search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்ய முடிவு: எடியூரப்பா மீது குமாரசாமி குற்றச்சாட்டு
    X

    ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்ய முடிவு: எடியூரப்பா மீது குமாரசாமி குற்றச்சாட்டு

    ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்யும் முடிவு குறித்து விவாதம் நடத்த வருமாறு விடுத்த அழைப்பை புறக்கணித்துவிட்டார் என்று எடியூரப்பா மீது முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் பல்லாரியில் இரும்பு தாதுக்கள் வெட்டி எடுக்கும் ஜிந்தால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்திற்கு 3,667 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், எனவே ஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா வலியுறுத்தியது.

    ஆனால் கர்நாடக அரசு அந்த முடிவை கைவிடவில்லை. இந்த நிலையில் இந்த முடிவை கைவிட கோரி பா.ஜனதா கடந்த 2 நாட்களாக பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டது.

    இதைதொடர்ந்து கர்நாடக மந்திரி சபையில், ஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் முடிவை பரிசீலனை செய்ய மந்திரி சபை துணை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத பா.ஜனதா ஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் முடிவை கர்நாடக அரசு கைவிட கோரி 16-ந்தேதி (அதாவது நேற்று) முதல்-மந்திரி குமாரசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன் படி நேற்று காலை தொடர் தர்ணாவில் ஈடுபட்டிருந்த பா.ஜனதாவினர் எடியூரப்பா தலைமையில் குமரகிருபா ரோட்டில் உள்ள முதல்-மந்திரியின் அலுவலக இல்லத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி, இதுபற்றி விவாதத்திற்கு வாருங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்ததும், அதனை அவர் புறக்கணித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். .

    இதுபற்றி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதாவினர் நடத்தி வரும் பகல்-இரவு போராட்டத்தை கவனித்துள்ளேன். முதல்-மந்திரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஜிந்தால் நிறுவனத்திற்கு நிலம் விற்பனை செய்வது, வறட்சி, விவசாய கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் ஆகியவை குறித்து விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்.

    பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகள் சிலரை நேரில் சந்தித்து கர்நாடக பிரச்சினைகள் குறித்து பேசினேன். நீங்கள் (எடியூரப்பா) நேரத்தை சொல்லுங்கள், விவாதத்திற்கு நான் தயார்.

    இந்த விவாதம் குறித்து கடிதம் ஒன்றை மந்திரி வெங்கடராவ் நாடகவுடா மூலம் எடியூரப்பாவிடம் கொடுத்தேன். விவாதத்திற்கு நேரத்தை நிர்ணயம் செய்வார் என்று நான் கருதினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இதன்மூலம் பா.ஜனதாவின் உண்மையான சாயம் என்ன என்று தெரிந்துவிட்டது. அவர்களுக்கு மலிவான விளம்பரம் தான் தேவை. வளர்ச்சி அடிப்படையிலான விவாதம் அவர்களுக்கு தேவை இல்லை.

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×