என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார்.
    • கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருச்சி:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி கலாவதி. இந்த தம்பதியருக்கு மீராஜாஸ்மின் (வயது 22)என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். குழந்தைகளின் கல்விக்காக அந்தோணிசாமி திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் 5-வது குறுக்கு பிரதான சாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    தற்போது அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மீரா ஜாஸ்மின் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். அதன் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.எஸ்.சி முடித்தார். பல்கலைக்கழக தேர்விலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

    நேற்று முன்தினம் தனது தாயாரிடம் வேலை தேடிச் செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் தாயார் கலாவதி அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

    முழுமையாக ரிங்க் போய் கட் ஆனது. ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கலாவதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தார்.

    இதற்கிடையே திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடக்கும் தகவல் வெளியானது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மீரா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது.

    உடலின் அருகே அவரது கைப்பை, செல்போன், காலணிகள் கிடந்தன. பீர் பாட்டில்களும் கிடந்தன. உடல் பாதி நிர்வாண நிலையில் கிடந்தது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட மீரா ஜாஸ்மின் கல்லூரியில் படித்த போது அவருடன் ஒன்றாக படித்த தோழியின் அண்ணன் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் மீராஜாஸ்மின் அவரை பிரிந்தார். இதனால் விரக்தி அடைந்த தோழியின் அண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதன் காரணமாக பழிக்கு பழியாக காதலனின் உறவினர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மாயமான பட்டதாரி இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சிறுகனூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பட்டதாரி மாணவி மீரா ஜாஸ்மின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர்.

    மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் திரண்டு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் இறப்புக்கு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது போலீஸ் அதிகாரிகள் இப்போது போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மணி நேரத்தில் புலன் விசாரணை முடிவுகள் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என கூறினர் அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தில்லை நகர் உறையூர் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

    • தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
    • அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மத்திய வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.

    முறைகேடு நடந்ததா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை. விசாரணையில் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம்.

    தி.மு.க.வை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.

    தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க.வின் பி.டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார்.

    சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

    • காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • ஸ்ரீபெரும்புதூர், தச்சங்குறிச்சி, மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர்,

    திருச்சி:

    சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை,

    மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், தச்சங்குறிச்சி, மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர்,

    தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், மற்றும் ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    • பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
    • அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் எதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கரூர் சம்பவம் நெரிசலால் ஏற்பட்டதல்ல, வேறு யாரோ தூண்டுதலின் பேரில் நடந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் திசை திருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனமும் கூடவே எழுந்தது.

    நெரிசல் சாவு பிறரால் தூண்டப்பட்டு நடத்துவது அல்ல. தன்னார்வத்தோடு வரக்கூடியவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிகரிக்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கும்பமேளா, கர்நாடகாவில் கிரிக்கெட் விளையாட்டு நிகழ்வு, ஆந்திராவில் அல்லு அர்ஜுன் திரைப்படம் பார்க்க சென்றபோது அவரை பார்க்க வந்து உயிரிழப்பு சம்பவம் போன்ற பல்வேறு இடங்களில் நிகழ்ந்து இருக்கின்றன. எதற்காக அவர்கள் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை..

    கரூர் சம்பவத்தில் இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை சொல்வதே பா.ஜ.க.வின் வாடிக்கையாக உள்ளது. கற்பனையாகவும், யூகத்தின் அடிப்படையிலும் பல செய்திகளை நயினார் நாகேந்திரன் பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

    தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமித்த பிறகும் அண்ணாமலை தான் தலைவர் போன்று மனநிலையில் ஏதேதோ பேசி வருகிறார். விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப் போகிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்று இயங்கக்கூடிய தலைவராக இருக்கிறார்.

    அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு எந்த சூழலும் இல்லை. அதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்..

    கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்க்கு நிறைய அனுபவம் படிப்பினை கிடைத்திருக்கிறது. அதனால் அவர் பின்னால் யாரும் வர வேண்டாம். தொண்டர்கள், நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்க வர வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது தவறில்லை. கரூர் சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தது குறித்து நீதிபதிகள் தான் விளக்க வேண்டும்.

    அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி ஏற்படும் என்பது அ.தி.மு.க. தரப்பில் பரப்பப்படும் வதந்தி. பா.ஜ.க.வை கழற்றி விட்டு விட்டு த.வெ.க.வோடு கூட்டணி வைக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறார்களா?. அவ்வாறு அமைந்தால் அ.தி.மு.கவின் நம்பகத்தன்மை போய்விடும்.

    அண்ணாமலை முந்திரிக் கொட்டைத்தனமாக விமர்சனம் செய்தது உள்நோக்கம் கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்.
    • யாரை பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும் போது,

    தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது, முறையான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    ஆனால் இந்த கரூர் விவகாரத்தில் 8 பாஜக எம்.பி.க்கள் உடனடியாக தமிழகத்திற்கு வருகிறார்கள். தமிழகத்திற்கான எந்த பிரச்சனைகளுக்கும் பா.ஜ.க. குரல் கொடுக்கவில்லை,

    முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். யாரை பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை முதல்வர் வெளியிட்டிருக்கிறார்.

    வேண்டுமென்றே பிரச்சனை உண்டு செய்வதற்காக பா.ஜ.க. இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

    • விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம்.
    • விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார்.

    திருச்சி:

    திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுவிலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும். அது நடைமுறைக்கு வந்தால்தான் இளம் தலைமுறையை காப்பாற்ற முடியும். அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் இளைஞர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள். அவர்களில் கணிசமானோர் போதையில் பங்கேற்பதை நானே கவனித்து இருக்கிறேன்.

    த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு, காவல்துறை அஞ்சுகிறதா? த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும்.

    விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை எனில் ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்?

    விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததற்கு காரணம் என்ன? திமுக-தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா? விஜய் மீது வழக்குபதிவு செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்தது யார்? ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பி விடுவார்கள் என விஜய் வீடியோவில் அவ்வாறு பேசி உள்ளார்.

    மூன்று நாட்கள் சும்மா இருந்துவிட்டு ஆர்எஸ்எஸ் தலைமை சொன்னதும் வீடியோ வெளியிடுகிறார்.

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கும் விஜய்யின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. விஜய்யை சுற்றி இருக்கும் அனைவரும் பா.ஜ.க. பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். திமுக கூட்டணிக்கான சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் மூலம் பிரிப்பதே பாஜகவின் திட்டம். பாஜக-அதிமுக கூட்டணியில் கண்டிப்பாக விஜய்யை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். கரூர் துயர சம்பவத்தில் விஜய்யை காப்பாற்ற பாஜக முயற்சி செய்கிறது.

    விஜய் சுதந்திரமாக அரசியலுக்கு வரவில்லை; முழுக்க முழுக்க பாஜக தூண்டுதலே காரணம். விஜய்யின் கொள்கை எதிரியான பாஜகவே அவரை பாதுகாக்க முயற்சிக்கிறது. பாஜக பாதுகாக்க முயல்வதன் மூலம் விஜய்யின் சாயம் வெளுத்துப் போய்விட்டது.

    அண்ணா ஹசாரே போன்று விஜய்யை பாஜக பயன்படுத்துகிறது. விஜய்யை பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பாஜக முயல்கிறது.

    தமிழக அரசு, காவல் துறைதான் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சி நிர்வாகம் தோல்வியடைந்து விட்டது. இப்படியெல்லாம் மடைமாற்றம் செய்ய பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    விஜய் ஆபத்தான அரசியலை கையிலெடுத்திருக்கிறார். வெறுப்பு அரசியலை பேசி வரும் விஜய்யால் தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. குற்றவுணர்வே இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது விஜய் பழிபோட முயற்சிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றிக்கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர்.
    • அடுத்த தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் செத்து கிடக்கும்போது அழுகை வந்தது.

    திருச்சி:

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் அனைவரும் அவரவருடைய கருத்துக்களை கூறுவர்.

    நான் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு செய்தி வந்தது. இரவு 10 மணிக்கு நான் கரூர் சென்றேன். நம் கண் முன்னாடியே பிணவறை முன்பு பள்ளி மாணவர்கள் செத்து ஸ்ட்ரக்சரில் தூக்கி வரும் பொழுது எந்த மனிதனாக இருந்தாலும், எந்த தலைவனாக இருந்தாலும் இறப்பின் பொழுது மன வேதனை இருக்கத்தான் செய்யும்.

    கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நான் எந்த கருத்து சொன்னாலும் சரி இருக்காது. அவர் உடனடியாக களத்தில் சென்று கண்டுபிடித்து யார் மீது தவறு? என்று கூறினாலும் அது தவறுதான்.

    தமிழக வெற்றிக்கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்வதில் தவற விட்டுவிட்டனர். அனைவருக்கும் மனிதாபம் என்று ஒன்று உள்ளது .உயிரிழப்புகளில் அவர்களுக்கும் மனவேதனை இருக்கும். அந்த விதத்தில் இது சார்ந்து ஆணையம் சார்பில் ஒரு நல்ல அறிக்கை வரும் பொழுது அது பற்றி பேசலாம்.

    அடுத்த தலைமுறை இளைஞர்கள், மாணவர்கள் செத்து கிடக்கும்போது அழுகை வந்தது. அன்புமணி ராமதாசிற்கு நேற்றே நான் பதில் கூறிவிட்டேன். உணர்ச்சியற்ற இதுபோல் சிலர் இருக்கும் காலகட்டத்தில் நாங்களும் பொது வாழ்வில் இருக்கிறோம். மக்கள் நலன் சார்ந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்களும் இருக்கின்றோம்.

    டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம் என்ற கோர்ட்டு தீர்ப்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் பள்ளி கல்வி முறை சீர்குலைவதை தடுக்கவும் உச்ச நீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறை தமிழக அரசு சார்பாக மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம். ஆசிரியர்களை பாதுகாப்பது ஒரு புறம் இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியில் எந்த தடையும் ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    ஒற்றுமை மிக முக்கியம். ஒரு சிலர் பதவி உயர்வு சார்ந்த கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். ஒரு சிலர் வாழ்வாதாரமே போகக்கூடிய நிலை இந்த டெட் தீர்ப்பில் உள்ளது. டெட் தீர்ப்பில் முதலில் ஆசிரியர்களை காப்பாற்றுவோம். அதன் பிறகு இதில் உள்ள சிக்கல்களை முதலமைச்சருடன் கலந்து பேசி சரி செய்வோம்.

    அரசாங்கம் அன்பு கரங்கள் திட்டத்தில் அயல் நாட்டிற்கு வேலை செல்வது வரை கல்வித் துறையில் பல முன்னேற்றத் திட்டங்களை கொண்டு வருகிறோம். மாணவர்கள் அறிவு சார்ந்த கருத்துக்களை பெற்று யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவியுங்கள். படிக்க வேண்டிய வயதில் படியுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள்.

    உங்களை நம்பி தான் வீடும், அரசும் உள்ளது. உங்களுக்கு பிடித்த தலைவர்கள் பின்னால் நீங்கள் செல்லுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களது உயிர் மிக முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர்.

    திருச்சி:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முதல் தகவல் அறிக்கையில் மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுகளான 105 (கொலைக்கு சமமான கொலைக்கான தண்டனைக்குரிய செயல்), 110 (குற்றமற்ற கொலை முயற்சி செயல்), 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்), 223 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை), டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முதல் இரண்டு சட்டப்பிரிவுகளுக்கு 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரையும், பொதுச்சொத்துகள் சேதத்திற்கு சிறைத்தண்டனை மட்டுமின்றி அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கும் பி.என்.எஸ். சட்டத்தில் இடம் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஒருவர் கூறினார்.

    மேலும் இந்த எப்.ஐ.ஆரில் 'அதர்ஸ்' என்ற வார்த்தை இருப்பதால் போலீசார் தங்களது விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் பெயரையும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவருக்கும் மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார்.
    • அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை கேட்டனர்.

    கே.கே. நகர்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். அவரை சந்திப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    விஜய் வருகையையொட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த நபர் ஒருவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அடையாள பட்டையை அணிந்து முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகில் சென்றார். அவர் மீது சந்தேகப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து அவரது அடையாள அட்டையை கேட்டனர்.

    அப்போது அவர் கழுத்தில் இருந்து அடையாள அட்டை இல்லாமல் வெறும் கழுத்து பட்டை மட்டும் அணிந்து விஜயை அருகில் சந்திப்பதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அந்த பட்டையை பறித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை எச்சரித்து அனுப்பினர். இதனால் திருச்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

    • விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
    • சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13-ந்தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.

    முதல் நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் திருச்சியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதால் விஜய் பிரசாரம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்தார். பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த அவர் மற்றொரு நாள் வருவதாக தெரிவித்தார்.

    அதன்படி பெரம்பலூரில் நவம்பர் 1-ந்தேதி விஜய் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று காலையில் அவர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காலை 9.30 மணியளவில் அவர் திருச்சியை அடைந்தார்.

    இதனை தொடர்ந்து விஜய், பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் வரும் வழி முழுவதும் சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்யை வரவேற்கின்றனர். அவர்களை பார்த்தப்படி விஜய் கையசைத்தப்படியும், வணக்கம் தெரிவித்தப்படியும் வந்தார். 



    • கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
    • விஜய் பிரசாரம் செய்யும் பகுதிகளில் போலீசார் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.

    திருச்சி:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் நாளான 13-ந் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டார். ஆனால் திருச்சியில் திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் பிரசாரம் தாமதமானது.

    அரியலூரில் நள்ளிரவை கடந்து பிரசாரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்று பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சென்னை பிரசாரம் வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டது. அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    27-ந் தேதி காலையில் நாமக்கல்லிலும் பின்னர் கரூரிலும் பிரசாரம் செய்ய உள்ளார். விஜய் பேசுவதற்கு கரூரில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகில், ஈரோடு ரோடு வேலுச்சாமிபுரம், 80 அடி சாலை ஆகிய நான்கு இடங்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

    இதற்காக காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று அல்லது நாளை கரூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே விஜய் பிரசாரம் செய்யும் பகுதிகளில் போலீசார் கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.

    விஜய் கரூர் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய்க்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

    • ரவியும், பிரபுவும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடைக்குள் இறங்கினர்.
    • திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பொன்மலைப்பட்டி:

    திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் தூய்மை பணிகள் போன்றவற்றில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ள சுப்பையா என்பவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரை சேர்ந்த அய்யாவுவின் மகன் ரவி (வயது 38), சின்ன சேலத்தை சேர்ந்த பிரபு (32) ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே முத்துநகர் கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அடைப்பை சரிசெய்வதற்காக நேற்று மாலை ரவி, பிரபு ஆகியோர் கார்மல் கார்டன் பகுதிக்கு வந்தனர்.

    மேலும் அங்கு திருச்சி மாநகராட்சி உதவி பொறியாளர் ஜெகஜீவன்ராம், இளநிலை பொறியாளர் பிரசாந்த் ஆகியோர் இருந்தனர். இதையடுத்து ரவியும், பிரபுவும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடைக்குள் இறங்கினர். குறிப்பிட்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களின் பெயர்களை கூறி அழைத்தனர். ஆனால் பதில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சாக்கடைக்குள் பார்த்தபோது, ரவியும், பிரபுவும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பின்பு, பாதாள சாக்கடைக்குள் இறங்கினர். அவர்கள் ரவி, பிரபுவை மீட்க முயன்றபோது, 2 பேரும் விஷவாயு தாக்கி இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல்களை கயிறு கட்டி மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதாள சாக்கடைக்குள் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் திருச்சி பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    ×