என் மலர்
திருச்சிராப்பள்ளி
- மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி ரெயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட கிழக்கு அலுவலகத்தை நேற்று மாலை சில மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இதனை அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறி ஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அலுவலகத்தை அடித்து சூறையாடிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். திடீர் சாலை மறியலால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தை அடித்து சூறையாடியதாக சந்தேகத்தின் பேரில் ராஜா என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி.வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 22.3 கிராம் கஞ்சா, குட்கா பொருட்கள் 136.6 கிலோ கிராம், மதுபான வகைகள் 276.2 லிட்டர், கள்-346லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு கட்சியினர் மீது 11 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 12,723 வழக்குகளும் ரூ.1,23,64,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மேற்பார்வையில், நிலையான கண்காணிப்பு குழு-19, பறக்கும்படை குழு-19, சோதனை சாவடிகள்-15 அமைக்கபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட எஸ்.பி வருண்குமார், மேற்பார்வையில் 3 கூடுதல் எஸ்பிக்கள், 11 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், 37 இன்ஸ்பெக்டர்கள், 253 எஸ்.ஐ, 1292துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் 9487464651 என்ற எண்ணில் 24மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
- கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
- இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மண்னச்சநல்லூரி தேர்தல் பிரசாரத்தின்போது நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:-
பல ஆண்டு கால வறுமையை ஒழிக்க இந்த தேர்தல் அரசியல் வரலாற்று வாய்ப்பு. அன்று வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களைப் போல, இன்று கொள்ளையர்களை எதிர்த்து கருவியின்றி அறிவாயுதம் கொண்டு அரசியல் போர் புரிந்து கொண்டிருக்கிறோம்.
கப்பல் துறை தனியார், போக்குவரத்து துறை தனியார், கல்வி துறை தனியார் மருத்துவத்துறை தனியார் விமானத்துறை சாலை பொருள் தனியார், ரெயில்வே துறைகளை தனியாருக்கு மாற்றவேண்டிய அவசியம் என்ன?
கல்வி உரிமையை பறிகொடுத்து விட்டு மாநில தன்னாட்சியின் பெயர் பற்றி பேசுவது கொடுமை. இந்தியாவில் பாமரனும் அம்பானியும் ஒரே மாதிரியான வரியினை செலுத்துகின்றனர். ஆனால் இருவரது வாழ்க்கை தரம் தான் வேறுபட்டு இருக்கிறது.
விலைவாசி உயர்வால் நமது வாழ்க்கை தரம் மாறிப்போச்சு. இந்த நிலை தொடரக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாறுதலை ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவின் கணவர் அன்பரசு தனது காரில் கட்டு கட்டாக பணம் கொண்டு செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜீயபுரம் துணை போலீஸ் பிரண்டு பாலசந்தர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் அந்தக் கார் எட்டறையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அடுத்த சில நிமிடங்களில் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் பூஜையறையில் டிராவல் பேக்கில் ரூ. 500 நோட்டுகள் கட்டு கட்டாக இருந்ததை கண்டனர்.
உடனே இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 5 பேர் கொண்ட வருமானத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒன்றரை மணி நேரமாக அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இது ரூ.1 கோடி அளவுக்கு இருக்கும் என கூறப்பட்டது.
பின்னர் அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதன் பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா அன்பரசுவை விசாரணைக்காக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு முன்பும் விசாரணைக்கு அழைத்துச் சென்ற முசிறி காவல் நிலையம் முன்பும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அன்பரசு அ.தி.மு.க. பிரமுகர் ஆவார்.
- கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார்
- மோடி தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று திருச்சியில் உள்ள தும்பலம், அயித்தாம்பட்டி, வாளசிராமணி பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.
குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.
இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.
மீண்டும் என்னை எம்.பி.யாக நீங்கள் தேர்ந்தெடுத்தால் இந்த தும்பலம் தொகுதியில் சமுதாய கூடம் கட்டி கொடுப்பேன். அதே போல் காவேரி ஆற்றில் இருந்து குடிநீர் கேட்டுள்ளீர்கள். நான் மீண்டும் வென்றால் காவேரி குடிநீர் திட்டம் கொண்டு வருவேன்.
பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.
நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .
இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.
கேணிப்பள்ளம் ஊரை விட்டு இயங்கி வரும் கல்குவாரி உள்ளது. அங்கிருந்து வரும் புழுதியால் கிராம மக்கள் பாதிப்படைகின்றனர். அதனால் குழந்தைகளுக்கு மூச்சி திணறல் ஏற்படுகிறது என்று நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள். நான் மீண்டும் எம்.பி.யாக வென்றால் அந்த கல் குவாரியின் இடத்தை மாற்றி அமைப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். மோடி தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார்.
தற்போது கூட பாஜக ஆட்சியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களால் பல நூறு ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டு மோடி ராமர் கோவில் கட்டியுள்ளார். நாம் எல்லாரும் இந்தியர்கள் இந்துக்கள். நம் தாய் நாட்டின் மீது நமக்கு பற்று வேண்டும்.
மோடி ஆட்சியில் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் இங்கிருந்து பல ஆயிரக்கணக்கானோர் சென்றனர். காசிக்கு செல்வது புண்ணியம்.
மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.
பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம்.
சுட்டெரிக்கும் சூரியனை மறந்து விட்டு கல்விக்கடவுளான சரஸ்வதி அமர்ந்திருக்கும் தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
- இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.
- கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும்.
கே.கே. நகர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சி, ஊராட்சி தேர்தல்களில் மாவட்ட தலைவர்கள் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வார்களோ அதேப்போன்று பிரதமர் மோடி பாராளுமன்றத் தேர்தலுக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து போகிறார். தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியுமா? என முயற்சிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தமிழக மக்கள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் பா.ஜ.க.வை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மண் சமூக விடுதலைக்கான மண் சமூக நீதிக்கான மண். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கருத்து ஒரு பார்வை உள்ளது. இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.
தற்போது கச்சத்தீவு பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் வெஜ் பேங்கை இந்திரா காந்தி இந்தியாவுடன் இணைத்தார். அங்கு அது கனிம வளங்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதுகுறித்து ஏன் மோடி பேசவில்லை? கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும். பிரதமர் மோடி கடந்த பத்தாண்டு காலமாக சர்வாதிகாரி போல தான் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. காங்கிரசின் நடவடிக்கையால் மட்டுமே இந்தியா தலைநிமிர்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
- எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும்.
மண்ணச்சநல்லூர்:
நடிகர் கஞ்சாகருப்பு தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அம்மனுக்கு அவர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார். அக்னி சட்டியை அவர் கோவிலில் இறக்கி வைக்கும்போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு வணங்கினார். பின்னர் அம்மனை தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறேன். சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டுவது நிச்சயம் நடக்கும்.
எதிர்க்கட்சியினர்கள் எடப்பாடி பழனிசாமியை பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிக்கிறார்கள். காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள். ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி. அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும். தூற்று பவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
- இன்று திருச்சியில் உள்ள புலிவலம், மூவானூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று திருச்சியில் உள்ள புலிவலம், மூவானூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன் இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளும்னறத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.
குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 45 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.
இதேபோல் நியாயவிலை கடைகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.
பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.
நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .
இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.
மீண்டும் என்னை நீங்கள் பாராளுமன்ற உறுப்பிராக தேர்ந்தெடுத்தால் மத்திய அரசு வழங்கும் தொகுதி மேம்பாட்டு நிதி 25 கோடியை பயன்படுத்தி உங்களின் குறைகளை நிவர்த்தி செய்வேன்.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.
மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.
நாமக்கல் - பெரம்பலூர் - அரியலூர் புதிய ரயில்பாதையை ஓரிரு ஆண்டுகளில் நான் செய்து கொடுப்பேன்.
தேசிய நெடுஞ்சாலைகளில் 3 மேம்பாலங்கள் கட்டி கொடுத்துள்ளோம். 9 தரைப்பாலங்கள் கட்டி கொடுத்துள்ளோம். 2 உயர்மட்ட பாலங்கள் கட்டி கொடுத்துள்ளோம்.
உங்கள் ஊரில் தொழிற்சாலை வேண்டும் என்று கேட்டுளீர்கள். காட்டுகுளம் - திருவலஞ்சுழி சாலையை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுளீர்கள். புலிவலத்தில் புதிய ஒன்றிய அலுவலகம் வேண்டும் என்று கேட்டுளீர்கள். என்னை மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெடுத்தால் உங்களின் தேவைகளை நான் நிறைவேற்றுவேன்.
இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக உறுப்பினர் அருண் நேரு குடும்பம் ஊழல் குடும்பம் ஆகும். திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம்.
யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள் . ஆகவே தாமரையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
- காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:
சிவகாசியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒடிசாவிற்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2.30 மணி அளவில் லாரி திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள முக்கன்பாலம் என்ற இடத்தில் செல்லும்போது அங்கு மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதை கவனிக்காமல் லாரியை ஓட்டிச்சென்றதால் தடுப்புச் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இந்த தீப்பெட்டிகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.
நேரம் செல்லச்செல்ல தீ கொளுந்து விட்டு எரிந்ததால் இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உதவியாளர் என இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்டம்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.
திருச்சி:
பஞ்சபூதங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக் காவல் ஜெம்பு கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 17-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 24-ந்தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டத்திற்கான எட்டுத்திக்கும் கொடியேற்றம் கடந்த 3-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் தினமும் சாமி, அம்மன் காலையில் புறப்பாடு கண்டருளியும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று இரவு தேரோட் டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெருவடச்சானில் வீதி உலா வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதற்கென இன்று அதிகாலை சாமி, அம்மனுக்கு உற்சவர் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் உற்சவர் ஜம்புகேஸ்வரர் பெரிய தேரிலும், அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர்.
முன்னதாக விநாயகர், சுப்ரமணியர் சிறிய தேரோட்டம் தேரோடும் வீதிகளில் வந்து நிலையை அடைந்தது. பின்னர் காலை 6.50 மணியளவில் ஜம்புகே ஸ்வரர் சுவாமி தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி அடங்கிய நான்கு பிரகாரங்களில் சுற்றிவந்த தேர் மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்தது.
பின்னர் காலை 8.15 மணிக்கு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அம்மன் தேர் சுவாமி தேருக்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தப்ப ட்டது. அம்மன் தேருக்கு பின்னால் சண்டீகேஸ்வரர் சிறிய சப்பரத்தில் வந்து அருள்பாலித்தார். மீண்டும் பக்தர்களால் சாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு காலை 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அம்மன் தேர் 12.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தின் போது கோவில் யானை அகிலா தேருக்கு முன் செல்ல மேளதாளம், சங்கொலி முழங்க வாணவேடிக்கையுடன் சிவ, சிவ, ஓம் சக்தி என்ற பக்தி முழக்கத்திற்கு நடுவே உற்சவர்கள் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆகியவை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநகர போலீஸ் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வியாபாரிகள் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தேரோட்ட விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், கோவில் பண்டிதர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
- தில்லைநகர் சாலை முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணி.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிற்பகலில் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கியும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதன்படி, நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாற்றுப் பாதையில் பேரணி தொடங்கியுள்ளார்.
அதன்படி, தில்லைநகர் சாலை முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணியை ஜே.பி.நட்டா நடத்தி வருகிறார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் பிரபல நடிகை மஞ்சு வாரியர் என்பது தெரிய வந்தது.
- ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்ண்டு கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன.
திருச்சி மாநகர், புறநகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை திருச்சி-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் பகுதியில், தேர்தல் பறக்கும்படை அலுவலர் ரஞ்சித்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா அடங்கிய குழுவினர் சோதனை மேற கொண்டனர்.
அப்போது, கேரள மாநில பதிவெண் கொண்ட, கருப்பு நிற சொகுசு கார் வந்தது. பறக்கும்படையினர் அதை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் பிரபல நடிகை மஞ்சு வாரியர் என்பது தெரிய வந்தது.
இதனால் தேர்தல் அதிகாரிகள் மஞ்சு வாரியரிடம் விவரங்களை கேட்டுக் கொண்டே சோதனை செய்தனர். இதனிடையே நடிகை மஞ்சு வாரியர் காரில் இருக்கும் தகவல் அப்பகுதியில் தீயாய் பரவியது. பின்னால் நின்று கொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மஞ்சு வாரியாருடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். ஒருபக்கம் சோதனை நடந்த நிலையில், மறுபக்கம் மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்.
கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்க, மஞ்சு வாரியரின் காரை விரைவாக சோதனை செய்து, அவரை வேகமாக தேர்தல் பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர். முழுமையான சோதனை முடிந்த பின்னர் நடிகை மஞ்சு வாரியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சோதனையில் பணம், பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என பறக்கும் படையினர் தெரிவித்தனர்.






