என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி கையெழுத்து இயக்கம்- ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள பேனாவில் கையெழுத்திட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி
- புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- பேனாவை வாங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி வித்தியாசமாக இருந்ததை பார்த்து, எந்த ஊர் பேனா? என கேட்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி சட்டசபையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மத்திய அரசால் வழங்கப்படவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்றால் மாநில அந்தஸ்து பெற வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசு நிகழ்ச்சிகளிலும் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் பொது நல அமைப்புகள் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 27-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு லட்சம் கையெழுத்துகளை பெற்று மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கான கையெழுத்து இயக்கத்தை சட்டசபையில் நேரு எம்.எல்.ஏ. தொடங்கினார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் முதல் கையெழுத்து பெற பொதுநல அமைப்பினருடன் சட்டசபையில் வந்து சந்தித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அரசு கோப்புகளில் கையெழுத்திடும் பச்சை மை பேனா மட்டுமே இருந்தது.
இதனால் அங்கு இருந்தவர்களிடம் நீல மை பேனா தரும்படி கேட்டார். அருகில் இருந்த வக்கீல் ராம் முனுசாமி தனது பேனாவை முதல்-அமைச்சரிடம் கொடுத்தார். பேனாவை வாங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி வித்தியாசமாக இருந்ததை பார்த்து, எந்த ஊர் பேனா? என கேட்டார்.
அது ஜெர்மன் நாட்டு பேனா என்றும், விலை ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 600 என்றும் அவர் தெரிவித்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒரு லட்சம் கையெழுத்து இயக்கத்துக்கு ரூ. 1¼ லட்சம் மதிப்புள்ள பேனாவா? என சிரித்த படியே கூறி முதல் கையெழுத்திட்டார்.






