என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்கும் நேரம் வந்து விட்டது என்று பிரதமர் மோடியை தாக்கி ‘டுவிட்டர்’ பக்கத்தில் பா.ஜனதா எம்.பி.யான நடிகர் சத்ருகன் சின்கா கருத்து தெரிவித்துள்ளார். #ShatrughanSinha #BJP
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக உள்ள நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று அவர் பிரதமர் மோடியை தாக்கி ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து வெளியிட்டார்.



    அவர் கூறியிருப்பதாவது:-

    காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல் இருக்கிறது.

    ‘காங்கிரஸ் இல்லா பாரதம்’ உருவாக்கும் உங்கள் வாக்குறுதி என்ன ஆனது? மற்ற வாக்குறுதிகள் போல் காற்றோடு போய்விட்டதோ? கவலைப்படாதீர்கள். எல்லா இடத்திலும் காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்க நேரம் வந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ShatrughanSinha #BJP

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #RahulGandhi
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதியின் நாயகன்.

    அவர் உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட்டு 2004, 2009, 2014 என கடந்த 3 பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிக்கனி பறித்து சுவைத்திருக்கிறார்.

    இந்த தேர்தலிலும் அவர் அங்கே வழக்கம் போல களம் இறங்கி இருக்கிறார். கூடவே தங்கை பிரியங்கா பக்க பலமாக நின்று கொண்டிருக்கிறார்.

    இந்த தொகுதி ராகுல் காந்தியின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.

    கடந்த 1980-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் ஏழாவது பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் சித்தப்பா சஞ்சய் காந்தி வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்தார். அவர் விமான விபத்தில் இறந்து விடவே, அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

    அந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தொடர்ந்து 8, 9, 10-வது பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று அந்த தொகுதியை தக்க வைத்திருந்தார்.

    1991-ம் ஆண்டு அவர் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் பலி ஆனார். அதைத் தொடர்ந்து அமேதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சதீஷ் சர்மா போட்டியிட்டு வென்றார். 1996-ல் நடந்த 11-வது பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.

    1998-ல் நடந்த 12-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியின் டாக்டர் சஞ்சய்சிங் வெற்றி பெற்றார். சதீஷ் சர்மா தோற்றுப்போனார்.

    ஆனால் 1999-ல் நடந்த 13-வது பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி முதன்முதலாக அங்கு கால் பதித்து வெற்றி பெற்றார். ஆனால் அடுத்து 2004-ல் நடந்த 14-வது பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி, தனது மாமியார் இந்திரா காந்தியின் ரேபரேலி தொகுதிக்கு மாறி, அமேதியை மகன் ராகுலுக்கு விட்டுத்தந்தார்.

    அதில் இருந்து 2004, 2009, 2014 என தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ அடித்தார்.

    நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி அமேதி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளபோதும், அவர் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை, அங்கு காங்கிரஸ் கட்சியில் வலுப்பெற்றுள்ளது.



    இதற்கு காரணம் அமேதி தொகுதியில் மீண்டும் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி களம் இறக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான். வலுவான போட்டியை ராகுல் காந்தி எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. எனவே அவர் இந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வந்துள்ள நிலையில, அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடுவது பாதுகாப்பாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

    ஏனென்றால் அமேதியில் 2004 தேர்தலில் ராகுல் காந்திக்கு 66.18 சதவீத ஓட்டு கிடைத்தது; 2009 தேர்தலில் அதை விட அதிகமாக 71.78 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் 2014 தேர்தல், ராகுல் காந்திக்கு சோதனையாக அமைந்தது.

    அந்த தேர்தலில் ராகுலுக்கு கிடைத்த ஓட்டு 36.71 சதவீதம்தான். அவரை எதிர்த்து பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானிக்கு 34.38 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அப்போது நடிகை என்ற அந்தஸ்துதான் ஸ்மிருதி இரானிக்கு இருந்தது. இப்போது அவர் மத்திய மந்திரி என்கிறபோது அவரது செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது.

    அப்படிப்பட்ட நிலையில், அமேதியில் ராகுல் காந்தியின் வெற்றி எளிதாக இருக்காது. மிகக் கடுமையான போட்டியை அவர் எதிர்கொண்டாக வேண்டும்.

    இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸ் கட்சிக்கு சாதமாக உள்ள கேரளாவில், வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரசார் விரும்புகிறார்கள். இதை அவரும் பரிசீலிக்காமல் இல்லை.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சித்திக் என்பவர் களம் இறங்க இருந்தார். ராகுல் காந்தி போட்டியிடப்போகிறார் என்ற தகவல் வெளியானதும் அவர் விலகிக்கொண்டு வழி விட்டிருக்கிறார்.

    புதிதாக உருவான வயநாடு தொகுதியைப் பொறுத்தமட்டில் 2009, 2014 தேர்தல்களில் தொடர்ந்து இரு முறை காங்கிரஸ் வேட்பாளர் ஷா நவாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். சமீபத்தில் ஷா நவாஸ் மரணம் அடைந்து விட்டபோதும், இந்த முறையும் இங்கு காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் ராகுல் காந்தி களம் இறங்கினால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

    இப்படி ராகுல், வயநாடு தொகுதியில் களம் இறங்கினால், அது தென் மாநிலங்களில் காங்கிரஸ் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள சாதகமாக இருக்கும் என்று காங்கிரசார் கருதுகின்றனர்.

    இந்த தொகுதியில் பா.ஜனதா கட்சியின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரத் தர்ம ஜனசேனா போட்டியிட இருக்கிறது. ஒரு வேளை ராகுல் காந்தி களம் இறங்கினால், அந்த தொகுதியை பா.ஜனதா கட்சி எடுத்துக்கொண்டு, அந்தக் கட்சிக்கு வேறுதொகுதியை தர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

    ராகுல் காந்தியை எதிர்த்து தேசிய அளவில் பிரபலமான ஒருவரை களம் இறக்க வேண்டும் என்று வயநாடு மாவட்ட பா.ஜனதா கட்சி, கட்சியின் மாநில தலைமையை வலியுறுத்தி உள்ளது.

    ஆனால் இந்த தொகுதியை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை என்று பாரத் தர்மஜனசேனாவின் மூத்த தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி கருத்து தெரிவித்திருக்கிறார். பா.ஜனதா கட்சி, வயநாடு தொகுதியை எங்களிடம் இருந்து கோராது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி இதுவரை வயநாடு தொகுதியில் போட்டியிட எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ சொல்கிறார்.

    இன்று இதில் ராகுல் காந்தி இறுதி முடிவு எடுத்து விடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

    முதல்-மந்திரி பினராயி விஜயன், “ ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட்டால், அது காங்கிரசுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். பா.ஜனதா கட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து களம் இறங்குகிற சூழலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் அது தவறான சமிக்ஞையாகி விடும்” என்கிறார்.

    ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலாவோ, “ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டால் எங்கே 20 தொகுதிகளிலும் தோற்றுவிடுவோ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பயப்படுகிறது” என்கிறார்.

    ராகுல் வயநாட்டில் களம் இறங்குவாரா, மாட்டாரா, என்ன முடிவு எடுக்கப்போகிறார்? கேரளா மட்டுமல்ல, நாடே ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறது. #LSPolls #RahulGandhi


    தே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடாது என்று தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    ஆலந்தூர் :

    சென்னை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை தே.மு.தி.க. பின்பற்றும். 4 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதால் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை.

    பல தேர்தல்களை பார்த்து விட்டோம். தேர்தல் அறிக்கைகளை பார்த்து விட்டோம். ஆனால் உறுதியாக இந்த முறை கூட்டணி கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுமாறு மத்திய அரசிடம் தே.மு.தி.க. வலியுறுத்தும். தமிழகத்திற்கு தேவையானதை உறுதியாக எடுத்துரைப்போம். தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற பிரதமர், முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.



    மத்திய மந்திரிசபையில் தே.மு.தி.க. சேருவது பற்றி யோசிக்கவில்லை. தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும். யார் யார் வெற்றி பெற உள்ளனர் என்பதை பார்க்க வேண்டும். தேர்தல் முடிந்தபின்னர் தான் மந்திரிசபையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்.

    தூத்துக்குடியில் 2 பெண்கள் போட்டியிடுவது ஆரோக்கியமானது. வரவேற்கக்கூடியது. அரசியலுக்கு பெண்கள் அதிகமாக வர வேண்டும். இதில் யார் பலமானவர்? என்று சொல்ல முடியாது. 2 பேரும் நல்ல வேட்பாளர்கள். உழைக்கக்கூடியவர்கள். மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். இதில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்பது இனி தான் தெரியும்.

    தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் வருவார். விஜயகாந்த் முகத்தை காட்டினாலே போதும் என்று மக்கள் நினைக்கின்றனர். வருகிற 27-ந் தேதி முதல் 40 தொகுதிகளிலும் நான் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMDK #PremalathaVijayakanth #LSPolls
    ப.சிதம்பரம் எனது வளர்ச்சியை தடுத்து விட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார். #SudarsanaNatchiappan #PChidambaram
    சென்னை :

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சனநாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுதர்சனநாச்சியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு நிகழ்வு ஏற்பட்டு உள்ளது. இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    காங்கிரஸ் கட்சியில் வருங்கால பிரச்சினைக்கு இது காரணமாக அமைந்துவிடுமோ? என்று தோன்றுகிறது. நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதை ப.சிதம்பரம் தடுத்து இருக்கிறார். அமைச்சராகவும், கட்சியில் பல பொறுப்புகள் கிடைக்கவிடாமலும் எனது வளர்ச்சியை தடுத்து உள்ளார்.

    நான் அவரை தேர்தலில் தோற்கடித்தேன் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு காங்கிரஸ் மீதும், சிவகங்கை மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. சிவகங்கை மக்களுக்கும், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் என்னுடைய பணியை தொடர்ந்து செய்வேன்.

    ப.சிதம்பரம் குடும்பத்தை மக்கள் வெறுக்கின்றனர். சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு அவர் எந்த நன்மையும் செய்யவில்லை. பல நாடுகளில் ப.சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்து உள்ளது. ஒரு குற்றவாளியாக உள்ளதால் கோர்ட்டில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை?. கோர்ட்டுக்கு போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படப்போகிறது என்பது க‌‌ஷ்டமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #SudarsanaNatchiappan #PChidambaram
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழும் என்று எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் பா.ஜனதா பலமான கட்சியாக உள்ளது. குறிப்பாக மும்பை-கர்நாடக பகுதியில் பா.ஜனதா நல்ல பலத்துடன் உள்ளது. ஐதராபாத்-கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி செல்வாக்குடன் திகழ்கிறது.

    கர்நாடகத்தில் 20 முதல் 22 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், மோதல் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி கவிழும். நாடு முழுவதும் பாஜகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. மோடி அலை, கடந்த பாராளுமன்ற தேர்தலை விட இந்த முறை கட்சியின் பலத்தை அதிகரித்துள்ளது.

    மேற்கு வங்கம், ஒடிசா, வட கிழக்கு மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு புதிய பலம் கிடைக்கும். கடந்த முறை அந்த தொகுதிகளில் பா.ஜனதாவின் வெற்றி மிக குறைவாக இருந்தது. இதன் மூலம் பாஜக பாராளுமன்ற தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் எங்கள் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும். கேரளாவிலும் எங்கள் கட்சி வெற்றி கணக்கை தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி தோல்வி அடைந்தது.



    ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த மாநிலங்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே நல்ல வெற்றி கிடைக்கும். பா.ஜனதாவின் நிலை கர்நாடகத்தில் நன்றாகவே உள்ளது. துமகூரு, மைசூரு ஆகிய தொகுதிகளில் நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்.

    ஹாசனில் கடும் போட்டியை கொடுப்போம். ஐதராபாத்-கர்நாடக பகுதியில் எங்கள் கட்சி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. காங்கிரசில் இருந்து மாலிகையா குத்தேதார், பாபுராவ் சின்சனசூர், மாலகரெட்டி ஆகியோரின் வருகையால், கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைவார். மத்திய கர்நாடக பகுதியிலும் எங்கள் கட்சி பலம் வாய்ந்ததாக திகழ்கிறது.

    கர்நாடகத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பிரசாரம் மூலம், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். கர்நாடகத்தில் 4 தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுமாறு மோடியிடம் கூறி இருக்கிறோம். இடம், தேதி இன்னும் முடிவு செய்யவில்லை.

    அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தி வெற்றி பெறுவது கடினம். அதனால் அவரை கர்நாடகத்தில் போட்டியிடுமாறு இங்குள்ள தலைவர்கள் கேட்கிறார்கள். கர்நாடகத்தில் ராகுல் காந்தி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது கடினம். இந்த அபாயமான முடிவை அவர் எடுக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

    சிவமொக்கா தொகுதியில் எனது மகன் பி.ஒய்.ராகவேந்திரா, ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். கடந்த 6 மாதமாக அவர் ஓய்வே எடுக்காமல் அந்த தொகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் நான் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
    மண்டியா பாராளுமன்ற தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி நடக்கிறது என்று நிகில் குமாரசாமி கூறியுள்ளார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    பெங்களூரு :

    மண்டியா பாராளுமன்ற தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா களத்தில் குதித்துள்ளார். அவருக்கு நடிகர்கள் தர்ஷன், யஷ் மற்றும் சில கன்னட நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் மண்டியா காங்கிரஸ் தலைவர்களும் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதுடன், அங்கு பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் சுமலதாவுக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. இதுபற்றி மண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    மண்டியா தொகுதியில் கூட்டணி கட்சிகள் சார்பில் நான் போட்டியிடுகிறேன். சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்திருப்பதால், எனக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மண்டியா தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி நடக்கிறது. எனக்கு எதிராக சில சக்திகள் ஒன்று சேர்ந்துள்ளன. அதுபற்றி நான் கவலைப்பட போவதில்லை. என்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எதிராக எந்த சக்திகள் ஒன்று சேர்ந்தாலும், மண்டியா மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள்.

    என்னை தோற்கடிக்க நினைக்கும் அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். யார் மீதும் குற்றச்சாட்டு கூற விரும்பவில்லை. மண்டியா தொகுதியில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். மண்டியா மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

    இவ்வாறு நிகில் குமாரசாமி கூறினார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy 
    இந்த தேர்தலில் மோடியை தோற்கடியுங்கள், இல்லையேல் அவர்தான் நிரந்தர பிரதமராக இருப்பார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #PMModi #ArvindKejriwal
    புதுடெல்லி :

    மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதில்களை தொகுத்து எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா, டெல்லியில் நடைபெற்றது. அதில், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

    இன்றைய தினம் மோடி அரசை யார் கேள்வி கேட்டாலும், ‘தேச விரோதி’ என்று முத்திரை குத்துகிறார்கள். டெல்லி அருகே குர்கானில் ஒரு முஸ்லிம் குடும்பம் தாக்கப்பட்டுள்ளது. எந்த காரணமும் இல்லாமல், சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. மோடி அரசு, ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் கொள்கையை பின்பற்றுகிறது.



    இந்த தேர்தலில், என்ன விலை கொடுத்தாவது மோடி அரசை மீண்டும் வரவிடாமல் தடுப்பதே ஒவ்வொரு தேச பக்தரின் நோக்கமாக இருக்க வேண்டும். மோடியை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.

    ஒருவேளை, மோடி மீண்டும் பிரதமரானால், அதன்பிறகு தேர்தலே நடத்தப்படாது. மோடியே நிரந்தர பிரதமராக எப்போதும் இருப்பார்.

    அந்த அளவுக்கு ஜனநாயகமே முடிவுக்கு வந்து விடும்.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். #PMModi #ArvindKejriwal 
    என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும் என்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார். #KamalHaasan #makkalneedhimaiam
    சென்னை:

    கோவையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கமல் பேசியதாவது:- 

    நடிகர் தானே என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார், நான் நேர்மையான நடிகன், வருமான வரியை பாக்கி இல்லாமல் கட்டுபவன்.  என்னை ஒரு நல்ல அரசியல்வாதி என கூறும் நாள் வரும். 5 ஆயிரம் மதுக்கடைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது?   கஜா, ஒகி புயல் பாதிப்பின் போது தமிழகம் வராத பிரதமர் மோடி தேர்தலுக்காக 4 முறை தமிழகம் வருகிறார். 

    மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியிலும், தண்ணீர் பிரச்சனை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்படும், மரங்கள் வளர்க்கப்பட்டு பசுமை தொகுதியாக மாற்றப்படும்.

    ஏரி, குளங்கள் பாதுகாக்கப்படும், குறைந்த அளவு தண்ணீரில் விவசாயம் செய்யும் ஜப்பான் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்படும். 

    ஏழைகளை உள்ளே வராமல் தடுத்து பணக்காரர்களை காக்கும் காவலாளிதான் மோடி. நம்மை தெருவுக்கு கொண்டு வந்ததுதான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்களின் சாதனை. 

    மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என நினைத்து செய்ய முடியாத வாக்குறுதிகளையும் அள்ளி வீசுகிறார்கள். மக்கள் நீதி மய்யம் ஆட்சி மக்களின் ஆட்சியாக இருக்கும்; எம்பிக்கள் தவறு செய்தால் கட்சி அலுவலகத்தில் இருந்து ராஜினாமா கடிதம் வரும்.

    பாராளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தாண்டி மக்கள் நீதி மய்யம் வெல்லப் போகிறது. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு விலைக்கு வாங்கப்படுகிறது தடுக்கப்படும். குடிசைகள் இல்லா தமிழகம் காண்போம்; விவசாயம், தொழில்துறைக்கு திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயம் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு ஊதியம்.  மக்கள் நீதி மய்யம் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியும் நீர் மேலாண்மையில் முக்கியத்துவம் பெறும். தண்ணீர் பிரச்னை போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 

    சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் போட்டியிடுகிறார். கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் துணை தலைவர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.  காஞ்சிபுரம் - எம்.தங்கராஜ், தி.மலை - அருள், ஆரணி - வி.ஷாஜி, கள்ளக்குறிச்சி - கணேஷ், தென்சென்னை - ரங்கராஜன், மதுரை - அழகர், தஞ்சை - ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ், கடலூர் - அண்ணாமலை, தென்காசி - முனீஸ்வரன், திருப்பூர் - சந்திரகுமார், பெரம்பலூர் - அருள்பிரகாசம்,  நாமக்கல் - ஆர்.தங்கவேலு, ஈரோடு - சரவணக்குமார், ராமநாதபுரம் - விஜயபாஸ்கர், கரூர் - ஹரிஹரன் போட்டியிடுகின்றனர். 

    மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. #KamalHaasan #makkalneedhimaiam 
    பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றிபெற்றால் கெட்டது பண்றவர்களுக்கு கெட்டது செய்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். #MansoorAliKhan #naamtamilarkatchi

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

    அவரது பிரசாரம் திண்டுக்கல் தொகுதி மக்களுக்கு சுவாரசியமாக மாறி இருக்கிறது. திரையில் பார்ப்பது போலவே காமெடியாக பேசி மக்களை சிரிக்க வைக்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    ‘‘திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாதுபட்டி என் சொந்த ஊர். நானும் திண்டுக்கல் காரன்தான். நாம் தமிழர் கட்சி சார்பாக நிற்கிறேன். திண்டுக்கல் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

    இங்கே மணல் முழுவதையும் அள்ளிட்டாங்க. பொன்மாந்துரை என்கிற கிராமத்துக்கு சென்றேன். அங்கு குடிக்க தண்ணீர்கூட இல்லை. இந்தியாவிலேயே தண்ணீர் இல்லாத கிராமமாக இருக்கிறது. என்னுடைய அலுவலகத்தை அந்தக் கிராமத்தில் தான் அமைக்கப் போகிறேன். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தமிழன்தான் பிரதமராக வரவேண்டும். நான் எம்.பி ஆனால் நாற்காலியில் உட்கார்ந்து சீட்டை துடைத்து விட்டு வர மாட்டேன். எழுந்து நின்றுதான் கேள்வி கேட்பேன். கிராமங்களுக்குப் போகும் பொழுது நிறைய பேர் கேட்கிறார்கள். நீங்க ஜெயிச்சா நல்லது பண்ணுவீங்களான்னு.

    நான் நல்லது பண்ண மாட்டேன். கெட்டதுதான் பண்ணுவேன். இந்த ஊருக்கு செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப்போறேன். பொள்ளாச்சி வி‌ஷயத்துல தவறு செய்த அவங்க தலையை வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MansoorAliKhan #naamtamilarkatchi

    தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #mkstalin #edappadipalanisamy
    சென்னை:

    வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

    தேர்தல் நடக்காமல், வாக்கு எண்ணாமல் திமுக வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மறைவுக்கு காரணமானவர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்கப்படும்.

    மோடி, அமித்ஷாவிடம் அடகு வைக்கப்படும் பொருளை மீட்க முடியுமா? அதிமுக ஆட்சி கோமா நிலைக்கு சென்றுவிட்டது. தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை.


    நான் தான் கடவுள் எனக்கூறும் முதல்வர் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளார் வாரிசுகள் என்ற காரணத்தினால் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்க முடியுமா?  திமுக நிறுத்தும் வேட்பாளர் தகுதி பெற்றவரா என ஆராயுங்கள், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #mkstalin #edappadipalanisamy
    ஒடிசா மாநில காவல்துறை முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் மிஷ்ரா மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். #FormerDGP #FormerOdishaDGP #PrakashMishra #FormerDGPjoinsBJP
    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். மேலும், பல துறைகளை சேர்ந்த பிரபலங்களும், சில மாநிலங்களை சேர்ந்த ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.

    அவ்வகையில், ஒடிசா மாநில காவல்துறை முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் மிஷ்ரா மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு டி.ஜி.பி. பிரகாஷ் மிஷ்ராவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், அவரை நிரபராதி என்று சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது. தற்போது பாஜகவில் இணைந்துள்ள பிரகாஷ் மிஷ்ரா, ஒடிசாவில் உள்ள கட்டாக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #FormerDGP #FormerOdishaDGP #PrakashMishra #FormerDGPjoinsBJP
    பிரதமர் மோடி பணக்காரர்களுக்குத்தான் காவலாளி சேவை செய்கிறார் என பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார். #priyankagandhi #pmmodi
    பிரதமர் மோடி டுவிட்டரில் தொடங்கிய நானும் காவலாளிதான் பிரசாரத்தை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சனம் செய்கிறது.  காவலாளி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார். ‘‘பணக்காரர்களுக்குத்தான் காவலாளிகள் சேவை செய்கிறார்கள். அவர்கள் ஏழை எளியோரைப்பற்றி கவலை கொள்வதே இல்லை’’ என பிரியங்கா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    கரும்பு விவசாயிகள் இரவும், பகலும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையினை வழங்குவதற்கு கூட மாநில அரசு பொறுப்பு ஏற்பதில்லை. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி பாக்கி வைத்துள்ளனர். இதன் அர்த்தம், கரும்பு விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகிறது. அவர்களது சாப்பாடுக்கு வழியின்றி போகிறது. 

    அவர்களின் சுகாதார தேவைகளை கவனிக்க முடிவதில்லை. அவர்களின் அடுத்த சாகுபடி திட்டமும் அப்படியே நின்று விடுகிறது என பிரியங்கா தெரிவித்துள்ளார். உ.பி.யில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.9 ஆயிரத்து 836 கோடி என தகவல் வெளியாகியது. இதனை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு பிரியங்கா கேள்வியை எழுப்பியுள்ளார். #priyankagandhi #pmmodi
    ×