரோட்டா காலை காட்டிக்கொள்ளாமல் தனக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் ரங்கசாமி நேரில் சென்று விஜயை சந்தித்தார்.

    அதன் பிறகு நடிகர் விஜய், முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.

    இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போது அதற்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து கட்சி முதல் மாநாட்டின் போதும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை விஜய் அழைப்பார் என்ற பேச்சு எழுந்தது. இதனால் ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.

    இந்த எண்ணத்தில்தான் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர்.

    இந்த நிலையில் தனது கொள்கை விரோதியாக தி.மு.க., பா.ஜ.க.வை த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் 2026 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.

    • கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
    • காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்.

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவையில் கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகிய ரங்கசாமி, பிப்ரவரி 7-ந் தேதி என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா இன்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    முதலமைச்சர் ரங்கசாமி அலுவலக வாசலில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி கட்சி அலுவலகத்தில் உள்ள சாமி படங்களுக்கு பூஜை செய்தார்.

    தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    கடந்த ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால் அரசு பணிகளே நடைபெறாத சூழ்நிலை இருந்தது. எமது அரசு பொறுப்பேற்றது முதல் காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். அரசின் அனைத்து துறையிலும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மீதமுள்ள காலிபணியிடங்களையும் நிரப்புவோம்.

    ஆளும்கட்சி, எதிர்கட்சி என எம்.எல்.ஏ.க்களில் வேறுபாடும், வித்தியாசமும் பார்க்காமல், மாநில வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்.

    கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது 11 தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலும் கோரிக்கை இருந்து வருகிறது. தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும்.

    காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செயல்பட வேண்டும். மக்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள். அரசிடமும் தெரிவியுங்கள், அரசு அதை நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது.
    • மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்லைக்கழகத்தின் கீழ் தாகூர் கலைக்கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    தேசிய கல்விக் கொள்கைபடி இந்த கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கேள்வித்தாள்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் மொழிப்பாடம் (தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு) தேர்வு நடந்தது. இதற்காக மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்வு எழுத வந்தனர்.

    இந்த நிலையில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு முதல் செமஸ்டருக்கான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இல்லாமல் 2-ம் ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கேள்வித்தாள் மாறி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர்கள் தேர்வு அறையில் உள்ள பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகம் மூலமாக பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் முதல் நாள் தேர்வை ரத்து செய்வதாகவும். இந்த தேர்வு தேதி குறிப்பிட்டு மற்றொரு நாள் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    முதல் நாளில் தேர்வு எழுத வந்த புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    • லாரி டிரைவரான முகமது ஷரீப்பும் அவருடன் சேர்ந்தவர்களும் ரூ.465 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
    • மோசடி கும்பலிடம் இருந்து ரூ.331 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம். குறைந்த வட்டியில் கடன் என பல்வேறு விதமான ஆசைகளை காட்டி கோடிக்கணக்கில் மோசடிகள் நடந்து வருகின்றன.

    இந்த ஆன்லைன் மோசடி கும்பலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள மோசடி கும்பலுக்கும் தொடர்புகள் உள்ளது.

    இதனிடையே கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் அந்த தொகையை கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களுடைய படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ரூ. பல கோடி மோசடிகள் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் (வயது 42) என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். லாரி டிரைவரான முகமது ஷரீப்பும் அவருடன் சேர்ந்தவர்களும் ரூ.465 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக மத்திய அமலாக்கத்துறையும் புதுவை சைபர் கிரைம் போலீசாரிடம் மோசடி நபர்களின் விவரங்களை பெற்று விசாரணையை தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து மோசடி கும்பலிடம் இருந்து ரூ.331 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    கைதான முகமது ஷரீப்பிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் இன்னும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த மிகப்பெரிய டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது.

    அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகள், அதன் மூலம் வெளிநாட்டிற்கு சென்றவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க சைபர் கிரைம் போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

    • பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது.
    • புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.

    பாகூர்:

    புதுச்சேரி எல்லைப்பகுதியான முள்ளோடையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்தநிலையில் பள்ளியின் இ-மெயிலுக்கு மர்ம மெயில் ஒன்று வந்தது. அதில் நீதிமன்றத்தால் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும், இல்லை யென்றால் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இதை பார்த்து பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மெயில் காலையில் வந்திருந்த நிலையில், மாலை 5 மணிக்கே பார்க்கப்பட்டது.

    இது குறித்து உடனடியாக கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சஜித், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் தகவல் தெரிவித்து புதுவையில் இருந்து வெடிகுண்டு செயலழப்பு நிபுணர்களும் வந்தனர்.

    அவர்கள் பள்ளியில் வெடி குண்டு ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியு டன் சோதனை செய்தனர். பள்ளி வளாகம், வகுப்பறை, விளையாட்டு மைதானம், ஆசிரியர்கள் ஓய்வறை என அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்க வில்லை. வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது சோதனையின் முடி வில் தெரியவந்தது.

    பள்ளிக்கு வந்த இ-மெயில் முகவரியை வைத்து, மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×