என் மலர்
தேர்தல் செய்திகள்



கோவில்பட்டி:
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலையில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலானது ஜனநாயகத்துக்கும், பாசிசத்துக்கும் இடையே நடக்கிற யுத்தம் போன்றது. இங்கு அனைத்து மதத்தினரும் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். சைவமும், வைணவமும் இணைந்து தமிழை வளர்த்தது. தி.மு.க. எந்த சமயத்துக்கும் எதிரானது அல்ல. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு, மதம் என்ற பெயரில் பிற மதத்தினரை வாழ விடாமல் செய்வது நாட்டுக்கே பேராபத்தாக முடியும்.
பொறியியல் படித்த பல லட்சம் மாணவர்கள் உரிய வேலை கிடைக்கப் பெறாமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் குறைந்த சம்பளத்தில் ஏதேனும் வேலை செய்து பிழைக்கும் நிலை உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. இதனால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கப் பெறாமல் பாலைவனமாக மாறி விடும்.
பின்னர் அந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி, நிலத்தடியில் உள்ள மீத்தேன், ஹைட்டோ கார்பன் போன்ற எரிவாயுக்களை எடுப்பார்கள். இதன் மூலம் 5 ஆண்டுகளிலே தமிழகம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பியா நாட்டைப் போன்று மாறி விடும். தமிழகத்துக்கு இதுபோன்ற பேராபத்து இதுவரையிலும் வந்தது கிடையாது.
மத்திய பா.ஜனதா அரசு நீட் தேர்வை திணித்ததால், ஏழை மாணவர்களின் மருத்துவ கல்விக்கு கொள்ளி வைத்தனர். சமூக நீதி, இட ஒதுக்கீட்டால் வறுமையில் வாடிய ஏழைகளின் பிள்ளைகளும் உயர்கல்வி பெற்று, டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் சமுதாயத்தில் தலைசிறந்து வாழ்கின்றனர். இதனை மத்திய பா.ஜனதா அரசு அழிக்க முயற்சிக்கிறது.
தமிழக மக்களின் வாழ்வாதாரங்களை காக்க முயலாமல், மத்திய அரசுக்கு கைக்கூலியாக அ.தி.மு.க. அரசு உள்ளது. இந்த ஆண்டு ஆட்சி மாற்றங்களின் ஆண்டாக அமையும். பாசிச பா.ஜனதா ஆட்சியும், ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசும் அகற்றப்படும்.
தேர்தலில் வீடு வீடாக பல ஆயிரம் ரூபாய் வழங்கி வெற்றி பெற்று விடலாம் என்று அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். அவர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். மக்கள் தங்களை விற்க தயாராக இல்லை. பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை காக்க முயலாமல், அதில் தொடர்புடைய ஆளுங் கட்சியினரை காக்க அரசு முயலுகிறது. பெண்களின் உரிமைகளை காக்கவும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும் கனிமொழி குரல் கொடுத்து உள்ளார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பூந்தமல்லி:
குன்றத்தூர்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் நேற்று இரவு போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.53 லட்சம் இருந்தது. காரில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை வாங்கி தேனாம்பேட்டையில் உள்ள தனியார் வங்கிக்கு கொண்டு செல்வதாகவும், தாங்கள் தனியார் ஏஜென்சி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் அவர்களிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து ரூ.53 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LSPolls
அரியலூர்:
அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடி மீண்டும் வேண்டாம் என்ற முழக்கத்தோடு இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.
மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் மிகுந்த எச்சரிக்கையோடு விழிப்புணர்வோடு தேர்தலை நடத்த வேண்டும். மோடி ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தலில் மோடிக்கு ஆதரவாக எப்படி அலை வீசியதோ? அதே போல் இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக வெளிப்படையாக அலைவீசுகிறது. 40 தொகுதியிலும் நேரமிருந்தால் பிரசாரத்தை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #parliamentelection #tngovt
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மூலம் தமிழகம் செழிக்க உள்ளது. நாட்டிற்கு நிலையான வலிமையான பிரதமர் தேவை. அப்படிபட்ட பிரதமர் வருவதற்கு ஏ.சி.சண்முகம் வெற்றிபெற வேண்டும்.
தமிழகத்தில் நீண்டகால திட்டங்களை செயல்படுத்த அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்.
வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் தனது சொந்த செலவில் தொகுதி மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பேன்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 100 பேர் என 600 மாணவர்களுக்கு அவரது கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி அளிப்பேன் என உறுதியளித்துள்ளார்.
அ.தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. படிக்கின்ற மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறோம்.
மருத்துவ துறையில் தமிழகம் சாதனை படைத்துள்ளது. காப்பீடு திட்ட தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18 ஆயிரம் உதவிதொகை, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி குற்றங்களை கண்டு பிடிக்க முடியாமல் கடவுளை விமர்சனம் செய்துள்ளார்.
அவருக்கு சாமி மேல் நம்பிக்கை இல்லை என்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று விழுந்து விழுந்து சாமி கும்பிடுகின்றனர்.
கடவுள் வழிபாடு தனி மனித சுதந்திரம். மு.க.ஸ்டாலின் கடவுளை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம்.
உங்களை போல் கடவுள் இல்லை என்று மார்தட்டிக் கொண்டு வீட்டில் இருப்பவர்கள் சாமி கும்பிடும் நிலை எங்களிடம் இல்லை. நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். அந்தந்த மதங்களை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறது.
நான் ஏதோ கொலை செய்து விட்டேன், கொள்ளையடித்து விட்டேன் என மு.க.ஸ்டாலின் பேசுகிறார். கொடநாட்டில் நடந்த கொள்ளையை கண்டு பிடித்தது. அ.தி.மு.க. அரசு.

அதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தது தி.மு.க. இதன் மூலம் அந்த கொள்ளையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த சந்தேகத்தின் மீது அம்மாவின் அரசு விசாரணை மேற்கொள்ளும்.
மு.க.ஸ்டாலின் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் குற்றங்களை கண்டு பிடிக்க முடியாது.
ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் ஊழல்.
மத்தியில் நிலையான ஆட்சி தேவை. நாட்டின் பாதுகாப்பு கருதி. அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து ஆற்காடு, ராணிப்பேட்டையில் அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
மக்களுக்கு சேவை செய்வதற்காக அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்துள்ளோம்.
அ.தி.மு.க. அரசு பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகிறது. அவற்றுக்கு தீர்வு கண்டு வருகிறோம். அதனை எதிர்கொள்ளும் சக்தி எங்களுக்கு உள்ளது.
ஜெயலலிதா மறைந்தபோது ஸ்டாலின் ஆட்சியை கவிழ்க்க பார்த்தார். சட்டமன்றத்தில் டேபிள் மீது ஏறி நின்று நடனமாடினார்கள். புத்தகங்கள் மற்றும் சபாநாயகர் மைக்கை பிடுங்கி வீசினார்கள். இவர்களா மக்களை காப்பாற்ற போகிறார்கள்.
பொங்கலுக்கு ரூ.1000 வழங்கினோம். ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தோம். இதனை தி.மு.க. கோர்ட்டுக்கு சென்று தடுத்து நிறுத்த பார்க்கிறார்கள். ஏழைகளுக்கு பணம் கொடுப்பது என்ன தவறு. தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 100 நாள் வேலைதிட்டம் 200 நாட்களாக மாற்றப்படும்.
15 ஆண்டு மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனைகளை தீர்க்கவில்லை. புதிய திட்டங்கள் கொண்டு வரவில்லை. 2 ஏக்கர் இலவச நிலம் தருவேன் என்கிறார்கள். ஆனால் நில அபகரிப்பு செய்தார்கள். ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கொண்டுவந்து நிலங்களை மீட்டு கொடுத்தார்.
இஸ்லாமிய மக்களுக்கு அரணாக இருந்து பாதுகாப்பது அ.தி.மு.க. அரசு. மதிப்பூதியம் ரூ.20 ஆயிரம், நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி, சந்தன கூடு விழாவுக்கு சந்தனம், ஆகியவற்றை ஜெயலலிதா அரசு வழங்கி வருகிறது.
முத்தலாக் சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க. எம்.பிக்கள் குரல் கொடுத்தனர். இதனால் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு துணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார். #edappadipalanisamy #mkstalin
திருப்போரூர்:
காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து திருப்போரூர் பஸ் நிலையம் அருகே துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த மகா கூட்டணி. புரட்சித்தலைவி அம்மா மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அர்ப்பணித்து சிறப்பான ஆட்சி நடத்தியதை யாரும் மறக்கமுடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட உச்சநீதிமன்றம்வரை எடுத்துச்சென்று பல சட்டப் போராட்டங்களை நடத்தினார்.
மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தான் இலங்கையில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 5 லட்சம் பேர் கை, கால்கள் மற்றும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து நிற்கதியாயினர்.
கருணாநிதியின் கபட நாடகத்தால் போர் நின்று விட்டதாக அறிந்து பதுங்கு குழியிலிருந்து வெளியில் வந்த 40 ஆயிரம் குழந்தைகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி தி.மு.க.
அ.தி.மு.க.வின் 2011-16 ஆண்டு வரையிலான பொற்கால ஆட்சியில் விலையில்லா அரிசி, பசுமை வீடுகள், மற்றும் தொலை நோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனால் கிராமம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் குடிசைவீடுகள் அற்ற நிலை உருவாகிறது.
இதுவரை தமிழகத்தில் 16 லட்சம் குடிசைவீடுகள் கணக்கிடப்பட்டு 6 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. 2023-க்குள் அம்மா எண்ணப்படி தரமான வீடுகள் கட்டித்தரப்படும்.
இந்த இடைத்தேர்தல் எதனால் வந்தது கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் தன்னை வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு துரோகம் செய்தவர்கள்.
ஸ்டாலின் முதல்வராக வருவதற்கு பல்வேறு வேஷங்களை போடுகிறார். அவர் டீக்கடையில் டீ குடிக்கிறார். நான் டீக் கடையே நடத்தியவன். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்முறை கலாச்சாரம், காலூன்றி கொடிகட்டிபறக்கும்.
தமிழகத்தில் தீயசக்திகளை தலைதூக்க விடமாட்டோம். இது எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி. புரட்சித்தலைவியின் உழைப்பால் பல்வேறு சோதனைகள், பிரச்சனைகள் சதிகளை முறியடித்து இன்று ஒன்றரை கோடி பேர் உள்ள இயக்கமாக மாறி உள்ளது. இது எஃகு கோட்டை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார். #OPS #MKStalin
பெங்களூரு:
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பி தேர்தலில் டிக்கெட் கேட்டார். ஆனால் மாண்டியா தொகுதியை கூட்டணியான ஜே.டி. எஸ். கட்சிக்கு காங்கிரஸ் ஒதுக்கியது.
அங்கு முதல்வர் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுமலதா சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு அம்பரீஷின் ரசிகர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு ஆதரவாக காங்கிரசாரே உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு சுமலதா, பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூருவில் சந்தித்து பேசினார். அப்போது தன்னை பா.ஜனதா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. மாண்டியா தொகுதியை சுமலதாவுக்கு விட்டு கொடுத்துள்ளது.
இதனால் சுமலதாவுக்கும், முதல்வர் குமாரசாமி மகன் நிகிலுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பா.ஜனதா ஏற்கனவே 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மாண்டியா தொகுதியில் வேட்பாளரை நிறுத்த வில்லை. கோலார் தொகுதியில் எஸ்.முனிசாமியை வேட்பாளராக அறிவித்துள்ளது. இன்னும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜனதா அறிவிக்க வேண்டியுள்ளது. #Sumalatha #ParliamentElection
மதுரை:
தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேனி தொகுதியை பொறுத்தவரை பெரிய போட்டியாக கருதவில்லை. தேனி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க ஆட்சியின் மூலம் பல கஷ்டங்கள் தான் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்த வரையில் அ.தி.மு.க., பா.ஜ.க கட்சிகள் கூட்டணியை தோற்கடிக்க முடிவெடுத்துள்ளனர்.
ஆகவே நான் தேனி தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன், காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
நான் ஈரோடு, திருப்பூரில் வேட்பாளராக நிற்க விரும்பினேன். ஆனால் தோழமைக் கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை வழங்க வேண்டிய சூழல் அமைந்ததால் காங்கிரஸ் தலைமை என்னை தேனி தொகுதியில் போட்டியிட கேட்டுக் கொண்டது.
எனக்கும், எங்கள் குடும்பத்துக்கும் தமிழக மக்களுக்கும் உள்ள தொடர்பானது இறுக்கமானது.
அதனால் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் நின்றாலும் எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தேனி தொகுதி என்பது அ.தி.மு.க.வின் கோட்டை என்று கருதுபவர்களுக்கு அதைப்பற்றி எந்தக் கருத்தும் இல்லை.
ஜெயலலிதாவை நான் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளேன், ஆனால் அரசியல் ரீதியாக மட்டும் தான் விமர்சித்துள்ளேன்.
தனிப்பட்ட முறையில் ஒருமையில் அவரை விமர்சித்ததே கிடையாது. அரசியலில் ஜெயலலிதாவை நான் பல இடங்களில் பல நேரங்களில் விமர்சித்து இருந்தாலும் ஒரு பெண் சாதனையாளர் என்ற முறையில் எனக்கு ஜெயலலிதாவைப் பற்றி மிகுந்த மரியாதை உள்ளது.

கூட்டணி தலைவர்களை சந்தித்து அவர்களிடம் நேரம் கேட்டு நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்.
என் அருமை தம்பி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக உள்ள ரவீந்திரநாத்குமார் எனக்கு தேனி மக்களையும், அங்கு நடக்கும் பஞ்சாயத்துக்களும் தெரியாது என்று விமர்சித்துள்ளார்.
எனக்கு பஞ்சாயத்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் கட்டப்பஞ்சாயத்துக்கு நான் வரமாட்டேன். தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன, வைகை அணை தூர்வாறும் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது.
அது மட்டுமில்லாமல் தேனி மாவட்டத்தை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது, இது போன்ற காரியங்களில் தான் என்னை ஈடுபடுத்திக் கொள்வேனே தவிர மற்ற எந்த வித பஞ்சாயத்திலும் ஈடுபடமாட்டேன்.
தேனி தொகுதி மக்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பதை விட மிகச்சிறப்பாக செய்வேன். நியூட்ரினோ திட்டமாக இருந்தாலும் சரி, வேறு பல மத்திய அரசு திட்டங்கள் ஆக இருந்தாலும் சரி மக்களுக்கு பாதிப்பாக இருக்கும், விவசாய நிலங்கள் பாதிப்படையும் திட்டமாக இருந்தால் அவற்றை தடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #evkselangovan #congress #parliamentelection
நாகர்கோவில்:
மத்திய மந்திரியும், கன்னியாகுமரி பாராளு மன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கான தேசிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து உள்ளது. இன்று மேலும் 3 சட்டசபை தொகுதிகளுக்கான கூட்டம் நடைபெற உள்ளது.
நாளை மறுநாள் ஒட்டு மொத்த பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம் மாலை 4 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் இலகுவான வெற்றியை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனக்கு மட்டுமல்ல எங்கள் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளான தே.மு.தி.க., த.மா.கா. அனைத்துக்கும் உள்ளது.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக பொய் கூறி கடந்த முறை வெற்றி பெற்றுவிட்டதாக கூறுவது தவறு. இதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. 10 சதவீத இட ஒதுக்கீடு கூட அதன் அங்கம் தான். அரசியல் லாபத்திற்காக மற்றவர்கள் எதை வேண்டுமானாலும் கூறலாம்.
இந்த மண்ணின் மைந்தர்களான மார்சல் நேசமணி, பொன்னப்ப நாடார், சுவாமி தாஸ் என்று எண்ணற்ற தலைவர்கள் இந்த மண்ணில் வெற்றிபெற்றாலும், பெறா விட்டாலும் இதன் உயர்வுக்கும், வளத்திற்கும் உழைத்து உள்ளார்கள். அனைத்து திட்டங்களும் மக்கள் நலன் சார்ந்துதான் உள்ளது.
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு தாக்கல் செய்துள்ளதால் அங்கு வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அய்யாக்கண்ணு விவசாயிகள் பிரச்சினைக்காக போராடியபோது அவருக்கு துணை நின்றவன் நான். போராட்ட வழிமுறை மாறியபோது அது ஏற்புடையது இல்லாமல் ஆகிவிட்டது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இதுபோன்ற செயலை கைவிட வேண்டும்.
வடமாநிலங்களில் காங்கிரசுக்கு தோல்வி உறுதி என்று தெரியவந்துவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தி தென் மாநிலத்தை குறி வைக்கிறார். அதனால் தான் அவரது கட்சிக்காரர்கள் ராகுல் தென் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

அரசியலில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி வைப்பதும், பிறகு மாற்றிக் கொள்வதும் இயல்பு. அ.தி.மு.க.வை அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டதாக மு.க. ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல. அடகு என்ற வார்த்தையை இப்போது பயன்படுத்துவது தவறானது.
குமரி மாவட்டம் மட்டுமல்ல எல்லா ரப்பர் விவசாயிகளுக்காகவும் வெளிநாட்டில் இருந்து ரப்பர் இறக்குமதி பிரச்சினைப் பற்றி பேசி உள்ளோம். இங்குள்ள 6 எம்.எல்.ஏ.க்களும் எங்கு சென்று உள்ளனர். ரப்பர் பிரச்சினைக்காக அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரப்பர் பிரச்சினைக்காக சட்டசபையில் என்ன பேசி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #rahulgandhi
ஆற்காடு:
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து ஆற்காடு பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு தெளிந்த நீரோடை, அதனை அள்ளி பருகலாம். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைத்துள்ள கூட்டணி தேங்கி கிடக்கும் குட்டை ஆகும்.
அ.தி.மு.க.வில் சாமானியர்கள் கூட சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி, நான் டாக்டராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையும், பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையும் ஒத்த கருத்துகள் உடையது. தேர்தல் அறிக்கையில் உள்ள கருத்துக்களை நிறைவேற்றுவார்கள். நான் அவர்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பேன்.
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கைகளை தி.மு.க.வினர் காப்பி அடித்துள்ளனர். நாங்கள் தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிப்பதற்காக பல நல்ல திட்டங்களை கூறியிருக்கிறோம். மாணவர்களின் கல்வி கடன் மற்றும் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் கூறியிருக்கிறோம்.
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவோம். தற்போது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தி.மு.க.வினர் கூறுகின்றனர். ஆனால் 18 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்கள். எதையும் செய்யவில்லை. இவர்கள் போராடியது எல்லாம் தங்கள் கட்சிக்கு மத்தியில் நல்ல இலாகா வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். நமது பிள்ளைகள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியில் கூறியிருக்கிறோம்.
நூறாண்டுகளில் காங்கிரஸ் கட்சிதான் வாரிசு அரசியலை வளர்த்து வருகிறது. அதேபோல் இங்குள்ள குடும்ப அரசியலை மக்கள் வெறுத்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்தனர். அண்ணா ஏழையாக கட்சியை தொடங்கினார். ஏழையாகவே மறைந்தார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று ஏழைகளை ஒழிக்கிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியும், அ.தி.மு.க.வும் இணைந்து செயல்படுவதற்கு மாம்பழம் தான் சாட்சி, இரட்டை இலைதான் சாட்சி. அனைவரும் இணைந்து செயல்படுவோம். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சிகள். ஆனால் எதிரணியில் இருப்பவர்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #ramadoss #dmk






