என் மலர்
புதுச்சேரி

எல்லையில் தொடரும் தாக்குதல்- ஜிப்மர் டாக்டர்களுக்கு விடுமுறை ரத்து
- புதுவையில் கடல் வழி தாக்குதல் ஏற்பட்டால், ஜிப்மர் பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
- அவசரகால சூழலில் ஊழியர்கள் இந்தியாவில் எங்கும் பணி அமர்த்த தயார் நிலையில் உள்ளனர்.
புதுச்சேரி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பதட்டம் நிலவுகிறது.
தேசிய அவசர நிலையை தொடர்ந்து புதுவை ஜிப்மர் துறை தலைவர்களுடன், இயக்குனர் வீர்சிங் நேகி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
கூட்டத்துக்கு பின் ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரிய தாக்குதல்கள் நடந்தால் மருத்துவம், அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், மயக்க மருந்து, குழந்தை மருத்துவம், மகப்பேறியல், மகளிர் மருத்துவம் உட்பட உயர் மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் நேரத்தில் இந்த குழுவினர் ஜம்மு, காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநில எல்லைகளில் உள்ள மருத்துவ ஆஸ்பத்திரிகளுக்கு மத்திய அரசு உத்தரவுக்கு ஏற்ப அனுப்பி வைக்க தயார் நிலையில் உள்ளனர்.
புதுவையில் கடல் வழி தாக்குதல் ஏற்பட்டால், ஜிப்மர் பேரிடர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் டாக்டர்கள், ஊழியர்களின் அனைத்து விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசரகால சூழலில் ஊழியர்கள் இந்தியாவில் எங்கும் பணி அமர்த்த தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






