search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த ரூ.742 கோடி நன்கொடை

    2018-19 நிதியாண்டில் பாரதிய ஜனதா மட்டும் ரூ.742 கோடி நன்கொடை வசூல் செய்திருக்கிறது. அதாவது அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த நன்கொடையில் இது 78 சதவீதம் ஆகும்.
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் தங்கள் செலவுக்கு தேவையான பணத்தை நன்கொடையாக வசூலித்துக் கொள்ள சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதற்கான கணக்குகளை ஆண்டு தோறும் தேர்தல் கமி‌ஷனிடம் காட்ட வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதன் அடிப்படையில் 2018-19 நிதியாண்டில் வசூலான நன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்துள்ளன.

    இதில் ரூ.20 ஆயிரத்திற்கு மேற்பட்ட நன்கொடைகளை பெற்ற பட்டியல் தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் ரூ.20 ஆயிரத்திற்கு மேலான நன்கொடைகளை வழங்குவது வழக்கம். எனவே அந்த பட்டியல் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது.

    அந்த வகையில் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகியவை கணக்கு தாக்கல் செய்துள்ளன.

    இதில் பகுஜன் சமாஜ் கட்சி ரூ.20 ஆயிரம் மேல் கொண்ட நன்கொடை எதுவும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. மற்ற அனைத்து கட்சிகளும் சேர்த்து ரூ.951 கோடி வசூல் செய்திருக்கின்றன.

    இதில் பாரதிய ஜனதா மட்டும் ரூ.742 கோடி வசூல் செய்திருக்கிறது. அதாவது அனைத்து கட்சிகளுக்கும் கிடைத்த மொத்த நன்கொடையில் 78 சதவீதம் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் வந்துள்ளது.

    அதற்கு முந்தைய ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ரூ.437 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ்

    2-வது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ரூ.148 கோடி கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு ரூ.26 கோடி மட்டுமே அந்த கட்சிக்கு கிடைத்திருந்தது.

    திரிணாமுல் காங்கிரஸ் ரூ.44 கோடியும், தேசியவாத காங்கிரஸ் ரூ.12 கோடியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ரூ.3 கோடியும், இந்திய கம்யூனிஸ்டு ரூ.1 கோடியே 59 லட்சமும் இந்த வகையில் நன்கொடை பெற்றுள்ளன.

    பெரும்பாலும் நாட்டின் வர்த்தக தலைநகராக இருக்கும் மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தில் இருந்தே அதிக நன்கொடை வந்துள்ளது.

    இதன்படி ஒட்டுமொத்த தொகையில் ரூ.548 கோடி மராட்டிய மாநிலத்தில் இருந்தும், ரூ.141 கோடி டெல்லியில் இருந்தும், ரூ.55 கோடி குஜராத்தில் இருந்தும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வந்துள்ளன.

    ஒட்டுமொத்த தொகையில் ரூ.876 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வந்துள்ளன. மீதி ரூ.71 கோடி நன்கொடை 3509 தனிப்பட்ட நபர்கள் மூலம் கிடைத்துள்ளது.

    கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த தொகை ரூ.698 கோடி ஆகும். காங்கிரசுக்கு இந்த வகையில் ரூ.122 கோடி வந்துள்ளது.

    டாடா நிறுவனத்தை சேர்ந்த தேர்தல் அறக்கட்டளை தான் அதிக அளவில் நன்கொடைகளை வழங்கி இருக்கிறது. அந்த நிறுவனம் மட்டுமே ரூ.455 கோடி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×