search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்ச்சையில் சிக்கிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி: ஜனாதிபதியிடம் நேரில் மன்னிப்பு கேட்பேன் என அறிவிப்பு
    X

    சர்ச்சையில் சிக்கிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி: ஜனாதிபதியிடம் நேரில் மன்னிப்பு கேட்பேன் என அறிவிப்பு

    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
    • பாஜ.க. இதை பிரச்சினை ஆக்குகிறது.

    புதுடெல்லி :

    விலைவாசி உயர்வு, அத்தியாசிய பொருட்கள் மீது சரக்கு சேவை வரி விதிப்பு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் டெல்லியில் விஜய் சவுக்கில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தி, அணிவகுத்து செல்ல முற்பட்டனர்.

    அவர்கள் எங்கே அணி வகுத்துச் செல்ல விரும்புகிறார்கள் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ஜனாதிபதி மாளிகையைக் குறிக்கும் 'ராஷ்டிரபதி பவன்' என்பதற்கு பதிலாக 'ராஷ்டிரபட்னி' என்ற வார்த்தையை பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தவறாக பயன்படுத்தினார். ஜனாதிபதியை அவமதிக்கும் இந்த வார்த்தையால், பெரும் சர்ச்சை உருவானது.

    இதில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், விவசாய ராஜாங்க மந்திரி ஷோபா கரண்ட்லஜே உள்ளிட்ட பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் நேற்று போர்க்கொடி உயர்த்தினர்.

    அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் கோரிக்கை வாசகங்கள் கொண்ட அட்டைகளை ஏந்தி நின்று, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

    பாராளுமன்றத்துக்கு வெளியே இந்த விவகாரம் குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் கவனக்குறைவாக ராஷ்டிர பட்னி என்ற வார்த்தையை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி விட்டேன். நாக்கு பிறண்டதால் அவ்வாறு கூறி விட்டேன். ஒருபோதும் ஜனாதிபதியை மரியாதைக்குறைவாக பேசவில்லை.

    நான் என்ன செய்ய வேண்டும்? நான் அதைக்கூறி விட்டேன், தவறாக அந்த வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். அதில் கவனம் செலுத்தி விடாதீர்கள் என்று கூற பத்திரிகையாளர்களை கூட தேடினேன். ஆனால் அவர்களை பார்க்க முடியாமல் போய்விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், "நான் ஓரு வங்காளி. இந்தியில் பேசி பழக்கம் இல்லை. இந்தி எனது தாய்மொழியும் இல்லை. நான் ஒரு தவறு செய்து விட்டேன். நான் ஒப்புக்கொள்கிறேன். நான் ஜனாதிபதியிடம் நேரம் ஒதுக்கி கேட்டிருக்கிறேன். நான் அவரிடம் மன்னிப்பு கேட்பேன். ஆனால் இந்த பகந்திகளிடம் (பா.ஜ.க.வினரிடம்) அல்ல" என கூறினார்.

    சில பா.ஜ.க.வினர் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே மலையாக்கப் பார்க்கிறார்கள் என சாடினார்.

    வீடியோ வெளியீடு

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் எந்த சூழ்நிலையில் தான் ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை பயன்படுத்த நேர்ந்தது என்பதை எடுத்துக்கூறி உள்ளார். மேலும், பாஜ.க. இதை பிரச்சினை ஆக்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×