என் மலர்
இந்தியா
- பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக ஆதார் பயன்படுகிறது.
- ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், 7 முதல்15 வயதுடைய குழந்தைகளுக்கான ஆதார் பயோ-மெட்ரிக் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 125 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண தள்ளுபடி கடந்த அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்ததாக ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு ஜெட் என்ஜின்களை ரஷ்யா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இது பிரதமர் மோடியினுடைய ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வியை காட்டுகிறது.
பாகிஸ்தானின் JF-17 போர் விமானங்களுக்கு மேம்பட்ட RD-93MA ஜெட் என்ஜின்களை ரஷ்யா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கூட்டாளியாக இருந்த ரஷ்யா, மத்திய அரசின் வேண்டுகோள்களை புறக்கணித்து, பாகிஸ்தான் நாட்டுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட JF-17 போர் விமானங்களுக்கு மேம்பட்ட RD-93MA இயந்திரங்களை வழங்குவதற்கான காரணத்தை மோடி அரசாங்கம் விளக்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூரின் போது நமது நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் போர் விமானங்களில் JF-17 கூட இருக்கலாம் என்றும் இந்திய விமானப்படை தலைவர் தலைவர் கூறியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் நேரடி தலையீடுகள் இருந்தபோதிலும் இந்த ஒப்பந்தம் முன்னேறி வருகிறது. இந்தியாவின் நீண்டகால மற்றும் நம்பகமான கூட்டாளியான ரஷ்யா இப்போது பாகிஸ்தானுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதற்கான காரணத்தை மத்திய அரசு நாட்டுக்கு விளக்க வேண்டும்.
இது பிரதமர் மோடியினுடைய ராஜதந்திரத்தின் மற்றொரு தோல்வியை காட்டுகிறது. பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்த இந்தியாவால் முடியவில்லை. பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீரை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகவும் அன்புடன் வரவேற்றார். தற்போது ரஷிய அதிபர் புதின் ஆயுதங்களை வழங்குகிறார்" என்று விமர்சித்துள்ளார்.
- 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்.
- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி::
மாயேம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரசுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது.
கடந்த சில ஆண்டாக எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் மொத்தமாக பா.ஜ.க.வுக்கு விநியோகித்து வருகிறது.
எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.வுக்கு மாற மாட்டார்கள் என கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?
2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர். 2022ம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்களை வழங்குவதற்கு சமமாகி விடும்.
கோவாவில் பா.ஜ.க. அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.
- வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.
- பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.
புதுடெல்லி:
இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார்.
வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
கெய்ர் ஸ்டார்மரும், மோடியும் 9-ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
பிரபல அசாமிய பாடகர் ஜூபின் கார்க் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த போது விபத்து ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை 38,000 பாடல்களைப் பாடி சாதனை புரிந்து அசாம் மக்களின் அன்பை சம்பாதித்தவர் இவர்.
கவுஹாத்தி அருகே கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை(செப். 23) தகனம் செய்யப்பட்டது. மறுபுறம் கார்க்கின் மரணம் விபத்து தானா என்பது குறித்த சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.
ஜூபின் கார்க் மரண வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி எம். பி. குப்தா தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அசாம் முதல்வர் ஹிமந்த பிச்வவா சர்மா அமைத்திருந்தார்.
இந்நிலையில், ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் எவரிடமேனும் இருந்தால், அதனை அவர்கள் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் மோடி திறந்து வைத்தார்.
- புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் வழங்கினார்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இந்த மாதம் அல்லது நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் வருகிற 6 அல்லது 7-ந்தேதி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று பல்வேறு திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று காலை நடைபெற்ற விழாவில் அவர் இளைஞர்களை மையமாக கொண்ட ரூ.62 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். அகில இந்திய அளவில் ஐ.டி.ஐ.யில் முதல் 46 இடங்களை பிடித்தவர்களை மோடி பாராட்டினார்.
ரூ.60,000 கோடி முதலீட்டில் மத்திய நிதியுதவி பெறும் திட்டமான பி.எம்-சேது (மேம்படுத்தப்பட்ட ஐ.டி.ஐ.கள் மூலம் பிரதமரின் திறன் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் செய்தல்) திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 1,000 அரசு ஐ.டி.ஐ.களை கொண்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில் பாட்னா, தர்பங்காவில் உள்ள ஐ.டி.ஐ.களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
400 நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் மோடி திறந்து வைத்தார். 1,200 தொழில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
பீகாரின் புதுப்பிக்கப்பட்ட முதல்-மந்திரியின் சுய உதவித்தொகை உறுதித் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை பெறுவார்கள். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பீகார் மாணவர் கடன் அட்டைத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்க பீகாரில் உள்ள ஜன் நாயக் கற்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பீகாரின் 4 பல்கலைக் கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 27,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கு இதில் பயன் கிடைக்கும்.
பீகாரில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் வழங்கினார். மேலும் முதலமைச்சரின் சிறார் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் 25 லட்சம் மாணவர்களுக்கு நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம் ரூ.450 கோடி உதவித்தொகையை பிரதமர் மோடி வழங்கினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அரசு ஐ.டி.ஐ மாணவர்களுக்கு பெரிய அளவில் பட்டமளிப்பு விழா என்ற புதிய பாரம்பரியத்தை தொடங்கியது. இந்த பாரம்பரியத்தில் மற்றொரு மைல் கல்லை நாம் அனைவரும் காண்கிறோம்.
இன்றைய விழா திறன்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. நாடு முழுவதும் இளைஞர்களுக்காக கல்வி மற்றும் திறன்மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 1,000 ஐ.டி.ஐ.களை மேம்படுத்துவதே எங்கள் இலக்காகும். பட்டதாரிகளுக்கு மாத உதவி தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதமாகும்.
பீகார் அதிக இளைஞர் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். எனவே, பீகாரின் இளைஞர்களின் ஆற்றல் அதிகரிக்கும் போது, நாட்டின் பலமும் இயல்பாகவே அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், பீகார் இளைஞர்களுக்கு சுமார் 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகள் வழங்கப்பட்டு உள்ளன. பீகார் இளைஞர்களின் திறனை மேலும் மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆர்.ஜே.டி-காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பீகாரின் கல்வி பட்ஜெட் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
பீகாரில் விளையாட்டு தொடர்பான சர்வதேச அளவிலான உள்கட்டமைப்பு கூட இல்லாத ஒரு காலம் இருந்தது. இன்று, பீகாரில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெய்ப்பூர் RUHS மருத்துவமனையில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற 'சேவா பக்கவாடா' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நோயாளிகளுக்குப் பழங்கள், பிஸ்கட்டுகள் விநியோகிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு பா.ஜ.க. பெண் தொண்டர் நோயாளிக்குக் கொடுத்த பிஸ்கட் பாக்கெட்டைப் புகைப்படம் எடுத்தவுடன் உடனடியாகத் திரும்பப் பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உதவி செய்வது போல நடித்த பெண் பாஜக தொண்டரின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
- ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கத்தை விஜய் மல்லையா வழங்கினார்.
- விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் பணிகளுக்காக 27 ஆண்டுகளுக்கு முன் தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய 30.3 கிலோ தங்கம் மாயமானதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 4, 1998 அன்று, சபரிமலையில் உள்ள கருவறை, கூரை மற்றும் துவாரபாலக சிற்பங்கள் ரூ. 18 கோடி செலவில் 30.3 கிலோ தங்கம் மற்றும் 1,900 கிலோ செம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்பட்டன.. இந்த தங்கத்தை தொழிலதிபர் விஜய் மல்லையாவால் பரிசாக அப்போது வழங்கினார்.
இந்நிலையில், சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 2 துவார பாலகர் சிலைகளில் இருந்த தகடுகளில் தங்கம் எதுவும் இல்லை, அவை செம்புத் தகடுகள் என பழுது பார்க்கும் நிறுவனம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுதி அளித்துள்ளது.
- பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு
- பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
கடந்த திங்களன்று அமெரிக்கா விரைந்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா அமைதி திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஆலோசித்து வந்த ஹமாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயிருடன் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளையும், இறந்த கைதிகளின் உடல்களையும் திரும்ப ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்டபடி, ஒருமித்த கருத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர் குழுவிடம் காசா பகுதியை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் திட்டத்தின் பிற விவரங்களை விவாதிக்க மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஹமாஸ் கூறியுள்ளது.
டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தில் உடனடி போர்நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகளை படிப்படியாக திரும்பப் பெறுதல், ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியலில் இருந்து வெளியேறுவது மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான காசா அமைதி ஒப்பந்த முயற்சிகள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களை அடைந்துவருவதை நாங்கள் வரவேற்கிறோம். நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.
- பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஒரு பெண்ணின் திருமணம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லி கிராமத்தில் ஆராதனா என்ற அந்த பெண்ணின் திருமணம் அண்மையில் நடைபெற்றது.
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வீரராக பணியில் இருந்த ஆராதனாவின் அண்ணன் ஆஷிஷ் குமார் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆபரேஷன் அலர்ட் நடவடிக்கையின்போது வீரமரணமடைந்தார்.
இந்நிலையில் அண்ணன் இன்றி ஆராதனா திருமணம் நடக்கக்கூடாது என்று கருதிய ஆஷிஷ் குமார் பணியாற்றிய படைப்பிரிவில் உடன் பணியாற்றிய வீரர்கள் இமாசலப் பிரதேசம் புறப்பட்டனர்.
ஆராதனாவுக்கு அண்ணனாக முன்னின்று அவர்கள் அனைத்துக் கடமைகளையும் செய்தனர். மணமகனை திருமண மேடைக்கு அழைத்துச் செல்வது, சடங்குகள் முடியும் வரை அருகில் நிற்பது, பின்னர் புகுந்த வீட்டுக்குச் செல்லும் போதும் கூடச் செல்வது வரை, பாரம்பரியமாக ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் வீரர்கள் செய்தனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சகோதரனின் பாசத்தையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் விதமாக, வீரர்கள் ஆராதனாவிற்கு திருமணப் பரிசாக நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) இருப்பை வழங்கினர்.
வீரர்களின் இந்த செயல், திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதுபற்றி வீரர்களிடம் கேட்கையில், "ஆராதனாவிற்கு அண்ணனாக நின்று ஆஷிஷின் நினைவைப் போற்றுவது எங்களது தார்மீகக் கடமை" என்று பதிலளித்தனர்.
- இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம்.
- கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்
இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, ராஜஸ்தானில் அனுப்கர் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆபரேசன் சிந்தூர் 2-ம் பாகம் வெகு தொலைவில் இல்லை.
இந்த முறை நாம் 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' போது கடைப்பிடித்த நிதானத்தை கடைப்பிடிக்க மாட்டோம். இந்த முறை நாம் ஏதாவது செய்வோம். அது பாகிஸ்தான், தான் உலக வரைபடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசிக்க வைக்கும்.
பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க விரும்பினால், அது அரசு ஆதரவு பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் விருப்பம் இருந்தது என்றால், உங்களுக்கு ஒரு சந்தரப்பம் விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 குறித்து திவேதி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
- 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங் பேசினார்.
- மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டது.
கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் பாகிஸ்தான் விமானங்களை இந்தியா தரப்பும், இந்திய விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பும் கூறி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங்,
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை தனது நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்தது மட்டுமல்லாமல், மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டதாகவும் கூறினார்.
விமானப்படை தனது நோக்கங்களை அடைந்தவுடன் உடனடியாக நடவடிக்கைகளை நிறுத்தியது, இது சர்வதேச அளவில் இந்தியாவின் பொறுப்பான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது என்றார்.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் போது இதற்கு நேர் மாறாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.






