என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    காந்திநகரில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு அகமதாபாத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். #AmitShah #LokSabhaElections2019
    அகமதாபாத்:

    பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், அமித் ஷா இன்று வேட்பு மனு தாக்கலுக்கு தயாரானார். இதற்காக இன்று காலை அகமதாபாத் வந்து சேர்ந்த அவர், சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரது செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



    இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அமித் ஷாவின் வேட்பு மனு தாக்கல் கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும், மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற உதவியாக இருக்கும் என்றும் மாநில பாஜக கருதுகிறது.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.  #AmitShah #LokSabhaElections2019

    மதுரவாயலில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    போரூர்:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு மதுரவாயல் பைபாஸ் சாலை அருகில் உள்ள ஓடமாநகரில் கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் கட்டுகட்டாக பணம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் காரில் அந்த வழியாக வந்த 4பேரிடம் விசாரணை நடத்தியதில் காரில் ரூ. 78 லட்சம் பணம் உள்ளதாகவும் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் காருடன் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் ஆலப்பாக்கம் தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்று சீல் வைத்தனர். பின்னர் ரூ.78 லட்சம் பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019

    பிரதமர் மோடியை பின்பற்றி ராகுல் காந்தியும் 2 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள். #LokSabhaElections2019 #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார்.

    2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் வதோதரா தொகுதி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    இந்த முறை பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் குஜராத் மற்றும் ஒடிசாவில் மற்றொரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    மோடியை பின்பற்றி ராகுல் காந்தியும் 2 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள். தற்போது ராகுல்காந்தி அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அவர் தமிழ்நாடு, கேரளா அல்லது கர்நாடகாவில் மற்றொரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள். ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டால் அது தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று காங்கிரசார் கருதுகிறார்கள்.

    அதன் அடிப்படையில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை அவர் உறுதி செய்யவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  #LokSabhaElections2019 #Congress #RahulGandhi
    புதுவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் வினியோகம் உள்ளிட்டவற்றை தடுக்க புதுவை மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் நேற்று மதியம் 2 மணியளவில் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் மடக்கி தீவிர சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் அதை கைப்பற்றி தேர்தல் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் புதுவை பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், முருகன் ஆகியோர் மி‌ஷன் வீதி-ரங்கபிள்ளை வீதி சந்திப்பில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக பணத்துடன் வந்த வாகனத்தை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.1 கோடியே 86 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவுமில்லாததையடுத்து வாகனத்துடன் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் நேரில் வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது புதுவையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து நேற்று மாலை ரூ.1 கோடியே 86 லட்சத்தை பெற்றுக்கொண்டு வங்கி ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் தகவல் தெரிவித்ததன்பேரில் வருமானத்துறையினர் பெரியகடை போலீஸ் நிலையம் வந்து வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். வங்கி அதிகாரிகள் ரூ.1 கோடியே 86 லட்சத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த பணத்தை அரசு கருவூலத்தில் வைத்தனர்.

    நேற்று ஒரு நாளில் புதுவையில் ரூ.1 கோடியே 93 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.  #LokSabhaElections2019


    பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 12,13 மற்றும் 16 ஆகிய 3 தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம், கோவை, தேனி, சேலம் உள்பட 5 பிரசார கூட்டங்களில் அவர் பேச உள்ளார் #LokSabhaElections2019 #Modi
    சென்னை:

    பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

    ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு திருப்பூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரசார கூட்டங்களில் பேசினார்.

    தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 5 இடங்களில் போட்டியிடுகிறது. எனவே பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் மோடி 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார்.


    அடுத்த மாதம் (ஏப்ரல்) 12, 13 மற்றும் பிரசார நிறைவு நாளான 16 ஆகிய 3 தேதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம், கோவை, தேனி, சேலம் உள்பட 5 பிரசார கூட்டங்களில் அவர் பேச உள்ளார்.

    ராமநாதபுரம், கோவையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தேனியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் சேலத்தில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க வேட்பாளர்களுக்கும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #Modi
    கோவை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.95 லட்சம், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    சூலூர்:

    சூலூர் தொகுதிக்குட்பட்ட சுல்தான் பேட்டை பகுதியில் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். திருப்பூர் மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரி ஆய்வாளர் மலர்விழி தலைமையிலான இந்த படையினர் சுல்தான்பேட்டை பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்புப் பகுதி முன்பாக நின்று சோதனை செய்து கொண்டுருந்தனர்.

    அப்போது பொள்ளாச்சியிலிருந்து வேகமாக வந்த காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின் இருக்கையில் ஒரு இரும்பு பெட்டி இருந்தது.

    மேலும் அந்த காரில் ஒரு தனியார் வங்கியின் அடையாள அட்டையுடன் பாலராமஜோதி சுந்தரேஷ்வரி(55) என்ற பெண் அதிகாரியும் வங்கி உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் இருந்தனர்.

    அவர்களிடம் விசாரிக்கையில் காரில் இருந்த இரும்பு பெட்டியில் வங்கிப் பணம் 95 லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து அந்த பணத்தினை கொண்டு செல்வதற்கான ஆவணங்களைக் கேட்ட போது அவர்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாதது தெரிய வந்தது.

    மேலும் இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு செல்வதற்கு போதிய காவலர்களும் இல்லாததால் சந்தேகமடைந்த பறக்கும் படை அதிகாரிகள் காரில் இருந்த பணத்தை காருடன் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.அதைத் தொடர்ந்து தாசில்தார் அளித்த தகவலின் பேரில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பாலகிருஷ்ண்ணிடம் ஒப்படைத்தனர்.

    சூலூர் அருகே சிந்தாமணி புதூர் எல் என் டி பைபாஸ் ரோடு பகுதியில் திருப்பூர் 5-ம் பகுதி மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் சுந்தரராஜ் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அதே சமயம் கோவை பகுதியில் உள்ள வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனம் பல்லடத்திலிருந்து குனியமுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

    தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் வாகனத்தில் உள்ள பெட்டியை பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

    பெட்டிக்குள் இரட்டை குழல் துப்பாக்கி இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமான துப்பாக்கி என்பது தெரியவந்தது பறிமுதல் செய்த துப்பாக்கி சூலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் திருப்பூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் கோவிந்தபிரபாகர் தலைமையிலான பறக்கும் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.

    அந்த வாகனத்தில் ரூ.26 லட்சம் இருந்தது. ஆனால் அதில் ரூ.6லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்தது. மீதமுள்ள ரூ.20 லட்சம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

    இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த திருப்பூர் காலேஜ் ரோடு ஜவான் நகரை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவரிடம் விசாரித்தனர்.

    அவர், கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் ஊழியராக தான் பணியாற்றி வருவதாகவும், அந்த நிறுவனம் திருப்பூரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வருவதாகவும், ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

    இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அதிகாரிகள் பிரபுவிடம் அறிவுறுத்தியுள்ளனர். #LokSabhaElections2019

    சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுபோட வசதியாக சென்னையில் இருந்து 400 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #SpecialBuses
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ளது. 39 பாராளுமன்ற தொகுதிகளுடன் 18 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    21 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    மேலும் ஓட்டுப்பதிவு நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பெனிகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு கட்டாயம் ஓட்டுப்பதிவு செய்ய அன்றைய தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    சென்னையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊரில் தான் ஓட்டுரிமை உள்ளது.

    இதனால் பொதுமக்கள் வசதிக்காக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்களுக்கு ஓட்டுரிமை சொந்த ஊர்களில் இருக்கும். அவர்கள் தங்கள் வாக்குரிமையை பதிவு செய்ய தேர்தலின்போது 400 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    மக்களின் தேவைக்கேற்ப கோயம்பேடு, பெருங்களத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார். #LokSabhaElections2019  #SpecialBuses

    பாராளுமன்ற தேர்தலில் திமுக 4-வது இடத்துக்கு தள்ளப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். #Ramadoss

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பழனி, ஒட்டன்சத்திரம், கோபால்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.

    கட்சி தொடங்கிய 6 மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் நின்று மாபெரும் வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க. தனது முதல் தேர்தலிலேயே அ.தி.மு.க. 52 சதவீத வாக்குகளை பெற்றது. 1973-ம் ஆண்டு தேர்தலில் அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    அதே போல் 2019 தேர்தலில் தி.மு.க. 4-வது இடத்துக்கு தள்ளப்படுவது உறுதி. மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் தனி நபர் விமர்சனங்களை மட்டுமே வைக்கிறார். தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. செல்லாத வருத்தத்தில் ஸ்டாலின் அப்படி பேசி வருகிறார்.

    இந்த தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் முடிவுக்கு வரப்போகிறது. திண்டுக்கல் தொகுதியில் எப்போதும் இரட்டை இலை சின்னத்தை தேடி வாக்களிக்கும் பொதுமக்கள் இம்முறை இரட்டை இலையுடன் கூடிய மாம்பழம் சின்னத்தை தேடி வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Ramadoss

    பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போகும் என்று சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #LokSabhaElections2019

    சேலம்:

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து நேற்று இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சேலம் தாதகாப்பட்டி, பட்டைக்கோவில், வின்சென்ட் பகுதியில் திறந்த வேனில் நின்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் நல்லவர்களாக நாம் இணைந்து தர்மத்தை நிலை நாட்டக்கூடிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதர்மம் கொண்ட தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் தேர்தலை சந்திக்க உள்ளன. மத்தியில் 10 ஆண்டுகள் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, 9 பேர் மந்திரிகளாக இருந்தார்கள். அவர்கள் உருப்படியாக தமிழகத்திற்கு தேவையான எந்தஒரு தொலை நோக்கு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தமிழக விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கக்கூடிய காவிரி பிரச்சினையும் தீர்க்கவில்லை.

    அதாவது 17 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு வெளியானது. அப்போது, எதிர்க்கட்சி தலைவியாக இருந்த ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழிலில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தினார்.


    ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. அதன்பிறகு 2011-ல் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் எடுத்த சட்டப்போராட்டத்தின் விளைவாக தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் யார் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள்? என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இந்த தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போகும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படி என்றால் இவர்கள் ஆட்சி செய்வார்களா?. பிரியாணி, பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் வன்முறையில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்து வந்தோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. முதலில் காசு கொடுத்துவிட்டு அதன்பிறகு சாப்பிடுங்கள் என்று கூறும் நிலைமை வந்துவிட்டது.

    இவர்கள் கையில் ஆட்சி இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் சிந்தித்து பாருங்கள். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஏன்? சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. இந்த பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய்விடும். ஜெயலலிதா வழியில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 வழங்கியதால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைவரும் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். அதேசமயம் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    ஆனால் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க.வினர் புகார் செய்ததால் தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாடும், நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.  #LokSabhaElections2019

    ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. #Jayalalithaa #EVKSElangovan
    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார்.

    அப்போது அவர் தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள பங்களாவில் தங்கினார். சிங்கப்பூர் பங்களா என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் குடியேறி தினமும் ஆண்டிப்பட்டிக்கு பிரசாரம் செய்ய சென்றார்.

    இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின் 2006-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் இந்த சிங்கப்பூர் பங்களாவில் தங்கியிருந்து வாக்கு சேகரித்தார்.

    ஜெயலலிதா தங்கியதால் அந்த பங்களா மிகவும் பிரபலம் ஆனது. அதை அம்மா வீடு என்றுதான் அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

    இந்த நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேனி என்.ஆர்.டி. நகரில் ஜெயலலிதா தங்கிய வீட்டில் குடியேறி உள்ளார். அங்கு தங்கியிருந்து தனது தேர்தல் பிரசாரத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நடத்தி வருகிறார்.



    ஜெயலலிதா தங்கிய வீட்டில் இளங்கோவன் குடியேறியது அ.தி.மு.க. தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து தேனி நகர அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேனியில் உள்ள சிங்கப்பூர் பங்களாவில் அம்மாவை தவிர யாரும் குடியிருந்ததில்லை. அம்மா வாழ்ந்த வீடு என்பதால் கோயிலாக பார்க்க வேண்டிய இவ்வீட்டினை தாரை வார்த்து விட்டனர்.

    அம்மாவை கடுமையாக விமர்சித்த இளங்கோவன் அந்த வீட்டில் குடியேறி விட்டார். அம்மாவிற்கும், அ.தி.மு.க.விற்கும் சென்டிமெண்டாக ராசியான வீடு என்று இருந்த பங்களா பறிபோய்விட்டதே என அ.தி.மு.க. தொண்டர்கள் கலைப்படுகிறார்கள்.

    அம்மாவிற்காக கம்பீரமாக காத்து கொண்டிருந்த பிரசார வாகனம் இன்று காங்கிரஸ் கொடியுடன் நின்று கொண்டிருக்கிறது. #Jayalalithaa #EVKSElangovan
    நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என கோபியில் நடத்த தேர்தல் பொதுகூட்டத்தில் பிரேமலதா கூறியுள்ளார். #PremaLatha
    கோபி:

    கோபி பஸ் நிலையம் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. இந்த கூட்டணி அமைய கூடாது என திமுக பல்வேறு சூழ்ச்சிகளை செய்தது. அதையெல்லாம் முறியடித்து வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக, தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. வெற்றி பெற்று செல்லும் எங்கள் கூட்டணி எம்.பி.க்கள் தமிழகத்திற்கான திட்டங்களை மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்துவார்கள்.

    மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி தான் அமையும். அப்போது நதிகளை இணைக்க வலியுறுத்துவோம். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை எடுத்துக்கூறி மறுபரிசீலனை செய்ய வலியறுத்துவோம்.

    உலக நாடுகளில் 4-வது வல்லரசு நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இதற்கு காரணமே பிரதமர் மோடி தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #PremaLatha
    செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை குறித்து தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதில், தேர்தல் விதிமீறல் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை மதியம் திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை பற்றி விசாரணை நடத்த தனிக்குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தியது.

    தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் ஆல் இண்டியா ரேடியோ உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதன் பேரில் தூர்தர்சனும், ஆல் இண்டியா ரேடியோவும் விளக்கம் அளித்தன.



    இதற்கிடையே பிரதமர் மோடி, தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் பேச தங்களிடம் எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா இந்த தகவலை கூறினார்.

    பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் விதிமீறல் உள்ளதா? என்று தேர்தல் ஆணையம் இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இதற்கான குழுவும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், மோடியின் உரையில் விதிமீறல் உள்ளதா? என்பது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் எந்த நடத்தை விதிமீறலும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

    பின்னர் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தியது தொடர்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதில் விதிமீறல் இல்லை என அறிவித்தது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission 
    ×