என் மலர்tooltip icon

    இந்தியா

    • மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
    • உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வெறுப்பு பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.

    டோமரியாகஞ்சில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், "ஒரு முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்" என்று பேசியுள்ளார்.

    மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஒரு தலைவர் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தை வெளிப்படையாகத் தூண்டினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அனைவருக்கும் சமமான சட்டம் என்ற வாதம் வெற்றுத்தனமாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அங்கிருந்தவர்கள் அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கோட்வாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மருதுவானமையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனருக்கு உதவியாக வந்திருந்த 35 வயது பெண் நேற்று முன் தினம் மருத்துவமனைக்கு அருகில் மது வாங்கி குடித்து அப்பெண் மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அங்கிருந்தவர்கள் அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை மயக்கம் தெளிந்த அப்பெண், தன்னை தனது மைத்துனர் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு துப்புரவு ஊழியர் ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டார்.

    அப்பெண்ணுக்கு உதவுவதுபோல் நடித்து மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று ஜெய்சங்கர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.  

    • என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
    • மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.

    குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.

    மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

    இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.

    எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

     

    மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.  

    • பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
    • கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் குறித்து பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.

    போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் கிழவி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனாவின் மனுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக பஞ்சாபின் பாதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் இன்று ஆஜரானார்.  நீதிமன்ற விசாரணைக்கு மஹிந்தர் கவுர் சார்பாக அவரது கணவர் வனத்திருந்தார். விசாரணையின்போது தனது கருத்துக்கு கங்கனா மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்கு ஒதுக்கிவைக்கப்ட்டது. 

    மேலும் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே அந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும், நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

    கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார். 5 வருடங்கள் முன் கழிந்து கங்கனா தனது  கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது.
    • மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.

    மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது. மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். அது விசாரணையை சந்திக்க வேண்டும்.

    பாஜக தன்னிறைவு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பாஜக இன்னும் தன்னிறைவு பெறவில்லை. ஏனென்றால், அது கட்சிகளை பிரித்து வாக்குகளை திருடிக் கொண்டிருக்கிறது. பாஜக தன்னைத்தானே தேசபக்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் போலிக் கும்பல். வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்யும்வரை, மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்திற்கு சொல்லிக் கொள்கிறேன்.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • ரகசிய வீடியோக்களை அழிக்காததால் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
    • முன்னாள் காதலர், மேலும் ஒருவரை சேர்த்துக் கொண்டு, எரித்து கொலை செய்துள்ளார்.

    டெல்லி திமர்பூரில் உள்ள காந்தி விஹாரில், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து வந்த 32 வயதான நபர், தனது பிளாட்டில் கடந்த 6ஆம் தேதி தீயில் கருகியபடி இறந்த கிடந்தார். அடுக்குமாடி குடியிருப்பின் 4ஆவது மாடியில் கண்டெடுக்கப்பட்ட உடல் ராம் கேஷ் மீனா என்பவர் எனத் தெரியவந்தது. ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகித்தனர்.

    ஆனால் ராம் கேஷ் மீனாவின் பெற்றோர், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது, ராம் கேஷ் மீனாவுடன் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்த 21 வயது இளம் பெண்தான், அவரை தீர்த்துக்கட்டி, தீ விபத்தில் உயிரிழந்தது போன்று நாடகமாட முடிவு செய்தது தெரியவந்தது.

    ராம் கேஷ் மீனாவை அந்த பெண் கடந்த வருடம் சந்தித்துள்ளார். சந்தித்த உடனே இருவரும் தொடர்பை நீடிக்க தொடங்கினர். அதன்பிறகு இருவரும் லிவ்-இன் பார்ட்னராக வாழத் தொடங்கினர். அப்போது ராம் கேஷ், அந்த இளம் பெண்ணை மோசமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது. மேலும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் அதை சேமித்து வைத்துள்ளார். இதை அறிந்த அந்த பெண், அந்த வீடியோக்களை அழிக்க கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், லிவ்-இன் பார்ட்னர் அதை அழிக்க மறுத்துவிட்டார்.

    இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி தனது பழைய காதலனிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். இருவரும் மற்றொருவரை துணைக்கு சேர்த்துக் கொண்டனர்.

    மூன்று பேரும் ராம் கேஷ் மீனா தங்கியிருந்த பிளாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை கொலை செய்து, ரூமிற்கு தீ வைத்துள்ளனர். பின்னர் ஏதும் தெரியாதது போல் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

    அந்த கட்டிடத்திற்கு முதலில் இருவர் வெளியில் இருந்து சென்றுள்ளனர். பின்னர், ஒருவர் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் இருவர் வெளியேறியுள்ளனர். சிசிடிவி-யில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அந்த பெண் தனது போனை ஸ்விட்-ஆஃப் செய்துவிட்டார். பின்னர் தீவிர தேடுதலுக்குக்குப் பிறகு போலீசார் கடந்த 18ஆம் தேதி அவரை பிடித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி மேலும் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    • சேறு, மழை நீரால் சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அவலம்.
    • மாட்டு வண்டியில் கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    உத்தர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் சேறு, தண்ணீர் தேங்கிய சாலையில் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்படும் வீடியோவை வெளியிட்டு, அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசின் வளர்ச்சி இதுதானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு சாலை மோசமாக இருந்ததால், மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வீடியோ வெளியிட்டு எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பாஜக-வின் தவறான ஆட்சியின் கீழ், உத்தர பிரதேசத்தில் மாட்டு வண்டி, ஆம்புலன்ஸ் ஆக மாறிவிட்டது. டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மாட்டு வண்டிகளில் இயங்குமா?. டெல்லி தொலைநோக்கி அல்லது தேவைப்பட்டால் டிரோன்கள் மூலம் அடுத்த முறை முதல்வர் களத்திற்கு செல்லும்போது, சாலைகள் மற்றும் ஆம்புலன்ஸ் நிலைகள் என்ன? என்பதை பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    நேற்று முன்தினம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள பர்சத்வா தேரா காயு காட் சானி கிராமத்தில், கர்ப்பிணி பெண்ணை அவரது 60 வயது மாமனார் மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார். சாலை சரி செய்யப்படாததால் சேறு மற்றும் மழைநீர் தேங்கியதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    3 மணி நேரத்திற்கு பின் அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்றனர். குழந்தை பிறக்க இன்னும் 2 நாட்கள் ஆகலாம் என, முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த கிராமத்தில் 500 பேர் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு பருவமழையின்போது, இதுபோன்ற கஷ்டத்தை அனுபவித்து வருவதாக தெரிவித்தனர்.

    • கர்நாடக மாநிலங்களுக்கு வரும் முதலீடுகளை குஜராத், அசாமுக்கு திருப்புவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு.
    • செமிகண்டக்டர் போன்ற பெரிய நிறுவனங்களை அமைப்பதற்கான திறன் இல்லை என பிரியங்க் கார்கே கூறியதாக குற்றச்சாட்டு.

    கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகனுமான பிரியங்க் கார்கே செய்தி சேனலில், கர்நாடகாவில் முதலீடு செய்ய இருந்த நிறுவனங்கள் குஜராத் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.

    அப்போது, செமிகண்டக்கர் உற்பத்தி போன்ற பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திறன் வடகிழக்கு மாநிலங்களில் இல்லை எனக் கூறியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், பிரியங்க் கார்கே மீது வழக்கு தொடர இருப்பதாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில் "பிரியங்க் கார்கே முதல் தர முட்டாள். அசாம் இளைஞர்களை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி இதுவரை அவருக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

    அசாம் மக்களுக்கு கல்வி அறிவு இல்லை. போட்டியான இளைஞர்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது அசாம் இளைஞர்களை இழிவுப்படுத்துவதாகும். இதனால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம்.
    • உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்.

    இந்திய தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 12 மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படும். நாளை முதல் இந்த பணி தொடங்கும் எனத் தெரிவித்தார்.

    அந்த மாநிலங்கள் விவரம் பின்வருமாறு:-

    தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், லட்சத்தீவு, குஜராத், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் அண்டு நிக்கோபர். மேற்கு வங்கம்.

    ஆதார் கார்டு உள்பட 12 ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். தகுதியற்ற வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது உறுதி செய்யப்படும். எனத் தெரிவித்தார்.

    • தற்போதைய SIR பணி சுதந்திரத்திற்குப் பிறகு 9ஆவது நடவடிக்கையாகும்.
    • 21 ஆண்டுகளுக்கு முன்னதாக இதுபோன்ற பணி நடந்துள்ளது.

    பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்பின் இந்தியா முழுவதும் SIR பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அடுத்த வரும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநிலங்களில் SIR பணி மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல் வெளியானது.

    இதற்கிடையே, SIR குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் நாளை (இன்று) செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 12 மாநிலங்களில் 2ஆம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    பீகாரில் முறையீடு ஏதுமின்றி முதற்கட்ட சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்றது. அரசியல் கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் வாக்காளர் பட்டியலின் தரம் குறித்த பிரச்சினையை எழுப்பியுள்ளன. தற்போதைய SIR சுதந்திரம் அடைந்த பிறகு 9ஆவது மாற்றமாகும். கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னதாக 2002-2004-ல் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது.

    • என்டிஏ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட மனுதாக்கல்.
    • கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்பட்டதாக நடவடிக்கை.

    பீகாரில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, நிதிஷ் குமாரின் ஆர்.ஜே.டி. கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களில் போட்டியிடுகிறது.

    போட்டியிட வாய்ப்பு கிடைக்காத தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் கட்சி அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களை வாபஸ் செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டும், அவர்கள் வாபஸ் பெற மறுத்துவிட்டனர்.

    கஹல்கான் தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருப்பவர் பவன் யாதவ். இவருக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    அதேபோல் சன்னி யாதவ், ஷ்ரவன் குஷ்ஹகா, உத்தம் சவுத்ரி, மாருதி நந்தன் மாருதி மற்றும் பவன் சவுத்ரி ஆகியோரும் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய கட்சி உறுபினரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • மோன்தா புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் ஆந்திர பிரதேச மாநிலம் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் (காகிநாடா) இடையே நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகுிறது.

    ஆப்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. ஆந்திர மாநில கடையோர பகுதிகள் இந்த புயலால் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியுள்ளார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்ததாகவும், பிரதமர் அலுவலகத்துடன் தொழில்நுட்ப அமைச்சர் நர லோகேஷ் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.

    அப்போது எங்கெல்லாம் மழை பெய்யும், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பயிர்கள் சேதமடைவதை தடுக்க கால்வாய்கள், குளங்கள், ஏரிகளின் கரையோரங்களை வலுப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் புயலின் நிலை குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

    கிருஷ்ணா மாவட்டத்தில் இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், குண்டூர், பபட்லா, என்டிஆர், பல்நாடு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×