என் மலர்tooltip icon

    இந்தியா

    • உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்துள்ளது.
    • உயர் மின்னழுத்த வயரில் உரசி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர்- டெல்லி நெடுஞ்சாலையில் மனோகர்புரா-ஷாபூர் அருகே உயர்அழுத்த மின்கம்பியில் தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து உரசி தீப்பிடித்ததில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    ஷாபூர்-மனோகர்புரில் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள செங்கல் சூளைகளில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்களை உத்தர பிரதேச மாநலம் பிலிபிட்டில் இருந்து படுக்கை வசதி கொண்டு பேருந்து ஏற்றிக்கொண்டு வந்தது. மனோகர்பூரில் இருந்து சுமார் 55 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் உயர்மின்அழுத்தம் கொண்ட வயரில் உரசி பேருந்து தீப்பிடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    தீப்பிடித்ததால் தொழிலாளர்கள் கிடையே அச்சம் ஏற்பட்டது. பெரும்பாலான தொழிலாளர்கள் ஜன்னலை உடைத்து வெளியேறினர். மற்றவர்கள் தீயில் கருகி காயம் அடைந்தனர். சிலர் மின்வயரால் மின்சாரம் தாக்கி காயம் அடைந்தனர்.

    காயம அடைந்தவர்களில் 4 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி எஸ்எம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.

    50 முதல் 60 தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது குடும்பம் மற்றும் லக்கேஜ் உடன் பேருந்தில் வந்துள்ளனர். சிலர் சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் பஜன் லார் சர்மா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த 17ஆம் ஏசி ஸ்லீப்பர் பேருந்து ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்கு சென்றபோது தீப்பிடித்து எரிந்தது. இதில் 27 பயணிகள் உயிரிழந்தனர்.

    • SJ 100 விமானம் 98 பயணிகள் வரை பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
    • மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமானம் தயாரிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    சுகோய் சூப்பர் ஜெட் SJ 100 என்பது ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஒரு இரட்டை எஞ்சின் கொண்ட குறுகிய தூர பயணிகள் விமானம்.

    இது முன்னர் 'சுகோய் சூப்பர்ஜெட் 100' (SSJ100) என அழைக்கப்பட்டது.

    தற்போது பொருளாதாரத் தடைகள் காரணமாக SJ-100 பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய SJ-100 விமானம் 98 பயணிகள் வரை பயணிக்கலாம்.

    இந்நிலையில், இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ஹெச்.ஏ.எல். நிறுவனம் ரஷியாவின் யுனைடெட் ஏர் கிராப்ட் நிறுவனமும் இணைந்து SJ 100 பயணிகள் விமானங்களை தயாரிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட உள்ள இந்த பயணிகள் விமானம் உள்நாட்டு பயணத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது.

    • தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது.
    • முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந்தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரியணையில் அமரப்போவது யார்? என்பது நவம்பர் 14-ந் தேதி தெரியும்.

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு)- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப் பணியாற்றி வருகிறது.

    நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை இந்த முறை கைப்பற்றி விடவேண்டும் என்ற வேட்கையில் எதிர்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி (ராஷ்டிரிய ஜனதா தளம்)-காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி இருக்கிறது.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஆனால் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிரசாரத்தை இன்னும் தொடங்கவில்லை.

    தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது. கூட்டணி கட்சியினரே 12 தொகுதிகளில் மோதும் நிலை உருவாகியுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக ராகுல் காந்திக்கும், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியானது. முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பீகாரில் நாளை தேர்தல் பிரசாரம் செய்கிறார். முசாபர்பூர், தர்பங்கா ஆகிய 2 இடங்களில் அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

    முதலில் ராகுல் காந்தி முசாபர்பூரில் உள்ள சகரா தொகுதியில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    ராகுல் காந்தி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்கிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ரத்தோர் தெரிவித்தார்.

    பின்னர் ராகுல் காந்தி தர்பாங்காவில் பிரசாரம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    • எழுத்து தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
    • உடற்தகுதி தேர்வுக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டபோது துயர சம்பவம்.

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள தளிகுளம் குருட்டிபரம்பு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆதித்யா (வயது 22). பட்டதாரியான இவர் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.

    அது தொடர்பாக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் கலந்து கொண்ட ஆதித்யா, அதில் தேர்ச்சி பெற்றார். ஆகவே அவர் உடல் தகுதி தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக தனது தோழிகள் சிலருடன் தினமும் மைதானத்துக்கு சென்று ஓட்டப்பயிற்சி உள்ளிட்டவைகளை செய்து வந்தார்.

    நேற்று அவர் உடற்பயிற்சி செய்வதற்காக தளிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்துக்கு தனது தந்தையுடன் ஆட்டோவில் சென்றார். பின்பு மைதானத்தில் தனது தோழிகளுடன் ஓடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

    அதனைப்பார்த்த அவருடன் ஓடிக்கொண்டிருந்த தோழிகளும், மைதானத்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்த தந்தை சுரேசும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஆதித்யாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் உடல்தகுதி தேர்வுக்காக தீவிர உடற்பயிற்சி செய்ததால் ஆதித்யா இறந்துவிட்டதாக தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிவில் தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்.

    போலீஸ் உடல்தகுதி தேர்வுக்கு தயாராகி வந்த இளம்பெண் மைதானத்தில் சுருண்டுவிழுந்து இறந்த சம்பவம் திருச்சூரில் பரிதா பத்தை ஏற்படுத்தியது.

    • தீப்பிடித்த பேருந்து விமானத்தில் இருந்து சில அங்குல தொலைவில் நின்று கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    புதுடெல்லி:

    டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது..

    தீப்பிடித்து எரிந்த பேருந்து ஒரு விமானத்திலிருந்து சில அங்குலங்கள் தொலைவில் நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் விமானத்தில் இல்லை.

    அங்கிருந்த தீயணைப்பு வீர்ர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

    இந்த திடீர் தீவிபத்தால் அருகிலுள்ள விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலைய அதிகாரிகள் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மசூலிபட்டினம்- காக்கிநாடாவை ஒட்டியுள்ள கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்கிறது மோன்தா புயல்.
    • காக்கிநாடாவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலத்தில் இன்று மாலை அல்லது இரவு மசூலிபட்டினம்- காக்கிநாடாவை ஒட்டியுள்ள கலிங்கபட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கரையை கடக்கும்போது 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புயலைத் தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. அதேவேளையில் கடற்கடையோரம் உள்ள வீடுகள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில வீடுகள் பாதிப்பு அடைந்துள்ளன. நேரம் செல்ல செல்ல கடலை அலை ஆர்ப்பரிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போலீசார் அவர்களை வெளியேற்றி வருகின்றனர்.

    • இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது.
    • சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர்.

    வட மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவில் ஒன்று சாத் பூஜை. சூரிய பகவானுக்கு நன்றி சொல்வதற்காக நடத்தப்படும் இந்த விழா 4 நாட்கள் நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டின் சாத் பூஜை கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடுகின்றனர். சாத் பூஜையையொட்டி யமுனா நதியில் பொதுமக்கள் நீராடவுள்ளனர்.

    இந்நிலையில், யமுனை ஆற்றில் அருகே பிரதமர் மோடி நீராடுவதற்கு பிரத்யேக குளம் தயார் செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    யமுனை ஆற்றில் மக்கள் குளிக்கும் நீர் கருப்பு நிறத்தில் குளிப்பதற்கு தகுதியில்லாத நிலையில் உள்ளதும் பிரதமர் மோடி குளிக்கும் குளத்தின் நீர் நல்ல தரத்தில் இருப்பதும் பிபிசி வெளியிட்டுள்ள வீடியோவில் அம்பலமாகியுள்ளது.

    பிரதமர் மோடி நீராடுவதற்கு பிரத்யேக குளம் தயார் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.
    • தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரேசிலிய பெண்ணை பாலியல் தொல்லை தந்த டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெங்களூருவில் மாடலிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரேசிலிய இளம் பெண், மூன்று சக ஊழியர்களுடன் நிறுவனத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

    கடந்த சனிக்கிழமை, அந்தப் பெண் ஒரு பிரபலமான செயலி மூலம் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்திருந்தார்.

    பொருட்களை எடுத்து வந்த டெலிவரி ஊழியர் குமார் (21) வாசலில் வைத்து அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார். பயந்துபோன அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு தப்பினார். இந்த சம்பவம் குறித்து அப்பெண் உடன் வசிக்கும் மற்றொரு பெண்ணிடம் கூறினார். அவர் தனது நிறுவன முதலாளியிடம் இதை தெரிவித்தார்.

    இதையடுத்து, முதலாளி கார்த்திக் விநாயக் அளித்த புகாரின் பேரில், ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குமாரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

    பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ மாணவரான குமார் பகுதிநேரமாக டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிகெட் வீராங்கனைகளிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்துகொண்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.    

    • மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
    • உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வெறுப்பு பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.

    டோமரியாகஞ்சில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், "ஒரு முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்" என்று பேசியுள்ளார்.

    மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஒரு தலைவர் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தை வெளிப்படையாகத் தூண்டினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அனைவருக்கும் சமமான சட்டம் என்ற வாதம் வெற்றுத்தனமாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • அங்கிருந்தவர்கள் அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர்.
    • 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் கோட்வாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மருதுவானமையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனருக்கு உதவியாக வந்திருந்த 35 வயது பெண் நேற்று முன் தினம் மருத்துவமனைக்கு அருகில் மது வாங்கி குடித்து அப்பெண் மயக்கம் போட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அங்கிருந்தவர்கள் அவரையும் அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று காலை மயக்கம் தெளிந்த அப்பெண், தன்னை தனது மைத்துனர் இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்லுமாறு துப்புரவு ஊழியர் ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டார்.

    அப்பெண்ணுக்கு உதவுவதுபோல் நடித்து மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று ஜெய்சங்கர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.  

    • என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
    • மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.

    குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.

    மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

    இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.

    எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

     

    மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.  

    • பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.
    • கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் கொள்கைகளை எதிர்த்து 2020-21 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் குறித்து பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார்.

    போராட்ட வீடியோவை ரீட்வீட் செய்த பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், மூத்த போராட்டக்காரரான மஹிந்தர் கவுருக்கு எதிராக, "இந்தப் கிழவி டைம் இதழில் இடம்பெற்ற அதே வலிமையான இந்தியப் பெண்மணி. அவர் இப்போது ரூ.100க்குக் கிடைக்கிறார்" என்று கிண்டல் செய்யும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    இந்த அறிக்கைக்கு எதிராக மஹிந்தர் கவுர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனாவின் மனுவை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக பஞ்சாபின் பாதிண்டா மாவட்ட நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் இன்று ஆஜரானார்.  நீதிமன்ற விசாரணைக்கு மஹிந்தர் கவுர் சார்பாக அவரது கணவர் வனத்திருந்தார். விசாரணையின்போது தனது கருத்துக்கு கங்கனா மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்கு ஒதுக்கிவைக்கப்ட்டது. 

    மேலும் நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே அந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்றும், நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

    கங்கனா முன்பே மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும் என்று மகிந்தர் கவுரின் கணவர் தெரிவித்தார். 5 வருடங்கள் முன் கழிந்து கங்கனா தனது  கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

    ×