என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது
    X

    ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது

    • நாடு முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
    • வழக்கில் தொடர்புடைய 4 பேரை புதுவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன். இவரை 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.92 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் லாபத்தை சேர்த்து ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சி இருந்தது.

    அதை விற்று பணமாக தனது வங்கி கணக்குக்கு மாற்ற அசோகன் முயற்சித்த போது, இணையதள பக்கம் முடக்கப்பட்டது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் அசோகன் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கோவையில் தலைமை இடமாகக் கொண்டு சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உட்பட பிரபலங்கள் மூலம் 2021-ம் ஆண்டு பிரமாண்ட தொடக்க விழா நடந்துள்ளது. அடுத்த 3 மாதங்களுக்குப் பிறகு மகாபலிபுரம் சொகுசு ஓட்டலில் ஆஷ்பேவில் முதலீடு செய்த 100 நபர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடி வரவிலான கார்களின் முதலீடுகளுக்கு ஏற்ப பரிசாக வழங்கினர்.

    அடுத்த சில நாட்களில் மும்பை கப்பல் ஒன்றில் மிகப்பெரிய விழா ஏற்பாடு நடத்தி அதில் ஆயிரகணக்கான மக்கள் பங்கேற்க செய்து ஆஷ்பேவின் முதலீடு செய்ய நிதி திரட்டி உள்ளனர். ஆஷ்பேவில் முதலீடு செய்யும் பணத்துக்கு கிரிப்டோ கரன்சி என்ற பெயரில் டி.சி. எக்ஸ் காயின் கொடுத்து முதலீடு பணத்தை தங்களின் வங்கி கணக்குக்கு மாற்றி உள்ளனர்.

    ஆஷ்பே மூலம் பெற்ற டிசி எக்ஸ் காயின்களை விற்க முடியாமல் முதலீட்டாளர்கள் திணறிய போது ஆஷ்பே என்ற இணையதளம் பக்கம் திடீரென முடக்கப்பட்டது.

    பின்பு தொடர் விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த 10-க்கு மேற்பட்டோர் இந்த ஆஷ்பேவில் முதலீடு செய்து ரூ.3 1/2 கோடி வரை இழந்தது தெரிய வந்தது. இதுபோல் நாடு முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரை பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.

    இந்த வழக்கில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையிலான குழு கோயம்புத்தூர் சென்று அங்கு பதுங்கி இருந்த ஜெயின் மற்றும் அரவிந்த்குமார், கர்நாடகா மாநிலம் தும்கூரில் மறைந்திருந்த தாமோதரன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வழக்கில் மூளையாக செயல்பட்ட பாபு, நூர் முகமது, சந்தானம், நித்தியப்பன் உட்பட 5 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிர்வாக இயக்குனர் பாபு என்ற சையது உஸ்மானை கோவையில் புதுவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய 4 பேரை புதுவை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×