என் மலர்
புதுச்சேரி
- நரிக்குறவர்கள் கலெக்டருக்கு பாசி மணி மாலைகளை அணிவித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
- சாலையோரத்தில் வசிப்பதால் பல்வேறு இன்னல்களை, விபத்துகளை மக்கள் சந்திக்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி அருகே வில்லியனூர் மூர்த்தி நகரில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாமையொட்டி கலெக்டரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம். ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த வரவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் கலெக்டரை சந்தித்து நரிக்குறவர்கள் வந்திருப்பதை தெரிவித்தனர். கலெக்டரும் அவர்களை உள்ளே அனுமதிக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து நரிக்குறவ குடும்பத்தினர் கலெக்டர் அலுவலக வரவேற்பு அறைக்கு வந்தனர்.
கலெக்டர் குலோத்துங்கன் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். அப்போது நரிக்குறவர்கள் கலெக்டருக்கு பாசிமணி மாலைகளை அணிவித்து தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
வில்லியனுார் மூர்த்தி நகர் மெயின்ரோடு, கொம்பாக்கம், திருக்காஞ்சி மெயின்ரோடு பகுதியில் 70 ஆண்டுக்கும் மேலாக சாலை யோரங்களில் 80 குடும்பத்தை சேர்ந்த குருவிக்கார மக்கள் தார்பாய் அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.
சாலையோரத்தில் வசிப்பதால் பல்வேறு இன்னல்களை, விபத்துகளை மக்கள் சந்திக்கின்றனர். எனவே அரசு குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டி ருந்தனர்.
மனுவை பெற்ற கலெக்டர், அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
- டிரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை புதுச்சேரி நகராட்சி தொடங்க உள்ளது.
- ஒரு நாளைக்கு மொத்தமாக 15 ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்கும் பணி நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொசுக்கள் அதிகரிப்பால் மக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பகல் நேரங்களிலும் கொசு தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.
அதையொட்டி புதுச்சேரி நகராட்சி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கி உள்ளது. புதுச்சேரி நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளுக்கு கொசு மருந்து தெளிப்பான் மிஷின்கள் 30, புகை மருந்து அடிக்கும் 5 மிஷின்கள் புதிதாக வாங்கப்பட்டு, நகராட்சி ஊழியர்களுடன், மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியின் நகர பகுதியான முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை ஆகிய 5 தொகுதிகளில் செல்லும் பிரதான பெரிய வாய்க்கால்களில் வாடகை 'டிரோன்' மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை புதுச்சேரி நகராட்சி தொடங்க உள்ளது.
இதற்காக விவசாய நிலங்களில் பூச்சி மருந்து அடிக்கும் டிரோனை புதுச்சேரி நகராட்சி வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த டிரோனில் 20 நிமிடத்தில் ஒரு ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்க முடியும். ஒரு நாளைக்கு மொத்தமாக 15 ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்கும் பணி நடைபெற உள்ளது.
- ஓட்டலில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் திருபுவனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனையில் 4 முனை சந்திப்பில் தனியார் வணிக வளாகம் உள்ளது.
இந்த வணிக வளாகத்தில் திருபுவனை பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். வேலைக்கு ஆட்கள் வராததால் ஓட்டல் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஓட்டல் கடை மீது திடீரென நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றனர். இதனால் அங்கு பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதியில் இருந்த கடைக்காரர்கள், பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.
பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது வெடிகுண்டு வீச்சில் சேதமான ஓட்டல் பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் செந்தில் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஓட்டல் உரிமையாளர் செந்திலின் மகன் ராகுல் தனது நண்பரின் காதலுக்கு உதவி செய்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ராகுலும் அவரது நண்பரும் பிரிந்து விட்டனர்.
அதுமுதல் ராகுல் மீது அவரது நண்பர் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த முன்விரோதம் காரணமாக ஓட்டல் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக ஓட்டல் மீது வெடிகுண்டு வீசிய நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஓட்டலில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் திருபுவனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- கொலை நடந்த இடத்தில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
மதகடிப்பட்டு:
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது45) இவரது மனைவி உமா (42) இவர்களுக்கு மனோ (23) என்ற மகனும், வினோதினி (21) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
மணிகண்டனும் உமாவும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இதற்கிடையே உமாவுக்கு சிலருடன் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மணிகண்டன் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் உமா அவர்களுடன் பழகுவதை கைவிடவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை செங்கல் சூளையில் வேலை முடிந்து கணவன்-மனைவி இருவரும் வீடு திரும்பினர். பின்னர் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். மனோவும் வினோதினியும் ஒரு அறையில் தூங்கினர்.
மணிகண்டனும் அவரது மனைவி உமாவும் வீட்டு வராண்டாவில் தூங்கினர். அப்போது மணிகண்டன் மனைவியிடம் நமக்கு கல்லூரியில் படிக்கும் மகன்-மகள் உள்ளனர் மற்ற ஆண்களுடன் பழகுவது தெரிந்தால் அவர்களுக்கு அவமானமாகிவிடும் எனவே கைவிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உமா தனியாக படுத்து தூங்கினார்.
மனைவி தனது சொல்லை கேட்காததால் ஆத்திரம் தீராத மணிகண்டன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த உமாவின் தலையில் அம்மிக்கல்லை ஓங்கி போட்டார். இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உமா இறந்தார்.
இதையடுத்து மணிகண்டன் கண்டமங்கலம் போலீஸ் நிலையம் சென்று அங்கு நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடை ஊழியர் பிரதீப் நகையை திருடி சென்றது பதிவாகி இருந்தது.
- பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி குயவர்பாளையம் சுந்தர மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது82). இவர் வீட்டில் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.
சமீபத்தில் இவர்கள் புதிதாக வாங்கிய வாஷிங் மெஷின் திடீரென பழுதானது. உடனே கோதண்டபாணி வாஷிங் மெஷின் வாங்கிய கடைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
உடனடியாக அந்த கடையில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் முத்தியால்பேட்டை பொன்னியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரதீப் (28) அனுப்பி வைக்கப்பட்டார். வாஷிங் மெஷினை பழுது பார்த்த பிரதீப் பழுது நீக்கி விட்டதாக கோதண்ட பாணியிடம் தெரிவித்து விட்டு அந்த வீட்டில் இருந்து வேக வேகமாக புறப்பட்டு சென்றார்.
அவர் சென்ற பின் பூஜை அறையில் வைத்திருந்த 3 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனை கண்ட கோதண்டபாணி அதிர்ச்சியடைந்தார். கடை ஊழியர் பிரதீப் நகையை திருடி சென்றிருக்கலாம் என கோதண்டபாணி சந்தேகமடைந்தார்.
இது குறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கடை ஊழியர் பிரதீப் நகையை திருடி சென்றது பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் பிரதீப்பை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை திருடி சென்றதை பிரதீப் ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.
- 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவின் இறுதியில் டி.வி. நகர், தங்கூர் தோட்டம் உள்ள பகுதியில் பாழடைந்த வீடும், கட்டிடமும் உள்ளது.
இங்கு அரிவாளால் வெட்டப்பட்டு பிரபல தாதா தெஸ்தான் மகன் ரஷி, தேவா ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களுக்கு அருகில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆதி என்பவரை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த பாழடைந்த வீடு, ரவுடி சத்யா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரை தேடிய போது அவரும் கூட்டாளிகள் சிலரும் தலைமறைவானது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவில் சத்யா மற்றும் 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்களை கத்தி முனையில் கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
ரவுடி சத்யாவுக்கு எதிர் கோஷ்டியான அஸ்வின், விக்கி கோஷ்டியில் தெஸ்தான் மகன் ரஷி செயல்பட்டு வந்துள்ளார். இந்த 2 ரவுடி கோஷ்டிகளும் ஒருவரை ஒருவர் பழி தீர்க்க காத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு சத்யா தனது நண்பர்கள் சிலருடன் கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது ரஷி, தேவா, ஆதி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். அவர்களை பார்த்த சத்யா மோட்டார் சைக்கிளை நிறுத்தி என்னை கண்காணிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே ஆட்டுப் பட்டியை சேர்ந்த சிலரை பொருட்களுடன் வரும்படி சத்யா அழைத்தார். அவர்களும் மோட்டார் சைக்கிளில் அரிவாள், கத்தியுடன் அங்கு வந்தனர். அவர்கள் ரஷி உட்பட 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளில் நடுவில் அமர வைத்து கடத்தி சென்றனர்.
நேராக ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அவர்களை கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களை சித்ரவதை செய்து அரிவாளால் முகத்தை சிதைத்து வெட்டி கொலை செய்துள்ளனர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நள்ளிரவில் டி.வி. நகர், ரெயின்போநகர் பகுதியில் அங்கும் இங்கும் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் செல்வது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள், அரிவாள் ஆகியவற்றை கைப்பற்றும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
- பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர்.
புதுச்சேரியில் தவளக்குப்பம் அருகே, தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, அதே பள்ளியில் 12ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி செல்ல மாட்டேன் என சிறுமி அழுது அடம் பிடித்த நிலையில் பெற்றோர் பொறுமையாக விசாரித்த போது உண்மை அம்பலமாகியுள்ளது.
பிறகு, சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆசிரியர்களை காண்பித்தபோது சரியாக அடையாளம் காட்டியுள்ளார்.
இதைதொடர்ந்து, ஆசிரியர் மணிகண்டனுக்கு தர்ம அடி கொடுத்த சிறுமியின் பெற்றோர் போலீசில் ஒப்படைத்தனர். குழந்தை என்றும் பாராமல் பல நாட்களாக மணிகண்டன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது வழக்கு பதியவில்லை என்றும் அரசியல் தலையீட்டால் காவல்துறை மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டித்து மாணவியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது.
பள்ளிக்குள் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களை எல்லாம் ஆவேசமாக அடித்து நொறுக்கினர். இதற்கிடையே, புதுச்சேரி- கடலூர் சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் 5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- பாழடைந்த வீட்டில் இன்று காலை 2 பேர் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
- வெட்டுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர் மீட்பு.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு அமைந்துள்ள பகுதி டி.வி. நகரையொட்டியும் மற்றும் தாங்கூர் தோட்டம் பகுதிக்கும் செல்லும் வழியாகும்.

இந்த பாழடைந்த வீட்டில் இன்று காலை 2 பேர் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். அந்த வழியாக சென்ற பொது மக்கள் வாலிபர்களின் பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரிய கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பாழடைந்த வீட்டின் காம்பவுண்டு சுவரையொட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 2 பேர் இறந்து கிடந்தனர். மற்றொருவர் வெட்டுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். காயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வாலிபரும் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து கொலை செய்யப்பட்டவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலையான ஒருவர் ரிஷி என்பதும் மற்ற 2 பேர் அவனுடைய கூட்டாளிகளான திடீர் நகரை சேர்ந்த பன்னீர் தேவா, ஜெ.ஜெ. நகரை சேர்ந்த ஆதி என்பதும் தெரிய வந்தது.
ரிஷி உழவர்கரையை சேர்ந்த பிரபல தாதா தெஸ்தான் மகன் என்பது தெரியவந்தது. கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் டி.ஐ.ஜி. சத்யசுந்தரம் நேரில் வந்து பார்வையிட்டார். தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மோப்ப நாய் ரோஜர் வரவழைக்கப்பட்டது. அது கொலையான இடத்தில் இருந்து டி.வி. நகர் செல்லும் சந்து வழியாக சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தாதா தெஸ்தான் கடந்த 2008-ம் ஆண்டு உழவர்கரை ஜெ.ஜெ. நகர் வீட்டில் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இவரது மகன் ரிஷி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இதனால் இவர்களது நடமாட்டத்தை கண்காணித்த எதிர்தரப்பினர் நள்ளிரவில் ரிஷி நண்பர்களுடன் மது குடித்து கொண்டிருந்த போது திடீரென புகுந்து ரிஷி மற்றும் அவனது கூட்டாளிகளை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து பெரிய கடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை நகர பகுதியில் தாதாவின் மகன் உள்பட 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போக்குவரத்து போலீஸ் சார்பில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. குறிப்பாக ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர்.
இந்தநிலையில் விபத்து உயிரிழப்பை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி புதுவை அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதன் எதிரொலியாக புதுச்சேரியில் கடந்த மாதம் (ஜனவரி) 12-ந்தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. மேலும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் சார்பில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 12 முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை (ஒரு மாதம்) புதுச்சேரியில் உள்ள 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் (கிழக்கு, மேற்குவடக்கு, தெற்கு) நிலைய அதிகாரிகள் தலைமையில் முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.
அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்களிலும் சேர்த்து 10,592 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் இதுவரை ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- ரங்கசாமி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் ஆலோசனை பெறாமலேயே நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய பா.ஜ.க. அரசு நியமித்தது.
இதில் என்.ஆர். காங்கிரசுக்கு எந்த பிரதிநிதித்துவமும் அளிக்கப்படவில்லை. அன்று முதலே என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. இடையே உரசல் தொடர்ந்து வருகிறது.
அதிகார பதவிகளில் இல்லாத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்கு வாரிய பதவி வேண்டும் என கடந்த 4 ஆண்டாக கேட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளும், முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாரிய பதவி வழங்கும் படி வலியுறுத்தினர்.
ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி இதுவரை யாருக்கும் வாரிய பதவி வழங்கவில்லை. இது ரங்கசாமி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை. தொகுதியில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக்கூட முடியவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதங்கப்பட்டனர்.
தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.
நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பிறகு அதிருப்தி பா.ஜ.க., ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர். டெல்லியில் பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளை சந்தித்தும் இதுகுறித்து பேசினர்.
இதனிடையே புதுவை அரசு புதிதாக 8 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க ஒப்புதல் அளிக்க கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்றம் கூடியது. கூட்டத்துக்கு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாண சுந்தரம், ரிச்சர்டு, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், சீனிவாச அசோக் ஆகியோர் சட்டசபை படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பி தர்ணா போராட்டம் நடத்திய பின் சட்டசபை நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டணி ஆட்சியிலிருந்து கொண்டே அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தியிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.ஆர். காங்கிரசுடனான கூட்டணியை தொடர பா.ஜ.க. தலைமை விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தகைய சூழலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
- பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமாகி இருந்தது.
- அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவர்களுக்கு கை, கால் மற்றும் இடுப்பிலும் காயமடைந்தனர்.
பாகூர்:
புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6 வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் மற்றும் கழிப்பிட கட்டிடம் இருந்து வருகிறது.
இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வந்த நிலையில் தற்போது குறைந்த அளவிலேயே மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சுமார் 35 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இப்பள்ளி கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமாகி உள்ளது. அனைத்து வகுப்பறைகளும் மழை காலங்களில் தண்ணீர் கசிகிறது. மேலும் தளத்தின் காரைகள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அரசுக்கு பலமுறை ஒரு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தப் பள்ளியை தொடங்கிய காலத்தில் அப்போதிருந்த ஆசிரியர்கள், பொதுமக்கள் உதவியுடன் குடிநீருக்கும் மாணவர்கள் கை கழுவதற்கும் தொட்டி அமைக்கப்பட்டு குழாயும் இணைத்திருந்தனர்.
பல ஆண்டுகளாக இதை பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமாகி இருந்தது.
இதற்கிடையே அரசு மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் புதிதாக குடிநீருக்கும், கை கழுவதற்கும் மாற்று ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பழைய குடிநீர் தொட்டியை அகற்றப்படாமல் இருந்து உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பழைய குடிநீருக்காக போடப்பட்ட சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவர்களுக்கு கை, கால் மற்றும் இடுப்பிலும் காயமடைந்தனர். இதை கண்ட மற்ற மாணவர்கள் அலறிஅடித்துகொண்டு சிதறி ஓடினர்.
குடிநீர் தொட்டி கட்டிடம் இடிந்ததில் 4-ம் வகுப்பு படிக்கும் செந்தில்குமாரின் மகன் பவன்குமார் (வயது 8) செல்லக்கண்ணு மகன் பவின் (8), 5-ம் வகுப்பு படிக்கும் ரஜினியின் மகள் தேஷிதா (10) ஆகியோர் காயமடைந்தனர்.
இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு டாக்டர்கள் முதலுதவி செய்யப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து மாணவ - மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை அறிந்தவுடன் கல்வித்துறை வட்ட ஆய்வாளர் லிங்கசாமி சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது. தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் விபத்துக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
- நேரு எம்.எல்.ஏ.வை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்வதாக உத்தரவு.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.
அப்போது சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாத சபாநாயகருக்கு சபையை நடத்த தகுதியில்லை என ஆவேசமாக கூறினார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தொடர்ந்து சபை நிகழ்வுகளை நடத்தினார். இதையடுத்து சபாநாயகர் இருக்கை முன்பு சென்று தரையில் அமர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது சட்ட விரோதம், ஜனநாயக விரோதம், அவமானகரமான செயல் எனக்கூறி கோஷம் எழுப்பினார்.
இதனிடையே சபைக்குள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் நுழைந்தனர். அப்போது தர்ணா செய்த நேரு எம்.எல்.ஏ. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரை அழைத்தார்.
அவர்களும் நேரு எம்.எல்.ஏ.வுடன் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இருப்பினும் சபாநாயகர் தொடர்ந்து சபை நிகழ்வுகளை நடத்தினார்.
இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் சிவாவை பேச சபாநாயகர் அழைத்தார். அப்போது நேரு எம்.எல்.ஏ. சட்டமன்றங்களில் எதிர்க்கட்சி தலைவர்தான் சக உறுப்பினர்களின் உரிமைகளை பெற்று தருகின்றனர் என பேசினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம், அவையை தொடர்ந்து நடத்த ஏதாவது ஒரு முடிவு எடுங்கள். எங்கள் உரிமைகள் மீறப்படுகிறது. சொந்த பிரச்சினைகளுக்காக உங்களுக்கு ஆதரவாக செயல்பட முடியாது என ஆவேசமாக பேசினார்.
அப்போது நேரு எம்.எல்.ஏ. தொடர்ந்து கோஷம் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரும் பேசினர்.
இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்ட விதிகளுக்கு எதிராக செயல்படும் நேரு எம்.எல்.ஏ.வை கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்வதாகவும், அவரை அவையிலிருந்து வெளியேற்றும்படியும் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சபை காவலர்கள் நேரு எம்.எல்.ஏ.வை வெளியேற்றினர். மற்ற 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் தங்கள் இருக்கைக்கு வந்து அமர்ந்தனர்.
புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சட்ட மன்ற விதிகள், மரபுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக கூறி அவர் மீது நேரு எம்.எல்.ஏ. நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபை செயலரிடம் அளித்திருந்தார்.
அவரை தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோரும் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை அளித்திருந்தனர்.
இந்த தீர்மானத்தை சட்ட விதிகளின்படி விவாதத்திற்கு அனுமதிப்பேன் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியிருந்தார். ஆனால் இன்றைய சட்ட மன்ற அலுவல் பட்டியலில் இது இடம்பெறவில்லை. இதை கண்டித்தே சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.






