என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது ஜெயலலிதா உண்மையிலேயே உயிருடன் தான் இருந்தாரா என்று திருவண்ணாமலையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #jayalalitha

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க.தலைவர் கருணாநிதி 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தேர்தல்களில் நின்று தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளார்.

    ஒரு முறை கூட தோல்வியை பெறாத அவர் வெற்றி பெற்ற சின்னம் தான் உதயசூரியன். அந்த சின்னத்தில் உங்களிடத்தில் நான் வாக்கு சேகரிக்க வந்து உள்ளேன். திருவண்ணாமலை என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான இடமாகும்.

    1957-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. களம்கண்டபோது 15 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் முதன்முதலாக நுழைந்தது. அதில் அறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி போன்றோர் இடம் பெற்று இருந்தனர். அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. அப்போது தி.மு.க. சார்பில் நின்ற 2 பேர் வெற்றி பெற்றார்கள். ஈ.வி.கே.சம்பத், திருவண்ணாமலையை சேர்ந்த தருமலிங்கம் ஆகியோர்தான் அவர்கள்.

    40 தொகுதியில் வெற்றி பெறும் தருணத்தில் திருவண்ணாமலையில் தான் அதிகமான அளவிற்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற போகிறோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    40 பாராளுமன்ற தொகுதிகள் மட்டுமின்றி 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கிறது. அந்த 18 தொகுதியிலும் வெற்றி பெற்று 100-க்கு 100 என்ற வெற்றி இலக்கை அடைய இருக்கிறோம்.

    தலைவர் கருணாநிதி திருவாரூரையும், திருவண்ணாமலையையும் ஒரு போதும் பிரித்து பார்த்தது கிடையாது. ஏனென்றால் திருவாரூரை போல திருவண்ணாமலையும் தி.மு.க.வின் கோட்டை தான். 1967-ல் ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம் அமைத்த ஊர் தான் திருவண்ணாமலை என்று பெருமையோடு கூறுகிறேன்.

    தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை எதிர்த்து நிற்க கூடிய ஆளுங்கட்சி வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். பிரசாரம் தற்போது சூடுபிடித்து கொண்டு இருக்கிறது.

    தி.மு.க.வை வன்முறை என்கிறார் ராமதாஸ். வன்முறையின் அடையாளமே பா.ம.க. தான் என்று நான் சொல்லவில்லை. சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா விரிவாக பேசி இருக்கிறார். மகாபலிபுரத்தில் பா.ம.க. நடத்தும் மாநாட்டை சுட்டிகாட்டி பா.ம.க. மறு பெயர் வன்முறை என்று ஜெயலலிதா பேசினார்.

    பா.ம.க. வன்முறை அற்றது என்று அமைச்சர் சி.வி.சண்முகத்தால் சொல்ல முடியுமா? ஸ்டாலின் திமிர் பிடித்தவர் என்று எடப்பாடி பேசி உள்ளார். நான் தான் கடவுள் என்று சொல்கிறார் எடப்பாடி. அந்த திமிர், ஆணவம் எங்கிருந்து வந்தது. என் வளர்ப்பு சரியில்லை எடப்பாடி சொல்லி உள்ளார். என்னை பற்றி பேச முதல் அமைச்சருக்கு என்ன அருகதை, தகுதி இருக்கிறது? என்னை பற்றி நாட்டிற்கு தெரியும். 15 வயதில் அரசியலுக்கு வந்தவன்.

    கொலை வழக்கில் இருந்து தப்பிக்க ஊரை விட்டு ஓடி ஒளிந்து, அரசியலில் நுழைந்து எங்களை காப்பாற்றி கொண்டு இருப்பவர்கள் நாங்கள் அல்ல. சசிகலா காலில் மண்புழு போல ஊர்ந்து ஆட்சிக்கு வந்த பரம்பரை போல் நான் வரவில்லை.

    இன்று அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பொல்லாத ஆட்சிக்கு உதாரணம் பொள்ளாச்சி. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் போஸ் என்பவர் வெற்றி செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த தேர்தல் நடைபெற்ற நேரத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இடைத்தேர்தலின் போது அந்த கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது. ஆனால் சின்னத்தை ஒதுக்கும் நேரத்தில் தலைவரோ, பொது செயலாளரோ படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவால் கையெழுத்து போட முடியாததால் கை ரேகை வைக்கப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பு வந்துள்ளது. அந்த கைரேகை ஜெயலலிதாவுடையது அல்ல என்று தீர்ப்பு வந்தது. இதை எப்படி தேர்தல் கமி‌ஷன் அனுமதித்தது.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போதே ஜெயலலிதா உண்மையிலேயே உயிருடன் தான் இருந்தாரா என்ற சந்தேகம் தற்போது வருகிறது. இதற்கு தொடர்ந்து முறையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

    தொடர்ந்து நாங்கள் சொல்கிறோம். உயிரிழந்தது ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர். அதில் மர்மம் உள்ளது. இந்த சம்பவத்தை மூடி மறைக்கின்றனர். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு திட்டங்களை தீட்டுகிறோம். மக்களுக்கு வேண்டிய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம்.

    மேலும் முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. இதை கண்டுபிடித்து அதற்கு யார் உடந்தையாக இருந்தார்களோ அவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம். அது மட்டுமின்றி இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேருக்கும் தண்டனை பெற்று தருவது தான் இந்த ஸ்டாலினின் முதல் வேலையாக இருக்கும்.

    தேர்தல் அறிக்கையை நாம் தயாரித்து வெளியிட்ட போது சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தோம். இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. என்னவென்றால் இதில் அனைத்து வகை விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். இந்ததேர்தல் அறிக்கை பல்வேறு உறுதி மொழிகள் உள்ளது. இந்த உறுதி மொழி வெறும் தேர்தலுக்காக என நினைக்க கூடாது. நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #jayalalitha

    தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரு, தெருவாக பணத்தை அள்ளி இரைக்கிறார்கள் என்று தங்க. தமிழ்ச்செல்வன் புகார் தெவித்துள்ளார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    குன்னம்:

    பெரம்பலூரில் அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் எனக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளும் கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். எங்கள் கட்சியை நசுக்க பார்க்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள். தெரு, தெருவாக ரோட்டில் பணத்தை போட் டுக்கொண்டே போகிறார்கள். அந்த அளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. ஆனால் போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள்.


    கலெக்டர் இதனை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர் போனது எங்கள் இயக்கத்திற்கு பெரிய இழப்பு இல்லை. தேனி பகுதியில் 25 ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்.

    பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்க முடியாது. பணத்தை கொடுத்தால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள். மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம், அதிகாரத்தை வைத்து வெற்றி பெற முடியாது. பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டது அ.ம.மு.க. மட்டுமே தான். எத்தனை ஆண்டுகளாக ஜாக்டோஜியோ அமைப்பினர் போராடுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சியும் ஏன்? அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை.

    எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி உள்ளது. தற்போது மிகப் பெரிய அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் ஓட்டு போட்டு தருவார்கள்.

    புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் பேசக்கூடாது என தடை போட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசி வருகின்றனர். இது தேர்தல் விதிமீறல்.

    இதனால் முதல்வர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவிருக்கிறதா? 100 சதவீதம் குக்கர் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். குக்கர் சின்னம் கிடைக்கா விட்டால் தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் டி.டி.வி. அலை வீசுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    துரோகிகளுடன் சேருவதைவிட கடலில் குதிக்கலாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மத்திய சென்னை தொகுதியில் பிரசாரம் செய்தார். அவர் மண்ணடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    வரும் 25-ந்தேதி அன்று நமது கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் வழங்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர இருக்கின்ற காரணத்தினால் 26-ந்தேதிக்கு பிறகுதான் கழக வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்கின்ற சூழ்நிலை உள்ளது.

    இன்றைக்கு தொலைக்காட்சிகளில் பார்த்தால் ஒரு மெகா கூட்டணி பற்றி சொல்கிறார்கள். இன்னொன்று பயில்வான் கூட்டணி பற்றி சொல்கிறார்கள், கூட்டணி என்றால் இன்றைக்கு நாம் அமைத்திருக்கிறோமே இயற்கையாக எந்த ஒரு பேரமும் இல்லாமல் பாசத்துடன் அரசியலையும் தாண்டி, தமிழ்நாடு மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டிருக்கின்ற கூட்டணி.

    இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் கூட்டணி அமைத்தவர்களின் வெற்றி தோல்வி என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரிய வரும். ஆனால் இந்த கூட்டணி அமைந்தவுடன் தேர்தல் முடிவுக்கு முன்பாகவே இது தோல்வி பெற்று விட்டது என்று தமிழக மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    18 தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பழனிசாமி அணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். 8 தொகுதியில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனில் இந்த ஆட்சி தானாக முடிவுக்கு வரும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

    எனவேதான் சொல்கிறேன், தமிழக மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற நல்லதொரு வாய்ப்பாக, இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது.

    தமிழகத்தை வஞ்சிக்கின்ற மோடியை ஒரு வழி செய்திட, மோடியை வீட்டுக்கு அனுப்ப தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டம் என்றாலும் சரி, கடுமையான புயல் தாக்கினாலும் சரி, தூத்துக்குடியில் 14 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தாலும் சரி அதை கண்டு கொள்ளாத மோடி, தேர்தல் என்று வந்தவுடன் 4 வாரங்களுக்குள் 4 முறை வந்து சென்றுவிட்டார்.

    இன்னும் எத்தனை முறை வந்து செல்வார் என்று எண்ணிப்பாருங்கள். தேர்தலுக்காக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்று மத்தியில் ஆட்சி செய்யும் மோடி வருகிறார். அதனால்தான் அன்றைக்கு அம்மா மோடியா, லேடியா நிர்வாகத்தில் சிறந்தவர் என்று கேள்வி எழுப்பினார்.

    மோடி சொன்ன எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

    தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ யாரை நம்பி வாக்களித்தால் தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதை தமிழக மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    கணக்கு பாடத்தில் வேண்டுமென்றால் 7, 3-ம் கூட்டினால் 10 என்று வரும். தேர்தல் களத்தில் கூட்டணி அமைப்பதால் வெற்றி என்பது 7, 3-ம் கூட்டினால் பூஜ்ஜியம் என்று வரும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஆர்.கே. நகர் தொகுதி முடிவு அமைந்தது.

    இந்த துரோகிகளிடம் சேருவதைவிட கடலில் குதிக்கலாம். இவர்கள் எங்களுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கே துரோகம் செய்தவர்கள். இவர்களுடன் என்றைக்கும் சேர வாய்ப்பில்லை.

    அங்கு எஞ்சியுள்ளவர்கள் இந்த தேர்தல் முடிந்தவுடன் எங்களுடன் வந்து சேருவார்கள் என்பதுதான் உண்மை. 33 ஆண்டுகள் அம்மாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். என்றைக்கும் எவரிடமும், யாரிடமும் சமரசம் என்ற வார்த்தைக்கு எங்கள் அகராதியில் இடமில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    சிவகங்கை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாததற்கு இதுதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019
    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் (தமிழ்நாடு-9, புதுச்சேரி-1) 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிவகங்கையைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரியிடம் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் ஏன் அறிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்குப் பதில் அளித்த கேஎஸ் அழகிரி ‘‘ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளார். அதனால் இந்தியா முழுவதும் சிவகங்கை உள்பட 40 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்று சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்’’ என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேஎஸ் அழகிரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள அ.தி.மு.க.வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்துவிட்டார் என்று அரூர் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #MKStalin #EdappadiPalanisamy
    தர்மபுரி:

    தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி, அரூர் (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கிரு‌‌ஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரி மேட்டில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இங்கு கூடியுள்ள கூட்டத்தில் கால்வாசி கூட்டம் கூட அவர்களுக்கு கூடவில்லை. திறந்தவெளி வேனில் காலியாக உள்ள சாலைகளில் முதல்-அமைச்சர் பிரசாரம் செய்கிறார். சேலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தன்னை நம்பி அ.தி.மு.க.வை விட்டு சென்று உள்ளதாக பேசி உள்ளார்.

    ஆனால் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மறந்த எடப்பாடி பழனிசாமி மோடியையும், அமித்‌ஷாவையும் தெய்வமாக வணங்கி கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை அமித்‌ஷாவிடம் அடகு வைத்துவிட்டார். மார்வாடி கடையில் நகையை அடகு வைத்தால் மீட்டுவிடலாம். ஆனால் அமித்‌ஷாவிடம் அடகு வைத்த கட்சியை மீட்க முடியாது. தன் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றச்சாட்டில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவே எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவை அமித்‌ஷாவிடம் அடகு வைத்து உள்ளார்.



    அ.தி.மு.க.வின் கதை என்று பல்வேறு கோணங்களில் விமர்சனம் செய்து ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டவர் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவை திட்டி தீர்த்து புத்தகம் எழுதியவரிடம் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்து உள்ளார். இவர் எப்படி ஜெயலலிதா வழியில் செயல்படுவார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்று கேள்வி கேட்டவர் ஜெயலலிதா. தற்போது அதை மறந்து விட்டு தங்களை காப்பாற்றிக்கொள்ள கட்சியை அடமானம் வைத்துவிட்டு பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து உள்ளனர்.

    இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு மெகா கூட்டணி அமைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். மெகாகூட்டணி என்ற பெயரில் மோசமானவர்கள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி நடந்தால் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். தற்போதே அந்த நிலை இருக்கும்போது அவ்வாறு கூறுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க. அரசு முகம் சுளிக்காத அளவிற்கு ஆட்சி நடத்துவதாக கூறினார். அவருடைய இந்த பேச்சை கேட்டு தமிழக மக்கள்தான் முகம் சுளிக்கிறார்கள். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று கூறி 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்கு போட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், முதல்-அமைச்சரிடம் கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகளில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தவில்லை.

    இந்த கூட்டணி மூலம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது கம்பீரம் மற்றும் கவர்ச்சியை இழந்து விட்டார். அவர் மனப்பூர்வமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இன்னும் வேட்புமனுவை வாபஸ் பெற காலஅவகாசம் இருக்கிறது. எனவே அன்புமணிராமதாஸ் தனது வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #MKStalin #EdappadiPalanisamy
    தனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பாரதிய ஜனதாவுக்கு உரிமை கிடையாது என தமிழிசை கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். #Kanimozhi #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி பேச முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு உள்ளார். கனிமொழி பேசுவதற்கு உரிமை நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பெரியார், அண்ணா பெற்றுத் தந்து இருக்கக்கூடிய உரிமை. இதில் கை வைக்கக்கூடிய அதிகாரம் பா.ஜனதாவுக்கு கிடையாது.



    இங்கே மேடையில் இருக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களும், தி.மு.க. என்ற மாபெரும் இயக்கமும் என்னுடன் உள்ளது. ஆகையால் என்னுடைய கருத்து சுதந்திரத்தை பற்றி நான் பேசவில்லை. மாணவி சோபியாவின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதே? அதைப்பற்றி கேட்கிறேன். பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #TamilisaiSoundararajan
    பாராளுமன்ற தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது. அந்த சாதனைகளை கூறி நாங்கள் வாக்கு கேட்போம்.

    கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முதல் நபராக நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். எங்கள் அணிதான் மிகப்பெரிய வெற்றியை பெறும். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். கடந்த முறை தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஹெலிகாப்டர் தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களுக்கு வேலைக்காரனாக உள்ள என்னிடம் அதிகம் எதிர் பார்க்கிறார்கள். அதை நிச்சயம் நான் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜான் தங்கம் (மேற்கு), அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்து பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகளை பெற்று தரும் அ.தி.மு.க. நிர்வாகிக்கு 5 பவுன் தங்க சங்கிலி பரிசாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அ.தி.மு.க. நிர்வாகிக்கு 3 பவுன் தங்க சங்கிலி, 3-வது இடத்தை பிடிப்பவருக்கு 1 பவுன் மோதிரமும் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் தெரிவித்து உள்ளார். #ponradhakrishnan #bjp #parliamentelection

    மத்திய மந்திரி உமா பாரதியை பாரதிய ஜனதாவின் தேசிய துணைத் தலைவராக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார். #UmaBharti #BJPvicepresident
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிவித்தார். எனினும், இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    சுஷ்மா சுவராஜை தொடர்ந்து, உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும் மத்திய குடிநீர், வடிகால்துறை மந்திரியுமான உமா பாரதி ’எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் ஆலோசனை குழு கூட்டத்திலும் அக்கட்சி தலைமையிடம் தனது கருத்தை உமா பாரதி வலியுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து, உமா பாரதியை பாரதிய ஜனதாவின் தேசிய துணைத் தலைவராக அக்கட்சியின் தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார். டெல்லியில் இன்றிரவு 46 பாஜக வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.பி.நட்டா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார். #UmaBharti #BJPvicepresident
    காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி அனந்த்நாக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
    ஜம்மு:

    87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 25 இடங்களையும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும் இதர கட்சிகள் 6 இடங்களையும் பிடித்தன.

    அங்கு ஆட்சி அமைக்க 44 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த 1-3-2015 அன்று ஆட்சி அமைத்தது. பி.டி.பி. எனப்படும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல் மந்திரியாகவும், பா.ஜ.க. தரப்பில் நிர்மல் சிங் துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றனர். 

    முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் பிடிபி - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சமீபகாலமாக ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து மோதல் இருந்துவந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில சட்டசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் டெல்லி வரும்படி பா.ஜ.க. தலைவர் அழைப்பு விடுத்தார். இன்று எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது.

    தேசிய அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த இந்த அறிவிப்புக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அங்கு பத்து மாதங்களாக ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 6-ம் தேதிவரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிடப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று தெரிவித்துள்ளார். #MehboobaMufti #LokSabhaelection #Anantnagseat
    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நாள் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படுகிறது. வாக்காளர்களுக்கு பணமோ, அன்பளிப்போ அரசியல் கட்சியினர் கொடுக்கிறார்களா என்பது கண்காணிக்கப்படுகிறது. இரவு பகலாக பறக்கும் படையினர் கார், பஸ், வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி சென்றால் கூட அவர்களை நிறுத்தி உடமைகளை ஆய்வு செய்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் ஒரே நாளில் ரூ.11 கோடி ரொக்கம் சிக்கியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட பணத்தை போலீசார் கைப்பற்றி கருவூலத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதேபோல் 33 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:-

    சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடந்த வாகன சோதனையில் காரில் கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ தங்கம் சிக்கியது. இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. பூக்கடை பகுதியில் நடத்திய சோதனையில் 2 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் ரூ.30 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    புரசைவாக்கத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.31 லட்சம் கைப்பற்றப்பட்டது. பெரம்பூரில் வக்கீல் அருள் பிரகாசம் என்பவரிடம் ரூ.4 லட்சம் கைப்பற்றப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 கிலோ தங்கம் ரூ.66 லட்சம் மற்றும் 83 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 83 லட்சம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் தாரமங்கலத்தில் உள்ள ஓட்டல் அதிபரிடம் இன்று காலை ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. சேலம் செவ்வாப்பேட்டையில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு சென்ற 13 கிலோ வெள்ளி, வாகன சோதனையில் பிடிபட்டது.

    திருச்சியில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம் வாகன சோதனையில் சிக்கியது. அதில் ரூ.4½ கோடி இருந்துள்ளது. உரிய ஆவணம் இல்லாததால் கருவூலத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்துடன் இன்று பிடிபட்டார்.

    தேனியில் நடந்த சோதனையில் தனியார் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.60 லட்சம் கைப்பற்றப்பட்டது. உரிய ஆவணம் இல்லாததால் அதனை அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகரில் நடந்த சோதனையில் முட்டை வியாபாரி குருசாமியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

    தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடியே 64 லட்சம் கைப்பற்றப்பட்டது. 2 வேன்களில் தனியார் வங்கி ஏ.டி.எம்.மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் பிடிபட்டது. வங்கி பணத்தை எடுத்து சென்ற போது உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூரை அடுத்த ஈச்சயகுடியில் நடந்த சோதனையில் வேனில் கொண்டு சென்ற ரூ.17 லட்சம் சிக்கியது. ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்றாலும் உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. பாபநாசம் அருகில் நடந்த சோதனையில் ரூ.8 லட்சம் சிக்கியது.

    நாகை மாவட்டம் சீர்காழியில் நடந்த வாகன சோதனையில் ராஜசேகர் என்பவரிடம் ரூ.3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1 கோடியே 45 லட்சம் சிக்கியது. கோபி செட்டிபாளையம் கோவில் உண்டியல் பணத்தை கொண்டு சென்ற போது உரிய ஆவணமின்றி பிடிபட்டது. இன்று காலையில் நம்பியூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நடந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் பிடிபட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சத்து 61 ஆயிரமும், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.5 லட்சத்து 27 ஆயிரமும் உரிய ஆவணம் இல்லாமல் கைப்பற்றப்பட்டது. சாத்தான்குளத்தில் அதிகாலை நடந்த வாகன சோதனையில் மணிராஜ், ஜெனிபன் ஆகியோரிடம் ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

    திருவண்ணாமலையில் நடந்த சோதனையில் மலேசியாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் சிக்கினர். 2 வேன்களில் வந்த அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கையில் அதிக பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக உரிய ஆவணத்துடன் எடுத்து செல்லலாம்.
    பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulmocksModi #chowkidar #chowkidarcampaign
    பாட்னா:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய், விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? என்று உங்களுக்கு அவர் எப்போதாவது விளக்கம் அளித்திருக்கிறாரா?

    தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது செய்திருக்கிறாரா? 

    நான் உங்கள் காவலாளி என்று கூறும் மோடி இந்த நாட்டின் பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார். பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரபல தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரை சகோதரர்களே என்று அழைத்து சகோதரர்களைப்போல் நடத்தும் மோடி, உங்களைப்போன்ற சாமான்ய மக்களை நண்பர்களே என்று அழைக்கிறார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பலகாலமாக கஷ்டப்பட்டு பெண்கள் சேமித்து வைத்திருந்த பணம்கூட பறிக்கப்பட்டது. வசதி படைத்தவர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய முடிந்த மோடி அரசால் ஏழை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் போனது ஏன்?

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தோம். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலையாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம்.

    அதேபோல், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நிதியுதவி திட்டத்தை நிச்சயமாக நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RahulmocksModi #chowkidar #chowkidarcampaign
    தேர்தல் பிரசாரம் நிறைவுபெறும் நாளான ஏப்ரல் 16-ந்தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LSPolls #SathyaPrathaSahoo #ElectionCampaign
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 21-ந்தேதி மட்டும் ரூ.5 கோடியே 21 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை மொத்தம் ரூ.19 கோடியே 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 18 ஆயிரத்து 980 கைத்துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    சிவிஜில் செயலி மூலம் தமிழகத்தில் இதுவரை 657 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 77 ஆயிரத்து 977 அரசு கட்டிடங்களின் சுவர்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள், பிரசார விளம்பர தட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டு 233 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தனியார் சுவர்களில் வரையப்பட்ட 1 லட்சத்து 43 ஆயிரத்து 930 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு 148 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட விளம்பரத்துக்கான செலவு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும்.

    பொதுமக்கள் ரூ.50 ஆயிரம் வரை ரொக்கப் பணம் கொண்டு சென்றால் ஆவணங்கள் வைத்திருக்க தேவையில்லை. அதற்கு மேல் எடுத்துச்செல்லும் போது அந்த பணத்துக்கான ஆவணங்களான ஏடிஎம் சீட்டு, வங்கி காசோலை விவரம், வங்கியில் பணம் எடுத்ததற்கான விவரங்களை வைத்திருக்க வேண்டும்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து ஏப்ரல் 16-ந் தேதி மாலை 6 மணிவரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்யலாம். மதுரையில் மட்டும் அன்று இரவு 8 மணி வரை பிரசாரம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SathyaPrathaSahoo #ElectionCampaign
    ×