search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manaparai Vepilai Mariamman"

    • நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
    • வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    மணப்பாறை:

    மணப்பாறை நகரின் மையப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பின்னர் மாலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ். குடும்பத்தினர் சார்பில் முதல் தட்டு பூ அம்மனுக்கு செலுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டு சென்றனர். மேலும் மணப்பாறை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் பூக்கள் எடுத்து வரப்பட்டு, ரதங்கள் அனைத்தும் முனியப்பன் கோவில் முன்பிருந்து ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து வேப்பிலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து இரவு நேரங்களிலும் தாரை, தப்பட்டை முழங்க ரதங்கள் வந்த நிலையில் மணப்பாறை பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதையடுத்து சித்திரை திருவிழா வருகிற 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    பின்னர் மே மாதம் 12-ந் தேதி பால்குட விழாவும், 13-ந் தேதி காலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலையில் அம்மன் திருவீதி உலா வரும் வேடபரி நடக்கிறது.

    15-ந் தேதி காப்பு கலைதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. பூச்சொரிதல் மற்றும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் அன்பழகன் தலைமையில் செய்து வருகின்றனர்.

    ×