search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலையில்லா திண்டாட்டம் : மத்திய அரசு மீது ராகுல், பிரியங்கா தாக்கு

    வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக மத்திய அரசு மீது ராகுல் மற்றும் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளனர்.
    புதுடெல்லி:

    நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சியும், அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி நேற்று மீண்டும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

    குறிப்பாக, பிரதமர் மோடியின் பிறந்தநாளான நேற்று தேசிய வேலையில்லா தினமாக அனுசரிக்கப்போவதாக இளைஞர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி சமூக வலைத்தளங் களில் நேற்று ‘தேசிய வேலையில்லா தினம்’ டிரெண்டாகி இருந்தது.

    இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மிகப்பெரும் வேலையில்லா திண்டாட்டம், இளைஞர்களை இன்று (நேற்று) தேசிய வேலையில்லா தினமாக அனுசரிக்க தள்ளி இருக்கிறது. வேலைதான் கண்ணியம். எவ்வளவு காலத்துக்கு அரசு இதை மறுக்கும்?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    மேலும், அரசின் வேலைவாய்ப்பு தளத்தில் 1 கோடி பேர் வேலைக்காக பதிவு செய்திருப்பதாகவும், ஆனால் 1.77 லட்சம் வேலைவாய்ப்புகளே இருப்பதாகவும் வெளியாகி இருந்த செய்தி ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் தளத்தில் இணைத்திருந்தார்.

    இதைப்போல காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து அரசுகளை சாடியிருந்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களுடன் நேற்று அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், மாநில அரசின் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றும், இதுவரை பணி நியமனம் பெறாதவர்கள் என 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பேசும்போது, ‘வேலையில்லா திண்டாட்டம் நமக்கு ஒரு அரசியல் பிரச்சினை அல்ல, மாறாக ஒரு மனிதாபிமான விவகாரம். இது நீதிக்கான ஒரு கேள்வி. இதற்காக நாம் சாலைகளில் இருந்து சட்டசபை வரை போராட வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பின்வாங்காது’ என்று கூறினார்.

    இளைஞர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே தனது நம்பிக்கையாக இருந்தது எனக்கூறிய பிரியங்கா, இந்த விவகாரத்தில் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சி செய்யும் என்றும் உறுதியளித்தார்.
    Next Story
    ×