search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தலைவர் கிரிஷ் மகாஜன்
    X
    பாஜக தலைவர் கிரிஷ் மகாஜன்

    மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்போம் -பாஜக உறுதி

    மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மெஜாரிட்டியை நிரூபிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் கூறுகின்றனர்.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்று காலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பொறுப்பேற்றது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். 

    ஆனால், அஜித் பவாரின் முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்றும், அவரது முடிவை ஆதரிக்கவில்லை என்றும் கட்சி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இதனால் அந்த கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    ஆட்சியமைப்பது தொடர்பாக தங்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அஜித் பவார்  மாநில மக்களின் முதுகில் குத்திவிட்டதாக சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் குற்றம்சாட்டி உள்ளார். 

    சஞ்சய் ராவத்

    இந்நிலையில் பாஜக-தேசியவாத கூட்டணி குறித்தும், சஞ்சய்  ராவத்தின் குற்றச்சாட்டுகள் குறித்தும் பாஜகவின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். எங்கள் கூட்டணிக்கு 161 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். ஆனால், மக்கள் தீர்ப்புக்கு எதிராக சிவசேனா நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது. முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்தே, அவர்கள் மாற்று வழிகளைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டார்கள். சஞ்சய் ரவுத் இப்போது சற்று அமைதியாக இருக்க வேண்டும். அவர் சிவசேனாவை அழித்துவிட்டார். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாஜகவின் கிரிஷ் மகாஜன் கூறியதாவது:-

    எங்களுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. எனவே, சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்போம். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் அஜித் பவார் ஆதரவு கடிதம் தந்தார். அந்த கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சி அமைத்துள்ளோம். தேசியவாத காங்கிரசின் பேரவை குழு தலைவர் அஜித் பவார் ஆதரவு கடிதம் அளித்திருப்பதால், அந்த கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளிப்பதாக அர்த்தம். 

    சஞ்சய் ராவத் வரம்பு மீறி பேசுகிறார். சிவசேனா கட்சியில் உள்ள பல எம்.எல்.ஏ.க்கள் கூட அவரது செயலால் விரக்தி அடைந்துள்ளனர். அவர்கள் எங்களுடன் இணைவது பற்றியும் சிந்திக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×