என் மலர்
தேர்தல் செய்திகள்
அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து பேசுகிறார்.
முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 22-ந்தேதி ஏற்காடு கருமந்துறையில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து தர்மபுரியில் அன்புமணி ராமதாசை ஆதரித்து பேசினார்.
23-ந்தேதி திருவண்ணாமலை, வேலூர் பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார். 25, 26, 27 தேதிகளில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் சூறாவளி பிரசாரம் செய்தார். 28-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், ஆரணி தொகுதிகளில் மக்களை சந்தித்தார். 29-ந்தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
இன்று நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதுவரை 15 தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாகை பாராளுமன்ற தொகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். தஞ்சை பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இவை தவிர இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்து வருகிறார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி நாகை பாராளுமன்ற தொகுதி திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். தஞ்சையிலும் பேசினார். 21-ந்தேதி பெரம்பலூர், 22-ல் சேலம், தருமபுரி, 23-ந்தேதி தருமபுரி, திருவண்ணாமலை தொகுதிகளில் பிரசாரம் செய்தார்.
24-ந்தேதி வட சென்னை, 25-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளிலும், 26-ந் தேதி திண்டுக்கல் தொகுதியிலும், 27-ந்தேதி தேனி தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்தார். 28-ந் தேதி மதுரை, விருதுநகர் தொகுதிகளிலும், 29-ந்தேதி சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார். இன்று கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இடைத்தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
மு.க.ஸ்டாலின் இன்றுடன் 18 பாராளுமன்ற தொகுதிகளிலும், தேர்தல் நடைபெறும் சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்து இருக்கிறார்.
நாளை வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து மற்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்கிறார். #LSPolls #EdappadiPalaniswami
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் இன்று நடந்தது.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் திறந்து வைத்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் அலெக்ஸ், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், தில்லை செல்வம், மகேஷ், கூட்டணி கட்சியைச் சேர்ந்த வெற்றிவேல், சிலம்பு சுரேஷ், வெற்றிவேந்தன், அன்வர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு வேட்பாளர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த நேரமும் தலைவர்களும், தொண்டர்களும் இங்கு வந்து என்னை சந்திக்கலாம். கருத்துக்களை தெரிவிக்கலாம். 6 சட்டசபை உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ள நானும் சேர்ந்து குமரி மாவட்ட வளர்ச்சிக்கு பாடுபடுவோம். குமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக மாற்று முனையம் வேண்டாம் என்று தான் நாங்கள் கூறுகிறோம். ஒருங்கிணைந்த துறைமுகம் கொண்டு வரப்படும். பெரிய துறைமுகம் அமைய 587 ஏக்கர் நிலமும், சிறிய துறைமுகம் அமைய 350 ஏக்கர் நிலமும் தேவை. நாம் ஏற்கனவே உள்ள துறைமுகத்தை விரிவுப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த மீன் பிடித்துறைமுகம் கொண்டு வர வேண்டும்.
ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டு வந்ததாக கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை பற்றி என்னுடன் விவாதிக்க தயார் என்கிறார். நானும் விவாதத்துக்கு தயார். ஆனால் அதற்கு முன்பு எனது 3 கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும். இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறினார். அதுபற்றி பாராளுமன்றத்தில் அவர் பேசவில்லை. சிறப்பு தீர்மானமும் கொண்டு வரவில்லை. அதற்கு அவர் என்ன முயற்சி செய்தார்? மோடி அரசு ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறியது. எத்தனை பேரின் கணக்கில் இந்த பணம் போடப்பட்டுள்ளது.
2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர். எத்தனை பேருக்கு வேலை வழங்கி உள்ளனர். இந்த 3 கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தால் நான் விவாதிக்கத் தயார். குமரி மாவட்டத்தில் சாய்-சப் சென்டர், விமான நிலையம் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. விமான நிலையத்தை கூடங்குளத்துக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக மாற்ற ஏன் முயற்சி செய்யவில்லை. எனது நிறுவனத்தை முடக்க வேண்டும் என்று கூறுகிறார். எங்கள் நிறுவனத்தில் 2500 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள்.
அகஸ்தீஸ்வரத்தில் பிறந்த என்னை வெளிநாட்டு பறவை என்கிறார். என்னை வெளிநாட்டு பறவை என்றால் தூத்துக்குடியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எங்கிருந்து வந்தவர்? எனது ஓட்டு கூட இங்கு தான் உள்ளது. தோல்வி பயத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வாறு பேசுகிறார். நான் 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொது மக்கள் ஆதரவுடன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எங்கள் கூட்டணி மற்றும் ஓட்டு வங்கி பலமாக உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்.
துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது, அவரை மிரட்டவும், பழி வாங்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரிச் சோதனை நடந்தது. ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் 2 பாலங்கள் கட்டியதே சாதனை என்கிறார். இந்த 3 ஆண்டுகளில் நாங்குநேரி தொகுதியில் நான் பல சாதனைகளை செய்துள்ளேன். தூத்துக்குடி, சென்னை துறைமுகம் நஷ்டத்தில் இயங்குகிறது. தனிநபருக்காக இங்கு துறைமுக திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். மக்களை ஏமாற்ற நாடகம் நடத்துகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் உள்ள 6 எம்.எல்.ஏ.க்கள் வளர்ச்சியை தடுப்பதாக கூறுகிறார். அவர்கள் மாவட்டத்துக்கு வரும் அழிவை தான் தடுக்கிறார்கள். மணவாளக்குறிச்சி மணல் ஆலையை கூட இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் தான் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள். தோல்வி பயத்தால் மாற்றி, மாற்றி அவர்கள் பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HVasanthakumar
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் யோகேஷ் பி.மகசி, டெசிஸ்தான், சிவகுமார் வர்மா முன்னிலையில் வேட்பாளர்களுடன் தேர்தல் விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் விதிகளை, வேட்பாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். வேட்பாளர்களுடைய செலவு கணக்குகளும் அவர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும் முறையும் தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அறிவுரைகளின்படி தேர்தல் நடைபெற வேண்டுமென வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019
கோரக்பூர் தொகுதியில் வெற்றிப் பெற்ற யோகி ஆதித்யநாத், 2017ல் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு முதல்வராக பதவியேற்றார். பின்னர் இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத்தின் மகன் பிரவீன் நிஷாத் வெற்றி பெற்றார்.
தற்போது நிஷாத் கட்சி வெளியேறியதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் சமாஜ்வாடி கட்சி, இன்று காலை கோரக்பூர் மற்றும் கான்பூர் தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த 2 வேட்பாளர்களும் நிஷாத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர். கோரக்பூர் தொகுதியில் ராம் பவுல் நிஷாத், கான்பூர் தொகுதியில் ராம் குமார் நிஷாத் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.
சமாஜ்வாடி அறிவித்த இரண்டு வேட்பாளர்களில், ராம் பால் நிஷாத், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். சமீபத்தில் பாஜகவில் இருந்து சமாஜ்வாடியில் இணைந்தவர் ஆவார். மற்றொரு வேட்பாளர் ராம் குமார் நிஷாத்துக்கு இதுதான் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பாஜக கூட்டணியில் நிஷாத் கட்சி இன்று இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LokSabhaElections2019 #NishadParty
சென்னை:
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழக தேர்தல் களத்தில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?
பதில்:- எதிர்பார்த்ததை விட அதிகமான அளவில் ஆதரவு பெருகி வருகிறது.
கேள்வி:- எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது ஆதரவு பெருகி வருவதாக எப்படி சொல்கிறீர்கள்?
பதில்:- உண்மைதான். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத்தான் இப்போது பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மோடி ஆட்சியின் சாதனைகளை சொன்னால் போதும். அதுவே பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும்.
கேள்வி:- நீங்கள் சாதனை என்பதையெல்லாம் வேதனையாக அல்லவா எதிர்க்கட்சிகள் கூறுகின்றன?

பதில்:- எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரும் போது சிறிது காலம் சிரமம் ஏற்படத்தான் செய்யும். அது மக்களுக்கும் தெரியும்.
இந்த தலைமுறைக்கு தெரிந்து இராத ஒரு விஷயம். அணாவில் இருந்து நயா பைசாவாக மாறியபோதும் நீண்ட நாட்கள் பிரச்சினை இருந்தது. அதன் பிறகு அணா, பைசா நினைவு இல்லை.
தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்டபோது ‘டைவர்சன்’ என்று மாற்றி மாற்றி விட்டு சிரமம் ஏற்பட்டது. அலைய விடுகிறார்களே என்றுதான் தோன்றியது. சாலை அமைந்த பிறகு அந்த சிரமத்தை மறந்து விடுவோம். ஒரு நன்மைக்காக சிறு கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்யும். அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். எதிர்க்கட்சிகளுக்குத்தான் அதை பொறுக்க முடிய வில்லை.
மோடி 5 ஆண்டுகள்தான் பிரதமராக இருந்துள்ளார். இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்? 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்ன செய்தது? அப்போது ஏற்படாத மாற்றம் இப்போது ஏற்பட்டு இருக்கிறதா? இல்லையா? இதெல்லாம் மக்களுக்கு தெரியும். ஆனால் எதிர்க்கட்சிகள் வாக்குக்காக அவர்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்.
கேள்வி:- சிரமங்களை தாங்கி மக்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்களா?
பதில்:- நிச்சயமாக. மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. ஆனால் பாதிப்பு இல்லை. எனவே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள்.
கேள்வி:- மிஷன் சக்தி அறிவிப்பு மூலம் ராணுவ ரகசியத்தை மோடி வெளியே தெரிவித்து விட்டதாக ப.சிதம்பரம் குறை கூறி உள்ளாரே?
பதில்:- மிகப்பெருமையான ஒரு நிகழ்வை பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். மிஷன் சக்தியின் மூலம் உலகின் 4-வது நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இதை தேச பக்தர்கள் அனைவரும் வர வேற்பார்கள்.
கேள்வி:- அப்படியானால் ப.சிதம்பரம் தேச பக்தி இல்லாதவரா?
பதில்:- அதுபற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார். #Ganesan #BJP #ilaganesan
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய பகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
பின்னர் படப்பை வந்தார். அங்கு கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகடத்தில் பிரசாரம் செய்ய வந்தார். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கும் நிர்வாகிகள் சிலரே இருந்தனர். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமலேயே சென்னை புறப்பட்டுச் சென்றார். #LokSabhaElections2019 #KamalHaasan
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 27-ந்தேதி முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்த நிலையில் தினகரனின் 2-வது கட்ட சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவரது தேர்தல் சுற்றுப்பயண விவரம்:-
ஏப்ரல் 6: மதுரை, விருதுநகர், சாத்தூர், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி.
ஏப்ரல் 7: பாவூர்சத்திரம், ஆலங்குளம், நெல்லை, நாகர்கோவில்.
ஏப்ரல் 8: திருச்செந்தூர், காயல்பட்டினம், தூத்துக்குடி, விளாத்திகுளம், அருப்புக்கோட்டை.
ஏப்ரல் 9: முதுகுளத்தூர், பரமக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை.
ஏப்ரல் 10: தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம்.
ஏப்ரல் 11: கும்பகோணம், ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, சிதம்பரம்.
ஏப்ரல் 12: புதுச்சேரி, கடலூர், நெய்வேலி, விருத்தாசலம்.
ஏப்ரல் 13: கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செஞ்சி.
ஏப்ரல் 14: ஆம்பூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, ஆரணி.
சென்னை
ஏப்ரல் 15: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர்.
ஏப்ரல் 16: வடசென்னை, மத்திய சென்னை. #LokSabhaElections2019 #TTVDhinakaran
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பழனியப்பன், பட்டீஸ்வரன், தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், 60 வயதான விவசாயிகளுக்கு மாதம் ரூ.6ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்ரக விதைகளை தடை செய்ய வேண்டும், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை தேசிய கட்சிகள்தான் நிறைவேற்ற முடியும். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாத பா.ஜனதா அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தமிழக விவசாயிகள் 111 பேர் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளோம்.
வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக 24-ந்தேதி வாரணாசி செல்ல இருக்கிறோம். வறுமையால் வாடும் விவசாயிகளால் வாரணாசி செல்வதற்கும், வேட்பு மனுதாக்கல் செய்வதற்கும் பணமில்லை. அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி, தனது கணவரின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்ய பணமில்லாததால் வெட்டியானுக்கு பணம் கொடுக்க வாரணாசியில் பிச்சை எடுத்தது போல, நாங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய டெபாசிட் பணத்திற்காக வாரணாசியில் பிச்சை எடுத்து அதனை கட்ட முடிவு செய்துள்ளோம்.
வருகிற 6-ந்தேதிக்குள் விவசாயிகளை அழைத்து பிரதமர் நரேந்திரமோடியும், ராகுல்காந்தியும் பேச வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டும். வாக்குறுதி அளித்தால் போட்டியில் இருந்து விலகி கொள்வோம். இல்லையென்றால் பிரதமரை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவோம். அகோரி வேடத்தில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்வோம்.
இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது பற்றி அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறும் போது, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி எங்களின் கோரிக்கையை மோடி நிறைவேற்றாவிட்டால் வாரணாசியில் அவரை எதிர்த்து போட்டியிடுவது உறுதி என்றார். #TNFarmers #Ayyakannu #PMModi
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. இந்தியா முழுவதும் மிக வேகமாக பிரசாரம் செய்து வருகிறது. கண்டிப்பாக பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.
300 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும். தமிழ் நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
2014-ல் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தென்னிந்தியாவில் முக்கிய மாநிலம் தமிழ்நாடு.

இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம். அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது.
தி.மு.க.-காங்கிரஸ் கட்சியில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் இவர்கள் தான் தலைமை என்று மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் உள்ள இளைஞர்களுக்கு “நமோ வாரியார்” என்ற தலைப்பில் பேச உள்ளேன்.
நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElectoins2019 #MuralidharRao
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இன்று உதயநிதி ஸ்டாலின் தர்மபுரி 4ரோட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ராமநாதபுரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது கூடிய கூட்டம் பிரசாரம் கூட்டம் போல் தெரியவில்லை. ஒரு மாநாட்டிற்கு வந்த கூட்டம் அலைகடலென திரண்டிருந்தனர்.
இதுபோன்று நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் மோடிக்கு எதிர்ப்பு அலை இருப்பதாகவும், மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு அலை இருப்பதாகவும் கருதுகிறேன்.
மோடி ஆட்சி ஒரு மோசடி ஆட்சியாக திகழ்கிறது. கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக கூறி 5 வருடம் ஆட்சி முடிந்து அடுத்த ஆட்சியே வருகின்ற சூழ்நிலையில் இதுவரை ஒருவர் வங்கி கணக்கில் கூட பணம் போடவில்லை. அதற்கு பதிலாக நாமத்தைதான் போட்டுள்ளார்.
புதிய இந்தியாவை கொண்டு வருகிறேன் என்று கூறி இரவில் அவர் மட்டும் முழித்து இருந்து ரூ.500, ரு.1000 நோட்டை செல்லாது என்று அறிவித்து இருந்தார்.
இதன் பலனாக பாமர ஏழை மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்திருந்ததுதான் மிச்சம். இப்படி காத்திருந்த ஏழை மக்களில் 150 பேர் இறந்துள்ளனர்.
ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று மோடி அறிவித்தார். ஆனால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கொண்டு வந்து 10 கோடி பேருக்கு வேலையிழக்க செய்தார். இதனை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களித்து வருகிற 18-ந் தேதி அன்று மோடியை கெட்டுஅவுட் செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய 2 பேருக்கும் அந்த பதவி மோடி போட்ட பிச்சையாகும். அவர்கள் இந்த பதவியை பயன்படுத்திக் கொண்டு ஒக்கி, கஜா போன்ற புயலில் பாதிப்படைத்த மக்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கவில்லை.
மேலும், ஸ்டெர்லைட் பிரச்சினையின் போது கூடிய மக்களை கலைப்பதற்காக 13 பேரை சுட்டு கொன்றது இந்த ஆட்சி. ஆனால், இதுவரை மோடியோ, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
வெளிநாடுகளில் சுற்றி திரிந்த மோடி இந்த 5 வருடங்களில் பிரச்சினை காலங்களில் தமிழகத்திற்கு ஒரு தடவைக் கூட வரவில்லை. ஆனால் தேர்தல் வந்ததும், 3 முறை மோடி வந்து சென்றுள்ளார்.
கடந்த மாதம் வரை துணை முதல்வரை டயர் நக்கி ஓ.பி.எஸ். என்றும், முதலமைச்சரை ஒரு வார்டு கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் என்றும் கூறியவர் அன்புமணி ராமதாஸ். ஆனால், அவர்கள் தற்போது மோசடி கூட்டணியுடன் சேர்ந்து உள்ளனர்.
மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என்று அவர் சென்ற தேர்தலின்போது கூறி வந்தார். தற்போது பார்க்கும்போது தடுமாற்றம், ஏமாற்றம், சூட்கேஸ் மணி என்று தெரிகிறது.

இதேபோன்று பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி. சராசரியாக தொகுதி வாரியாக 60 முதல் 65 கேள்விகளை எழுப்ப வேண்டும். ஆனால், அன்புமணி ராமதாஸ் இதுவரைக்கு வெறும் 12 கேள்விகளை மட்டுமே எழுப்பி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தர்மபுரி பாராளுமன்ற பிரச்சினை குறித்து இதுவரை எந்த கேள்வியும் எழுப்பவில்லை என்பது தெரிகிறது.
ராமதாசுக்கு இந்த கூட்டணியில் சிறிதுக்கூட விருப்பம் இல்லை. ஆனால் அன்புமணியின் கட்டாயத்தினாலோ அல்லது பணம் வாங்கியதலோ இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் கடந்த தேர்தலின்போது நான் வெற்றி பெற்றால், தர்மபுரியில் வீடு எடுத்து தங்குவேன் என்று கூறினார். ஆனால் அவர் இங்கு ஒரு நாள் கூட தங்கவில்லை.
மேலும், அவர் இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி வாக்குறுதி கொடுத்தார் ஆனால் இங்கு ஒரு தொழில் நிறுவனம் கூட அமையவில்லை.
ஆகவே, தி.மு.க. சார்பில் எனது தாத்தா கலைஞர் வழியில் தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற வாக்குபடி செயல்பட்டு வருகிறார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீட் தேர்வு, கல்வி கடன், விவசாய கடன் ஆகியவற்றை ரத்து செய்வோம். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச ரெயில், பஸ்பாஸ் வழங்கப்படும். டி.வி. கேபிள் கட்டணம் குறைப்பு ஆகிய திட்டங்களை செயல்படுத்துவோம். அண்ணன் ராகுல்காந்தி 25 கோடி குடும்பங்களுக்கு ஒரு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறி உள்ளார். ஆனால், ஊழல் ஆட்சியை சேர்த்தவர்கள் இவற்றை தரமுடியாது என்று கூறி வருகின்றனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். ஏனென்றால் இதனை கூறியது மோடி அல்ல, ராகுல் காந்தி. சொன்னது சொன்னபடி நடைபெறும். 100 நாள் வேலை திட்டத்தை தற்போது உள்ள ஆட்சி 40 நாட்களாக குறைத்துள்ளது. மீண்டும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்கள் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
அம்மா வழியில் ஆட்சி செய்வோம் என்று கூறிக்கொண்டு வரும் எடப்பாடி ஆட்சி. ஜெயலலிதாவின மறைவு குறத்து இதுவரை எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் செயல்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, நீட் தேர்வில் அனிதா இறப்பு என பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்திற்கும் தீர்வு காணப்படும்.
இதனை அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை நீங்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #UdhayanidhiStalin

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் வரும் 2-ம் தேதி சென்னை வர உள்ளனர். தேர்தல் தொடர்பாக 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார். #LokSabhaElectoins2019 #ElectionCommissioner






