என் மலர்
திருச்சிராப்பள்ளி
- நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
- வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
மணப்பாறை:
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பின்னர் மாலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். குடும்பத்தினர் சார்பில் முதல் தட்டு பூ அம்மனுக்கு செலுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டு சென்றனர். மேலும் மணப்பாறை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பூக்கள் எடுத்து வரப்பட்டு, ரதங்கள் அனைத்தும் முனியப்பன் கோவில் முன்பிருந்து ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து இரவு நேரங்களிலும் தாரை, தப்பட்டை முழங்க ரதங்கள் வந்த நிலையில் மணப்பாறை பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதையடுத்து சித்திரை திருவிழா வருகிற 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
பின்னர் மே மாதம் 12-ந் தேதி பால்குட விழாவும், 13-ந் தேதி காலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலையில் அம்மன் திருவீதி உலா வரும் வேடபரி நடக்கிறது.
15-ந் தேதி காப்பு கலைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. பூச்சொரிதல் மற்றும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் அன்பழகன் தலைமையில் செய்து வருகின்றனர்.
- விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
- காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து நிஜாமுதீன் சம்பர் க்ராந்தி விரைவு ரெயிலில் நேற்று அதிகாலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
இவர்கள் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் கர்நாடக அரசு மாதா மாதம் தண்ணீர் திறக்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.
- திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
- நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மலைக்கோட்டை தாயுமானவ சாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 14--ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷே கமும், இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் நாள் அன்று சிவபக்தியில் சிறந்த செட்டிப் பெண் ரத்தினா வதிக்கு அவளது பேறுகா லத்தில் தாய் வர முடியாத காரணத்தால், அவளது தாயாக சிவபெருமான் வந்து பேறுகாலத்தில் மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

6-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ம் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவி லில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள் வீதி வழியாக 5.40 மணிக்கு தாயுமானவ சாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் 6.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

இந்த தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, அதை தொடர்ந்து கோவில் யானை லட்சுமியும் செல்ல, பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பல்வேறு வகையான மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.
இந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி யில் ஆரவா ரத்துடன் கலந்து கொண்டு சிவ சிவா, தாயுமான ஈசா, ஆரூரா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
- காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னி மங்கலம் மாதாகோயில் தெரு சேர்ந்தவர் அருண்ராஜ் (வயது 41). இவர் ஜல்லிக்கட்டு வீரர். இவருக்கு லாரன்ஸ் மேரி என்ற மனைவியும் 15 வயதுக்குட்பட்ட 2 மகன்களும் உள்ளனர். அருண்ராஜ் ஜல்லிக்கட்டு வீரர் என்பதால் ஜல்லிக்கட்டு காளை அடக்குவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தயாளன் உள்ளிட்டோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பான முன் விரோதத்தில் கடந்த பிப்ரவரி மாதம் லால்குடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது அருண்ராஜை தயாளன் தரப்பினர் தாக்க முயன்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு அருண்ராஜ் வாக்கு செலுத்த சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள பாசன வாய்க்கால் கரையில் மது அருந்தி கொண்டிருந்த தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ் உள்ளிட்டோர் அருண் ராஜை வழிமறித்து கட்டையால் தலையில் தாக்கினர்.
இதில் அருண்ராஜ் பலத்த காயம் அடைந்தார். உடனே தயாளன் உள்ளிட்ட் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயமடைந்த அருண்ராஜ் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அருண்ராஜின் மனைவி லாரன்ஸ் மேரி கொடுத்த புகாரின்பேரில் தயாளன், ஹானஸ்ட்ராஜ், பிரபு, சங்கர், அலெக்ஸ், அலெக்சின் சகோதரர் ஆகிய 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அருண்ராஜ் உடல்நிலை இன்று காலை மோசமானது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அருண்ராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகி றார்கள்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொலை சம்பவம் லால்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள்.
- பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
திருச்சி:
திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் அமைக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
தற்போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிற நிலை வந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெறுவார்கள்.
மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்போம் என கூறுகிறார்கள் அவ்வாறு எல்லாம் நடக்காது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு பெரும்பான்மை பெறும்.
தமிழ்நாட்டு மக்கள் முழுவதுமாக முதலமைச்சரின் பின்னால் இருக்கிறார்கள். சேலத்தில் வெற்றி பெறப்போவது செல்வ கணபதி தான்.
பா.ஐ.க. டெபாசிட் இழக்குமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
- குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை.
திருச்சி:
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நாளை(வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் பதிவு செய்தனர்.
இதனை பிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அதன்படி திருச்சி கலையரங்கில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் வாக்குகளுடன் அந்தந்த தொகுதிகளில் இருந்து வந்த அதிகாரிகள் தபால் வாக்குகளை ஒப்படைத்தனர்.
அதன் பின்னர் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு தொகுதி வாரியாக தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த தொகுதி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி 39 தொகுதிகளிலும் மொத்தம் 94 ஆயிரம் வாக்குகள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உரிய வாக்குகள் அந்தந்த அலுவலர்களுடன் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து அதிகபட்சமாக 5 ஆயிரத்து 445 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதிக்கு 434 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தது.
குறிப்பாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து ஒரு தபால் வாக்கு கூட பதிவாகவில்லை. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பிற மாவட்டங்களில் இருந்து 5031 வாக்குகள் பதிவாகின பெரம்பலூரில் இருந்து அதிகமாக வந்திருக்கிறது.
அதில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து 2493 வாக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 4117 தபால் வாக்குகள் பதிவாகின. அதில் 2674 வாக்குகள் பிற மாவட்டங்களுக்கு பதிவாகி இருந்தது.
திருச்சிக்கு மட்டும் 1443 வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வாக்கினையும் பிற மாவட்டங்களில் திருச்சிக்கு பதிவான 5031 வாக்குகளையும் சேர்த்தால் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு 6474 தபால் வாக்குகள் மொத்தம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற மாவட்டங்களில் இருந்து தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்;-
திருவள்ளூர்-4547, வடசென்னை-4023, மத்திய சென்னை -3,639, ஸ்ரீபெரும்புதூர்-3385, காஞ்சிபுரம் -949, அரக்கோணம் -926, வேலூர்-1863 கிருஷ்ணகிரி-6984 தருமபுரி-597 திருவண்ணாமலை-6551, அரணி-889, விழுப்புரம்-798 , கள்ளக்குறிச்சி-2243, சேலம்-4961, நாமக்கல்-1516 ஈரோடு-2908, திருப்பூர்-4947, நீலகிரி-1450, கோவை-4545, திண்டுக்கல்-1254 கரூர்-2970, பெரம்பலூர்-3028 கடலூர்-2322 சிதம்பரம்-2819 , மயிலாடுதுறை-1408 , நாகப்பட்டினம்-1814 தஞ்சாவூர்-1812 சிவகங்கை-3167 மதுரை-3552 , தேனி-500 , விருதுநகர்-2524 ராமநாதபுரம்-1948, தூத்துக்குடி-1667 தென்காசி-1879 திருநெல்வேலி-2303 கன்னியக்குமரி-434.
- மாதம் 3 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.
- உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் தலங்களில் புகழ் பெற்றதாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இங்கு மாதம் 3 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். இந்த மாதம் 2-வது முறையாக நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வி. எஸ்.பி. இளங்கோவன், கோவில் இணை ஆணையர் கல்யாணி, அறங்காவலர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில், காணிக்கையாக ரூ.87 லட்சத்து 57 ஆயிரத்து 91-ம், 918 கிராம் தங்கமும், 1 கிலோ 644 கிராம் வெள்ளியும், 103 வெளிநாட்டு பணம் மற்றும் 240 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார்.
- மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும்.
திருச்சி:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பணியில் பல துறைகளை சேர்ந்த 4 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார் ஈடுபடுகின்றனர். அவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க தபால் ஓட்டு வசதியையும், ஒரே தொகுதிக்குள் பணியாற்றினால் பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்கும் வசதியையும் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.
வழக்கமாக பயிற்சி மையங்களில் பெறப்படும் தபால் ஓட்டுகளை தொகுதி வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரி பிரித்து, அவர் நியமிக்கும் அதிகாரி மூலம் அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவார். அதன் பின்னரும், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8 மணி வரை தபால் மூலம் அனுப்பப்படும் தபால் ஓட்டுகள் பெறப்படும்.
அத்துடன் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து ஒரு அதிகாரி அனுப்பப்படுவார். அங்கு அவர் சென்று அந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை அளித்துவிட்டு, அவர் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்று வருவார்.
இந்நிலையில் இந்தப்பணியில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட வேண்டியதாலும், இதனால் கால விரயம் ஏற்படுவதாலும், இந்த ஆண்டு தேர்தலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்று, தபால் ஓட்டுகளை மையப்படுத்தி ஒருங்கிணைந்து, தொகுதிகளுக்கு பிரிந்து அனுப்பும் புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில் திருச்சி கலையரங்கம் திருமண்டபத்தில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுள்ளது.

இங்கு இன்று காலை 9 மணியில் இருந்து, மாநிலம் முழுவதும் இருந்து கொண்டுவரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியான திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் கமிஷனின் தபால் ஓட்டுகளுக்கான இந்த புதிய நடைமுறையின் படி திருச்சியில் தபால் ஓட்டுகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் செலுத்திய தபால் ஓட்டுகளுடன் 39 தொகுதிகளில் இருந்தும் அதிகாரிகள் வந்து, திருச்சி மையத்தில் ஒப்படைப்பார்கள்.
இங்கு தொகுதி வாரியாக ஓட்டுகள் பிரிக்கப்பட்டு, அவர்கள் சார்ந்த தொகுதிக்கான தபால் ஓட்டுகளை பெற்றுச் சென்று தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள் அதன்படி நேற்று வரை பெறப்பட்ட எல்லா தபால் ஓட்டுகளும் திருச்சி மையத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, உடனடியாக எல்லா தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமும் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகாரிகளுக்கு வீண் அலைச்சல் கால விரயம் கூடுதல் செலவு ஆகியவை தவிர்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம்.
- உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.
திருச்சி:
தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் செல்வதுபோல தெரிந்தாலும், ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே மிகச் சரியாக உச்சியில் வரும். அப்போது ஒரு பொருளின் மேல் விழும் சூரிய வெளிச்சத்தின் விளைவாக, நிழல் அப்பொருளின் பரப்புக்கு உள்ளேயே விழுவதால் அதன் நிழலைப் பார்க்க முடியாது.
இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். இந்த நாட்களை நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்கின்றனர்
இதன்படி நடப்பாண்டு திருச்சி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை ( வியாழக்கிழமை) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19-ந்தேதி) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிழல் இல்லா நாள் அமைகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில்,
இந்த எளிய வானியல் நிகழ்வை அவரவர் வீடுகளிலேயே செய்து பார்க்கலாம். உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை பார்க்கலாம்.
உங்கள் ஊரில் எப்போது நிழல் இல்லா நேரம் என்பதை அறிந்து கொள்ள https:// alokm.com/zsd.html என்ற இணையதளத்தில் சென்று, ஊர் பெயரை தட்டச்சு செய்தால் உரிய நேர விவரம் கிடைக்கும் என்றார்.
- மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம்.
- தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது.
மண்ணச்சநல்லூர்:
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனை செலுத்துவர். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இறுதியில் இருந்து மக்களின் நலனுக்காக அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பது வழக்கம். இக்காலங்களில் அம்மனுக்கு பக்தர்களால் பூச்செரிதல் நடைபெறும்.
பூச்செரிதலையடுத்து சித்திரை மாதம் முதல் செவ்வாய்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி அம்மன் பட்டினி விரதம் முடிவடைந்து, சித்திரை தேர்திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்பாள் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று 10.30 மணிக்கு வெகு விமரிசையாக தொடங்கியது. முன்னதாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் மூலஸ்தானத்திலிருந்து அம்மன்(உற்சவர்) புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் மிதுன லக்கனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மிகுந்த உற்சாகத்துடன் ஒம் சக்தி, பராசக்தி என்ற பக்தி கோஷமிட்டவாறு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் சென்று, முக்கிய வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னர் நிலையை அடைந்தது.
விழாவின்போது ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்ரனர். இத்தேரோட்டத்தினைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
இந்த திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் திருவிழாவையொட்டி 7 மாவட்டங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இதேபோன்று திருச்சியில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் துறையூர் வழியாக சென்னை செல்வதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மரக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 48 இடங்களில் மண்டகப்படி பூஜைக்கான அம்பாள் நேற்று இரவு புறப்பட்டார்.
பல்வேறு இடங்களில் பூஜைகளை பெற்றுக் கொண்டு பின்னர் இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மன் தேரில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள மக்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தேர் திருவிழாவை கண்டுகளிக்க குவிந்தனர்.
இந்நிலையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் இருக்க அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கோவையில் இருந்து இன்று பிற்பகல் 3.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் ஜே.பி.நட்டா 3.40 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைகிறார்.
- ரோடு ஷோ நிறைவடைந்ததும் அவர் மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முசிறி பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார்.
இதற்காக கோவையில் இருந்து இன்று பிற்பகல் 3.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் ஜே.பி.நட்டா 3.40 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு முசிறி அருகாமையில் உள்ள சிட்டிலரை பகுதிக்கு செல்கிறார்.
அங்கிருந்து கார் மூலம் முசிறி செல்கிறார். பின்னர் அங்குள்ள துறையூர் சாலை ரவுண்டானாவில் இருந்து பரிசல் துறை சாலை வரை நடைபெறும் ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ நிறைவடைந்ததும் அவர் மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார்.
பின்னர் மாலை 6 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜே.பி.நட்டா வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் முசிறியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரோடு ஷோ ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
- வெளிநாட்டு பிரஜை என்பதால் குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
- நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது.
திருச்சி:
இலங்கை சிங்கள ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட உச்சகட்ட போரின் காரணமாக லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்தனர். அந்த வகையில் சொத்து உடைமைகளை விட்டு உயிரைக் காப்பாற்றுவதற்காக தமிழகத்திற்கு வந்த இலங்கை அகதிகள் ஆங்காங்கே சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அவர்கள் தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு ரேஷன் பொருட்கள், தமிழக அரசின் மகளிர் உரிமை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் வெளிநாட்டு பிரஜை என்பதால் குடியுரிமை மற்றும் வாக்குரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியுள்ள நளினி கிருபாகரன் என்ற 38 வயது பெண்மணி நடை பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளார்.
நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரே இந்த உரிமை அவருக்கு கிடைத்துள்ளது. இவர் கடந்த 1986-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் முகாமில் பிறந்தார். பின்னர் திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டார். இந்த வாக்கு உரிமைக்கான அவரது பயணம் 2021 ல் தொடங்கியது. முதலில் இந்திய பாஸ் போர்ட்டுக்காக அவர் விண்ணப்பித்த போது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை நாடினார்.
2022 ஆகஸ்ட் 12ஆம் தேதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், நளினியின் மண்டபத்திலிருந்து பிறந்த சான்றிதழைக் காட்டி, அவருக்கு இந்திய பாஸ்போர்ட்டை வழங்கு மாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 1950 ஜனவரி 26 மற்றும் ஜூலை 1, 1987 க்கு இடையில் இந்தியாவில் பிறந்த ஒருவர் குடியுரிமைச் சட்டம், 1995 ன் பிரிவு 3 சட்டத்தின் படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
பின்னர் அந்த பாஸ்போர்ட்டைப் பாதுகாத்தார். பின்னர் ஒரு வழியாக சட்ட போராட்டம் நடத்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையை நளினி பெற்றார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, இந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க போகிறேன் நான் ஒரு இந்தியன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். இந்த வாய்ப்பை பெறுவதற்கு பல ஆண்டுகளாக கனவு கண்டேன். முகாமில் உள்ள அனைத்து அகதிகளும் இந்த உரிமைகளை அனுபவிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை உறுதி செய்யும் கட்சிக்கு நான் வாக்களிப்பேன் மேலும் இந்தியாவில் பிறந்த எனது 2 குழந்தைகளுக்கு குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். திருச்சி கொட்டப்பட்டு சிறப்பு முகாமில் வசிக்கும் இன்னொரு பெண்மணி கூறும் போது,
மகளிர் உரிமைத்தொகை உள்பட மாநில அரசின் திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம் என்றாலும் நான் இந்த பகுதியை சேர்ந்தவள் என கூறும்போது மகிழ்ச்சி கிடைக்கிறது. இந்த வாக்களிக்கும் உரிமை துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் உறுப்பினர்களுக்கு நீதியை வழங்குவதாக இருக்கும். அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றார். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியின் பேராசிரியர் ஆஷிக் போனோஃபர் கூறுகையில், மாநிலம் முழுவதும் இதேபோன்ற முகாம்களில் 58,457 அகதிகள் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு புதிய அரசிற்கு அரசியல் விருப்பம் இருக்க வேண்டும் என்றார். நளினியின் வழக்கை உயர்நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் ரோமியோ ராய் கூறும்போது, நளினி போன்று முகாமில் உள்ள மற்ற அகதிகள் அனைவரும் விரலில் மை பூசுவதை உறுதி செய்யும் பணி தொடரும் என்றார்.






