search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ஐஷ்வர்யா
    X
    அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ஐஷ்வர்யா

    கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மகளிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை

    முறைகேடாக சம்பாதித்து சொத்துகளை குவித்ததாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவிடம் அமலாக்கத்துறை இன்று 7 மணி நேரம் விசாரணை நடத்தியது.
    புதுடெல்லி:

    கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
     
    இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கிய ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டி.கே.சிவக்குமார் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி ஆனது.

    இதையடுத்து, ஆகஸ்ட் 30-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியநிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி கைது செய்தனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சுமார் 600 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான சிவக்குமார் அவரது மகள் ஐஷ்வர்யா பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கியதாகவும் பெருமளவு பணத்தை முதலீடுகளில் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மதியம் முன்னாள் மந்திரி சிவக்குமாரின் மகள் ஐஷ்வர்யா ஆஜரானார்.

    அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 7 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×