search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசியதில் விதிமீறல் இல்லை - தலைமை தேர்தல் ஆணையம்
    X

    பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசியதில் விதிமீறல் இல்லை - தலைமை தேர்தல் ஆணையம்

    செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை குறித்து தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதில், தேர்தல் விதிமீறல் இல்லை என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை மதியம் திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி இருப்பதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை பற்றி விசாரணை நடத்த தனிக்குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தியது.

    தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் ஆல் இண்டியா ரேடியோ உயர் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதன் பேரில் தூர்தர்சனும், ஆல் இண்டியா ரேடியோவும் விளக்கம் அளித்தன.



    இதற்கிடையே பிரதமர் மோடி, தொலைக்காட்சி மற்றும் ரேடியோவில் பேச தங்களிடம் எந்த முன் அனுமதியும் பெறவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா இந்த தகவலை கூறினார்.

    பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் விதிமீறல் உள்ளதா? என்று தேர்தல் ஆணையம் இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இதற்கான குழுவும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், மோடியின் உரையில் விதிமீறல் உள்ளதா? என்பது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரையில் எந்த நடத்தை விதிமீறலும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

    பின்னர் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தியது தொடர்பாக, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியதில் விதிமீறல் இல்லை என அறிவித்தது. #Modi #MissionShaktiSpeech #ElectionCommission 
    Next Story
    ×