search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம் - தேர்தல் பிரசாரத்தில் மோடி கிண்டல்
    X

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம் - தேர்தல் பிரசாரத்தில் மோடி கிண்டல்

    இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கிண்டலாக கூறினார். #Modicampaign #Telanganapolls #MPpolls
    பில்வாரா:

    முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    அங்குள்ள ஆல்வார் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாரதீய ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கினார். வேறு பிரச்சினைகள் இல்லாததால் அந்த கட்சி தன் மீது சேற்றை வாரி வீசுவதாக குற்றம்சாட்டினார்.

    நேற்று பில்வாரா, பனேஷ்வர்தாம், கோட்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-



    காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு போதிய குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கி இருக்கலாம். பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு இருக்கிறது. ஆனால் கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலைகள், கழிவறை வசதிகள் கிடைக்கவில்லை.

    கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் பாரதீய ஜனதா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. ஏழைகளுக்கு வங்கி கணக்குகளை தொடங்கி இருக்கிறோம். கிராமப்புறங்களில் கழிவறைகளை கட்டி இருக்கிறோம். வீடுகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கி இருக்கிறோம். 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீள தார்ச்சாலைகளை அமைத்து இருக்கிறோம்.

    இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். (இதை அவர் கிண்டலாக கூறினார்.) அப்படி ஆட்சிக்கு வந்தால், சாலைகளுக்கு தார் கூட போட முடியாத நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள்.

    2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை எனது அரசாங்கம் உறுதி செய்யும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பாரதீய ஜனதா அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. இந்த மாநிலம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்ல மக்கள் பாரதீய ஜனதாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    எனது அரசின் தலைமையிலான ராணுவம் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி நாசப்படுத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனால் இதை நம்பாமல் காங்கிரஸ் ஆதாரம் கேட்கிறது. இதற்காக கமாண்டோ படையினர் கேமராக்களையா, உடன் கொண்டு செல்ல முடியும்?...

    அதேநேரம், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்று குவித்தனர். ஆனால் இப்போது காங்கிரஸ் துல்லிய தாக்குதல் பற்றி சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறது.

    பயங்கரவாதிகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் எனது அரசு தக்க பதிலடி கொடுக்கிறது. ஆனால் நக்சலைட்டுகளை காங்கிரஸ் புரட்சியாளர்கள் என்று அழைப்பதுடன் அவர்களை பாராட்டவும் செய்கிறது.

    மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன், மக்கள் நல திட்டங்கள் என்ற பெயரில் அரசுப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது. விதவைகள் ஓய்வூதியம், கல்வி உதவித் தொகை, மானியம், பெண்குழந்தைகள் ஆதரவு திட்டம் போன்ற பல்வேறு வகைகளில் போலியான குழுக்கள், முகமைகள், நிறுவனங்கள் மூலம் ரூ.90 ஆயிரம் கோடியை சுருட்டி இருக்கிறார்கள். பயனாளிகள் என்று போலியான பெயர்களை உருவாக்கி அவர்களுக்கு பணம் வழங்கியதாக மோசடி செய்து உள்ளனர். பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மோசடி தடுத்து நிறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நேற்று காலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் மும்பை தாக்குதல் பற்றி வேதனையுடன் நினைவுகூர்ந்து இருந்தார்.

    அதில், “மும்பை கொடூர தாக்குதலில் தங்களது உயிரை இழந்தோருக்கு வீர வணக்கம். நமது ஒற்றுமை என்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருடனேயே இருக்கும். பயங்கரவாதிகளை எதிர்த்து தீரத்துடன் சண்டையிட்ட போலீசார், பாதுகாப்பு படையினர் ஆகியோருக்கும் இந்த நாடு தலை வணங்குகிறது” என்று குறிப்பிட்டார். #Modicampaign #Telanganapolls #MPpolls 
    Next Story
    ×