search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரித்துறை
    X
    வருமான வரித்துறை

    ராஜஸ்தான் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவரின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை

    ராஜஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் முதல்வருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறி உள்ளார். 

    இந்த விவகாரம் ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று, முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தல் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அசோக் கெலாட் அரசு தப்புமா? என்பது இந்த கூட்டத்திற்கு பிறகுதான் தெரியவரும்.

    அதிருப்தி தலைவரான சச்சின் பைலட், இன்றைய கூட்டத்திற்கு வரவில்லை. அவர் பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு இந்த நெருக்கடி ஒரு புறமிருக்க, ராஜஸ்தானில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். முதல்வர் கெலாட்டுககு நெருக்கமானவரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவருமான ராஜீவ் அரோரா அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. இவருக்கு சொந்தமான  அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது.

    அதேபோல் இவரின் நண்பர்கள் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு நெருக்கமாக இருக்கும் நபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது. முதல்வருக்கு நெருக்கமான தர்மேந்திர ரத்தோரின் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடக்கிறது. டெல்லி, மகாராஷ்டிரா, மும்பையில் சில இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. 

    அங்கு ஆட்சி கவிழும் நிலை இருக்கும் போது இப்படி வருமான வரித்துறை சோதனை நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சோதனை பற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறுகையில், நண்பகலுக்குள் அமலாக்கத்துறையும் வருவது நிச்சயம் என்றார்.

    ‘வருமான வரித் துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜகவின் முன்னணி அமைப்புகளாகும். ஒவ்வொரு முறையும் ஏதேனும் அரசியல் நெருக்கடி ஏற்படும்போது, தவறான நோக்கங்களுடன் களத்தில் இறங்க தயாராக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முடியவில்லை. அதனால் வருமான வரித்துறையை அழைத்திருக்கிறார்கள். பிற்பகலுக்குள் அமலாக்கத்துறையும் வரும்’ என்றார்.
    Next Story
    ×