search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் தேர்தலின் போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா?- மு.க.ஸ்டாலின் கேள்வி
    X

    திருப்பரங்குன்றம் தேர்தலின் போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா?- மு.க.ஸ்டாலின் கேள்வி

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது ஜெயலலிதா உண்மையிலேயே உயிருடன் தான் இருந்தாரா என்று திருவண்ணாமலையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #jayalalitha

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க.தலைவர் கருணாநிதி 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தேர்தல்களில் நின்று தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளார்.

    ஒரு முறை கூட தோல்வியை பெறாத அவர் வெற்றி பெற்ற சின்னம் தான் உதயசூரியன். அந்த சின்னத்தில் உங்களிடத்தில் நான் வாக்கு சேகரிக்க வந்து உள்ளேன். திருவண்ணாமலை என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான இடமாகும்.

    1957-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. களம்கண்டபோது 15 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் முதன்முதலாக நுழைந்தது. அதில் அறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி போன்றோர் இடம் பெற்று இருந்தனர். அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. அப்போது தி.மு.க. சார்பில் நின்ற 2 பேர் வெற்றி பெற்றார்கள். ஈ.வி.கே.சம்பத், திருவண்ணாமலையை சேர்ந்த தருமலிங்கம் ஆகியோர்தான் அவர்கள்.

    40 தொகுதியில் வெற்றி பெறும் தருணத்தில் திருவண்ணாமலையில் தான் அதிகமான அளவிற்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற போகிறோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    40 பாராளுமன்ற தொகுதிகள் மட்டுமின்றி 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கிறது. அந்த 18 தொகுதியிலும் வெற்றி பெற்று 100-க்கு 100 என்ற வெற்றி இலக்கை அடைய இருக்கிறோம்.

    தலைவர் கருணாநிதி திருவாரூரையும், திருவண்ணாமலையையும் ஒரு போதும் பிரித்து பார்த்தது கிடையாது. ஏனென்றால் திருவாரூரை போல திருவண்ணாமலையும் தி.மு.க.வின் கோட்டை தான். 1967-ல் ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம் அமைத்த ஊர் தான் திருவண்ணாமலை என்று பெருமையோடு கூறுகிறேன்.

    தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை எதிர்த்து நிற்க கூடிய ஆளுங்கட்சி வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். பிரசாரம் தற்போது சூடுபிடித்து கொண்டு இருக்கிறது.

    தி.மு.க.வை வன்முறை என்கிறார் ராமதாஸ். வன்முறையின் அடையாளமே பா.ம.க. தான் என்று நான் சொல்லவில்லை. சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா விரிவாக பேசி இருக்கிறார். மகாபலிபுரத்தில் பா.ம.க. நடத்தும் மாநாட்டை சுட்டிகாட்டி பா.ம.க. மறு பெயர் வன்முறை என்று ஜெயலலிதா பேசினார்.

    பா.ம.க. வன்முறை அற்றது என்று அமைச்சர் சி.வி.சண்முகத்தால் சொல்ல முடியுமா? ஸ்டாலின் திமிர் பிடித்தவர் என்று எடப்பாடி பேசி உள்ளார். நான் தான் கடவுள் என்று சொல்கிறார் எடப்பாடி. அந்த திமிர், ஆணவம் எங்கிருந்து வந்தது. என் வளர்ப்பு சரியில்லை எடப்பாடி சொல்லி உள்ளார். என்னை பற்றி பேச முதல் அமைச்சருக்கு என்ன அருகதை, தகுதி இருக்கிறது? என்னை பற்றி நாட்டிற்கு தெரியும். 15 வயதில் அரசியலுக்கு வந்தவன்.

    கொலை வழக்கில் இருந்து தப்பிக்க ஊரை விட்டு ஓடி ஒளிந்து, அரசியலில் நுழைந்து எங்களை காப்பாற்றி கொண்டு இருப்பவர்கள் நாங்கள் அல்ல. சசிகலா காலில் மண்புழு போல ஊர்ந்து ஆட்சிக்கு வந்த பரம்பரை போல் நான் வரவில்லை.

    இன்று அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பொல்லாத ஆட்சிக்கு உதாரணம் பொள்ளாச்சி. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் போஸ் என்பவர் வெற்றி செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த தேர்தல் நடைபெற்ற நேரத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இடைத்தேர்தலின் போது அந்த கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது. ஆனால் சின்னத்தை ஒதுக்கும் நேரத்தில் தலைவரோ, பொது செயலாளரோ படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவால் கையெழுத்து போட முடியாததால் கை ரேகை வைக்கப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பு வந்துள்ளது. அந்த கைரேகை ஜெயலலிதாவுடையது அல்ல என்று தீர்ப்பு வந்தது. இதை எப்படி தேர்தல் கமி‌ஷன் அனுமதித்தது.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போதே ஜெயலலிதா உண்மையிலேயே உயிருடன் தான் இருந்தாரா என்ற சந்தேகம் தற்போது வருகிறது. இதற்கு தொடர்ந்து முறையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

    தொடர்ந்து நாங்கள் சொல்கிறோம். உயிரிழந்தது ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர். அதில் மர்மம் உள்ளது. இந்த சம்பவத்தை மூடி மறைக்கின்றனர். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு திட்டங்களை தீட்டுகிறோம். மக்களுக்கு வேண்டிய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம்.

    மேலும் முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. இதை கண்டுபிடித்து அதற்கு யார் உடந்தையாக இருந்தார்களோ அவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம். அது மட்டுமின்றி இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேருக்கும் தண்டனை பெற்று தருவது தான் இந்த ஸ்டாலினின் முதல் வேலையாக இருக்கும்.

    தேர்தல் அறிக்கையை நாம் தயாரித்து வெளியிட்ட போது சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தோம். இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. என்னவென்றால் இதில் அனைத்து வகை விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். இந்ததேர்தல் அறிக்கை பல்வேறு உறுதி மொழிகள் உள்ளது. இந்த உறுதி மொழி வெறும் தேர்தலுக்காக என நினைக்க கூடாது. நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #jayalalitha

    Next Story
    ×