என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • உச்சநீதி மன்றத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் மிரட்டுகின்றனர்.
    • துணை ஜனாதிபதி உச்சநீதி மன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசுக்கு சாதகமாக கவர்னர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை பா.ஜ.க.வினர் கண்டிக்கின்றனர். உச்சநீதி மன்றத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் மிரட்டுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தையே சிதைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

    பாராளுமன்றம் பெரியதா அல்லது உச்சநீதி மன்றம் பெரியதா என்ற கேள்வியை எழுப்பு கின்றார்கள். அது பேசும் பொருளாக மாறியுள்ளது. துணை ஜனாதிபதி உச்சநீதி மன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனையானது.

    இதை கண்டித்தும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் மே 1-ந் தேதி புதுச்சேரியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

    மே 3-ந் தேதி முதல் 10-ம் தேதி வரை மாவட்ட ரீதியில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கு விபரத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். மே 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து தொகுதிதோறும் போராட்டம் நடத்தப்படும். மே 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வீடுகள் தேடிச்சென்று மக்களை சந்திப்பு நடத்தப்படும்

    இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

    • சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பூவரசன் (வயது 45). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். பூவரசன் அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூவரசன் வழக்கம் போல் அந்த பெண் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பெண் வீட்டில் இல்லை. அவருடைய மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பூவரசன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.

    நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே பூவரசன் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அப்பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    • ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை அறையாக சோதனை நடத்தினர்.
    • போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துாதரகம் ஆகிய அலுவலகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த அலுவலகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

    சோதனையில் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து வந்த மிரட்டலை அலட்சியம் செய்ய முடியாமல் போலீசார் தவித்தனர். மின் அஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யார்? என போலீசாரால் கண்டறிய முடியவில்லை.

    இதனால் புதுவை சைபர் கிரைம் உதவியை நாடினர். அவர்கள் மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். இதில் மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இதுவரை அரசு அலுவலகங்களை குறிவைத்து மிரட்டல் விடுத்து வந்த மர்ம ஆசாமி தற்போது முதலமைச்சர் வீடு மற்றும் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் இல்லை.

    தொடர்ந்து அந்த வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக வெடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    இதுபோல் புதுவை கடற்கரை சாலையில் உள்ள புரோமனன்ட், அஜந்தா சந்திப்பில் உள்ள செண்பகா ஆகிய நட்சத்திர ஓட்டல்களுக்கும் இன்று காலை மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    இதையடுத்து போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.

    ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை, அறையாகவும், சோதனை நடத்தினர். ரெஸ்டாரெண்ட், சமையல் அறை, பார், கார் பார்க்கிங் ஆகியவற்றில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

    மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் சோதனை நடத்தியும்வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது புரளி என தெரிய வந்தது. ஒருபுறம் போலீசார் நிம்மதியடைந்தாலும், இது போல தொடர் மிரட்டலால் போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.
    • 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த தடை உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை அமைச்சகம் 6 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறது.

    இந்த கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், சுற்றுச்சூழல் துறை செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கடந்த மாதம் 27-ந்தேதி தேசிய சிறப்பு ஆய்வு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டுப்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்களும் 2024-ம் ஆண்டுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.

    அதில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்ததில் தேசிய அளவில் புதுச்சேரி மாநிலம் முதலிடமும், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவதில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இங்கு கடந்த 2024-ம் ஆண்டில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் 1,305 ஆய்வுகள் நடத்தப்பட்டு, சுமார் 15 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் டெல்லி முதலிடமும், மராட்டியம் 2-வது இடமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கட்டுமரம், நாட்டு படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொள்ளலாம்.
    • அனைத்து மீனவர்களும் மீன்பிடி தடைக்கால உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரசு கடந்த 10-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி கடல்சார் மீன்வளங்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி கனக செட்டிகுளம் முதல் மூர்த்தி குப்பம், புதுக்குப்பம் மீனவ கிராமம் வரை இழுவலை கொண்டு விசைப்படகு, எந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிக்க தடை விதிகப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமரம், நாட்டு படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொள்ளலாம்.

    இந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட சில மீனவ கிராமத்தில் இருந்து மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மற்ற மீனவ கிராமங்களிடையே பதற்றம் நிலவுகின்ற சூழல் ஏற்படலாம்.

    எனவே அனைத்து மீனவர்களும் மீன்பிடி தடைக்கால உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும். இந்த தடையை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு அரசால் வழங்கப்படும் தடைக்கால நிவாரண தொகை நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குற்றவாளிகளை பிடிக்க புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
    • துப்பு துலக்க பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவை எப்போதும் தயார் நிலையில் இருக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது.

    அதனை தொடர்ந்து அடுத்த நாள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு துணைத்தூதரகத்துக்கு இதே போல் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இதேபோன்ற மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதே போல் கடந்த 14-ந் தேதி மர்ம நபர்கள் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் மோப்பநாய் பிரிவினர் கவர்னர் மாளிகையில் தீவிர சோதனை நடத்தினர். அவை போலி மின்னஞ்சல் என்பது தெரியவந்தது.

    இந்த 4 மிரட்டல் மின்னஞ்சல்களிலும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பமாக கொண்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். ஜிப்மர் ஆஸ்பத்திரி, பிரெஞ்சு துணைத்தூதரகம், மாவட்ட கலெக்டர் அலுவலங்களுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

    கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேரடியாக மிரட்டுவதற்கு பதிலாக முதலமைச்சர் மற்றும் டி.ஜி.பி. அலுவலகங்களுக்கு மிரட்டலை அனுப்பியிருத்தனர்.

    ஆனால் இந்த 4 சம்பவங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் டார்க் நெட்டை பயன் படுத்தியதால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தை சீரியசாக எடுத்துக்கொண்ட போலீசார் மத்திய அரசின் நிறுவனங்களில் தொடர்பில் உள்ளனர்.

    மேலும் விசாரணை விரிவானதாகவும் ஒருங்கிணைத்த முறையிலும் இருக்க வேண்டும் என்பதால் மத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைத்த மையத்தின் உதவியை புதுச்சேரி போலீசார் நாடியுள்ளனர்.

    மர்ம நபர்களை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு புதுச்சேரி காவல்துறை இ-மெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மின்னஞ்சலை அனுப்பியவர்கள் எல்லை தாண்டிய (வெளிநாடு) அதிகார வரம்பைக் கொண்ட கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.

    எனவே வெளிநாட்டில் இருந்து மிரட்டல் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க புதுச்சேரி காவல் துறையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் துப்பு துலக்க பயிற்சி பெற்ற சைபர் கமாண்டோக்களை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • விலை அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் கொண்டதாக இருக்க வேண்டும்.
    • தொகை கட்டண ரசீது சமர்பித்தவுடன் திருப்பி அளிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இ கவர்னன்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டும் முழுமையாக அமலாகவில்லை.

    இதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் புதுச்சேரி அரசு தலைமை செயலாளர் சரத் சவுக்கான் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கவும், கோப்புகளுக்கு விரைவாக அனுமதி வழங்க உயர் செயல்திறன் கொண்ட சாதனங்கள் வைத்திருப்பது அவசியம். இந்த சாதனங்களை வாங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. தகுதி வாய்ந்த நிர்வாக அதிகாரியின் அனுமதி பெற்று அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி டெஸ்க்டாப், லேப்-டாப், ஐபோன், ஐபேட், ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ளலாம்.

    இவற்றின் விலை அதிகபட்சம் ரூ.1.20 லட்சம் கொண்டதாக இருக்க வேண்டும். அதிகாரிகளே சாதனங்களை வாங்க வேண்டும். இதற்கான தொகை கட்டண ரசீது சமர்பித்தவுடன் திருப்பி அளிக்கப்படும். சாதனம் வாங்கிய முதல் 4 ஆண்டு அரசு சாதனமாக இருக்கும். அதில் உள்ள தகவல்கள் அதிகாரியின் முழு பொறுப்பாகும். சைபர் கிரைம் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    புதுச்சேரியில் தினமும் சராசரியாக 96 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. இரவு நேரங்களிலும் வெப்பச்சலனம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தூக்கம் இழந்து தவிக்கும் நிலை உள்ளது.

    வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணி, பழச்சாறு உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 96.26 டிகிரி பாரன்ஹீட பதிவானது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் வலுவிழந்தது. இருப்பினும், அதே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.

    இதன் காரணமாக, 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி நேற்று இரவு 9 மணியளவில் புதுச்சேரி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

    • போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.
    • சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு புதுவை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லாஸ்பேட்டை மெயின் ரோடு பிள்ளையார்கோவில் அருகே நள்ளிரவில் 17வயது சிறுமி ஒருவர் தனியாக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் சாந்தி தனது வாகனத்தை நிறுத்தி சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறினார்.

    அந்த சிறுமி பிளஸ்-2 படித்து வருவதாகவும், விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து வந்த அவருக்கு அவரது தந்தை கடந்த 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்தார். இதனால் புகார் அளிக்க லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் நடத்து வந்ததாக தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர் சாந்தி பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு தனியார் காப்பகத்தில் இரவு தங்க வைத்தார்.

    நேற்று காலை இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சிறுமியிடம் நடந்தவற்றை வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்தனர்.

    பின்னர் சிறுமியின் தந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மகள் என்றும் பாராமல் அவர் 10 நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
    • மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரந்தியத்தை சேர்ந்தவர் சகாயமேரி. இவருக்கு காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்த நீலமேகன் மற்றும் திருநாள்ளாரை சேர்ந்த காயத்ரி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சிங் வேலை வாங்கி தர புதுச்சேரியில் ஆள் இருப்பதாக நீலமேகன் மற்றும் காயத்திரி ஆகியோர் சகாயமேரியிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் புதுச்சேரி பா.ஜ.க, பிரமுகரான அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற ராஜகணபதி (வயது35) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    இதனை நம்பி சகாயமேரி மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயக்கொடி ஆகியோர் இணைந்து நர்சிங் வேலைக்காக விக்கியிடம் ரூ.16.65 லட்சத்தை கொடுத்துள்ளனர்.

    ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், ஜெயக்கொடி விக்கியிடம் கேட்டுள்ளார். சில நாட்களில் வந்துவிடும் என விக்கி கூறி வந்துள்ளார்.

    இதையடுத்து விக்கி, அவர்களுக்கு ஜிப்மர் ஆவணங்கள், ஜிப்மர் ஐ.டி. கார்டு, ஜிப்மர் பணி ஆணை, சம்பளம் தொகை விவரங்கள் உட்பட்ட ஜிப்மர் இயக்குநரின் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார்.

    இதனை ஜெயக்கொடி மற்றும் சகாயமேரி ஆகியோர் ஜிப்மர் இயக்குனரிடம் காண்பித்த போது அது போலியான ஆவணங்கள் என்று தெரிவித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் இதுகுறித்து ஜெயக்கொடி கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விக்கி என்ற ராஜகணபதி. கோட்டுச்சேரி நீலமேகன் மற்றும் திருநள்ளாறை சேர்ந்த காயத்ரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே விக்கி என்ற ராஜகணபதியை கடந்த மாதம் நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

    இதை தொடர்ந்து மோசடி வழக்கு தொடர்பாக விக்கியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • புதுச்சேரியில் இளைஞர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • பொதுவாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று 40வது இளைஞர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவரும், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுசெயலாளருமான ஆதவ் அர்ஜுனா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிவுடன் இணைந்து கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பொதுவாக விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது. அரசியலை விளையாட்டாக பார்க்கக்கூடாது

    * புதுச்சேரி முதலமைச்சர் மிகவும் எளிமையாக இருக்கிறார். பொதுவாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் பராக் ஒபாமா கூடைப்பந்து வீரர். அவர் தினமும் தன்னுடைய விளையாட்டை விளையாடுவார்.

    * நிர்வாகத்தில் எளிமையாகவும், எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருக்கக்கூடிய தலைவராக சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி.

    * த.வெ.க. பற்றிய கேள்விக்கு no அரசியல் என்று கூறினார்.

    • மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர்.
    • பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ராஜூ, மணிமாறன் ஆகிய 2 பேரையும் போசார் நேற்று கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிகள் 2 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர்.

    இதற்கிடையே அன்றைய தினம் இரவே 2 மாணவிகளும் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் சோர்வாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அதாவது, மாணவிகள் இருவரையும் புதுச்சேரி முத்தியால்பேட்டை அடுத்துள்ள குருசுக்குப்பத்தைச் சேர்ந்த மீன்வியாபாரி ராஜூ என்ற புஷ்பராஜ் (வயது 25), வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் மணி என்ற மணிமாறன் (27) ஆகியோர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி இருக்கிறார்கள். மாணவிகளும் அந்த ஆசை வார்த்தையை நம்பி அவர்களுடன் பழகி இருக்கிறார்கள். கடந்த 2-ந்தேதி இருவரையும் கடற்கரை பகுதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அன்று இரவு வெகுநேரமான பின்னர் மாணவிகள் வீடு திரும்பிய தகவல் வெளியானது.

    போலீசார் மாணவிகள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது 10-க்கும் மேற்பட்டோர் அந்த 2 மாணவிகளிடம் தனித்தனியாக பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் மாணவிகள் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மாணவிகள் இருவரும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக ராஜூ, மணிமாறன் ஆகிய 2 பேரையும் போசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் மாணவிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக 4 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 பேர் போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    ×