என் மலர்
புதுக்கோட்டை
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் சந்தியா (வயது 22).திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள இவருக்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் 5பவுன் தங்க சங்கிலி போட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு சந்தியா கந்தர்வக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு, சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டைக்கு மொபட்டில் சென்றார். பழைய கந்தர்வக்கோட்டை- மாதா கோட்டை இடையே செல்லும் போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் , சந்தியாவின் மொபட் மீது மோதினர். இதில் சந்தியா மொபட்டில் இருந்து தவறி விழுந்தார்.
இதையடுத்து 2பேரும் கத்தியை காட்டி மிரட்டி சந்தியா அணிந்திருந்த 5பவுன் தங்கசெயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். அப்போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
இது குறித்து சந்தியா கந்தர்வக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். பெண் போலீசிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:
கீரனூர் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் குடநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி, காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் முனியய்யா முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
கீரனூர் அருகே உள்ள குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட கடியாபட்டி, கலைக்குடிப்பட்டி, கேர்காலனி ஆகிய கிராம பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும், தா.கீழையூர், ராசாபட்டி உள்ளிட்ட ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குன்றாண்டார்கோவில், பெரம்பூர்விளக்கு, கிள்ளுக்கோட்டை பகுதிகளில் உள்ள டாஸ்மாக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்து வந்த கீரனூர் வட்டாட்சியர் கலைமணி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ளது பரமந்துரை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அ.தி.மு.க. பிரமுகர் முத்துவேல்.
இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு பிரச்சனை தொடர்பாக முத்துவேல் ஆவுடையார்கோவிலில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.
அப்போது முத்துவேலுவுக்கு ஆதரவாக அப்போதைய ஒன்றிய செயலாளரும், அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான ராஜநாயகம், அவரது சகோதரரும், ஒன்றிய கவுன்சிலருமான நரேந்திரஜோதி, சேதுராமன், பிலிக்குட்டி, சாத்தக்குடி ராசு ஆகியோர் ஆவுடையார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த ராஜநாயகம் தரப்பினருக்கும், சப்-இன்ஸ்பெக்டர் மீனாம்பிகைக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மீனாம்பிகை தன்னை ராஜ நாயகம் தரப்பினர் தாக்கியதாகவும், அவதூறாக பேசியதாகவும் புகார் அளித்தார்.
அதன்பேரில் ராஜநாயகம் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை அறந்தாங்கி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும், தற்போதும் ராஜநாயகம் இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகி வந்தார்.
இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ரீனா கலையரசி, வழக்கில் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் அளிக்கப்படாததாலும், குற்றம் சரியாக நிரூபிக்கப்படாததாலும் ராஜநாயகம் உள்பட 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என மக்கள் அமைதி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சி, குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டுவருவது கல்வி தரத்தை ஒருபோதும் மேம்படுத்தாது. முதலில் கல்வி கூடங்களில் போதிய கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி கடந்த ஓராண்டு காலமாக கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிற ஆட்சியாக தான் நடந்துவருகிறது. ஓராண்டு சாதனை என்று எதையும் கூறமுடியாது. அ.தி.மு.க.வால் சுதந்திரமாக செயல்பட முடியில்லை. பா.ஜ.க தனது கட்டுப்பாட்டிற்குள் அ.தி.மு.க.வின் 2 அணிகளையும் வைத்து உள்ளது. 2 அணிகளும் ஒன்றுசேர வேண்டும். பிளவை பயன்படுத்தி அ.தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. 4 ஆண்டு காலம் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால், தமிழக அரசியல் அவருக்கு சாதகமாக அமையும். ஆனால் அவரை தங்களோடு கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால் அவர்களது பிடியில் ரஜினிகாந்த் சிக்காமல் இருக்க வேண்டும். வைகோ ஜாமீனில் வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரியில் இந்தி மொழி திணிப்பு மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழர்களுக்கு என தனி அடையாளம் இருக்கிறது. பா.ஜ.க. அரசு தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைக்கிறது. தி.மு.க. இந்தி திணிப்பை மட்டும் எதிர்க்கவில்லை. கலாசாரம், கல்வி, மொழி, மதம் என அனைத்து திணிப்புகளையும் எதிர்க்கிறது.
தமிழர்களின் சிந்தனையை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சித்தால் தோற்றுப்போகும். செல்போன், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இனி மனிதனால் வாழ முடியாது. இவைகள் எல்லாம் மனிதர்களை சிந்திக்க தூண்டுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு முயல்கிறது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் பேர் பெரிய அளவில் டாக்டர்களாக உள்ளார்கள் என்றால், அதற்கு முக்கிய காரணம் தி.மு.க கொண்டு வந்த இட ஒதுக்கீடு தான். நீட் தேர்வு எழுதினால் தான் டாக்டராக முடியுமா? தமிழகத்திற்கு தற்போது நீட் தேர்வுக்கு என்ன அவசியம் வந்தது?.
இந்தியா ஒருங்கிணைந்த தேசம் என்று பா.ஜ.க.வினர் கூறுகின்றனர். ஆனால் கர்நாடகா, கேரளாவில் தண்ணீர் கேட்கும்போது மாநில பிரச்சினை என்று கூறுகின்றனர். விவசாயிகளை சந்திக்க பிரதமர் மறுக்கிறார். மத்திய அரசு தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளை சிந்திக்க கூட மறுக்கிறது.
தமிழகத்தில் இந்தி மொழியை திணித்தால் கண்டிப்பாக புரட்சி வெடிக்கும். மொழிக்காக பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்திருக்கும். ஆனால் தமிழகத்தில் தான் தமிழுக்காக உயிர் தியாகம் செய்து உள்ளனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசின் அறிவிப்புகளை இந்தியில் அறிவிக்கின்றனர். தேர்வுகளையும் இந்தியில் நடத்துகின்றனர். பா.ஜ.க. பிரமுகர்கள் இந்தியில் பேசுகின்றனர். இது அனைவருக்கும் உகந்ததாக இல்லை. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உள்பட நாடு முழுவதிலும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த மாதம் 12-ந்தேதி முதல் இரண்டாம் கட்ட போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
41-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தையும், அவர்களது மண்ணை காக்கவும் நெடுவாசல் பகுதி மக்கள் பல நாட்களாக போராடி வருகின்றனர். ஆனால் இந்த மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவே இல்லை. மக்களின் வாழ்வுரிமை முக்கியமா? தனி முதலாளிகளின் வருவாய் முக்கியமா? என்ற கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் நெடுவாசலை மட்டும் பாதிக்கும் திட்டம் அல்ல, என்பதால் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதனால் இந்த திட்டத்தை உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று 42-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டால் மட் டுமே நாங்கள் எங்களது தொடர் போராட்டத்தை விலக்கிக்கொள்வோம் என நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கடந்த பல தினங்களாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. பிளஸ்-1 தேர்வும் பொதுத்தேர்வு என்று கூறி இருப்பது மாணவர்களுக்கு சிரமங்களை கொடுத்தாலும், நீட் தேர்வு உள்ளிட்ட உயர் கல்வி தொடர்புடைய தேர்வுகளுக்கு இது அவசியம் என்பதால் இதனையும் வரவேற்கிறேன்.
ஆனால் பிளஸ்-1 பொதுத்தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால், அவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க சொல்லாமல் பிளஸ்-2 வகுப்பில் படிக்க அனுமதித்து, பிளஸ்-2 தேர்வு முடிவடைவதற்குள் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், என அறிவிக்க வேண்டும்.
சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தற்போது தான் 8 எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகிறார்கள். ஆனால் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பல மாதங்களாக இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தற்போதுள்ள சூழ்நிலையில், சட்டமன்றத்தை கூட்டினால் தான் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழக விவசாயிகள், தங்களுடைய பிரச்சனைகளுக்காக ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறுவது முறையற்ற கோரிக்கை.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவர் மாநில கட்சிகளுடனோ அல்லது தேசிய கட்சிகளுடனோ இணைய மாட்டார். அவர் தனிக்கட்சி தான் தொடங்குவார்.
தமிழகத்தில் யார் மூலம் பா.ஜ.க. வளர முடியும் என்று நினைத்தே அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் ரஜினிகாந்தை அழைக்கின்றனர். முதலில் அவர் அரசியல் கட்சி தொடங்கட்டும். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி அவரை கூட்டணிக்கு அழைக்குமா என்று முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே திருச்சி சாலையில் நாவல் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு இன்று காலை பொதுமக்கள் சென்றனர். அப்போது அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி அப்பகுதியினர் கந்தர்வக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிணமாக கிடந்த வாலிபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. குடிபோதையில் யாராவது அடிக்துக்கொலை செய்து விட்டு பிணத்தை இங்கு போட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பொன்னமராவதி:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் உஷாராணி (வயது30). இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது கணவர் சுபக்கினுடன் பொன்னமராவதி மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ 2.50 லட்சம் கடன் பெற்று, தனது பைக்கின் இருக்கையின் கீழ் உள்ள பகுதியில் வைத்துள்ளார். வங்கியிலிருந்து புதுப்பட்டி சென்ற உஷாராணி அங்குள்ள குளிர்பானக்கடையில் குளிர்பானம் அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தை திறந்து பார்த்தபோது பணம் வைத்திருந்த பை கீழே விழுந்து கிடந்துள்ளது.
பூட்டிவைத்திருந்த பை விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் பேக்கை திறந்து பார்த்த போது அதிலிருந்த ரூ.2.50 லட்சத்தை காணவில்லை எனக்கூறப்படுகிறது. இது குறித்து பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் உஷாராணி புகார் அளித்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:
பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு, புதிதாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. மேலும் பழைய 500 , 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அதனை வைத்திருப்பவர்கள் ஆங்காங்கே வீசி வருகின்றனர். அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் குளத்துக்கரையில் கடந்த 2 நாட்களாக ஒரு சாக்குமூடை ஒன்று கிடந்தது. அதனை பொதுமக்கள் யாரும் பிரித்து பார்க்காமல் சென்று வந்தனர். இன்று காலை அந்த வழியாக சென்ற நபர், சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதற்குள் ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டி கிடந்தன. அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையை கைப்பற்றி சோதனையிட்டனர். அப்போது அதற்குள் பழைய ரூபாய் நோட்டுக்கள் 500, 1000 ஆகியவை துண்டு துண்டாக வெட்டி கிடந்தன. மேலும் ரூ.100, 50 நோட்டுக்களும் சிறிது சிறிதாக துண்டிக்கப்பட்டு கிடந்தன. துண்டு துண்டாக வெட்டப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.1லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது.
அதனை வெட்டி வீசிய மர்மநபர்கள் யார்? என்று தெரியவில்லை. பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்ததால் போலீசாரிடம் சிக்கி விடுவோமோ? என்று பயந்து அதனை துண்டு துண்டாக வெட்டி வீசினரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் 100, 50 கிடந்ததால் அவை கள்ள நோட்டுக்களாக இருக்கலாமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் ரூ.45 கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆலங்குடியில் பழைய ரூபாய் நோட்டுக்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடையை உடனே மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் அன்னவாசல் அருகே மழவராயன்பட்டியில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி அக்கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மூடாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் எனவும் மிரட்டல் விடுத்தனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதே போல வேலாடிப்பட்டி, நாவினிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டுமென கந்தர்வக் கோட்டையிலும், அரிமளம், கடியாப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூட வேண்டுமென அரிமளத்திலும், சின்னான் கோன்விடுதியில் உள்ள கடையை மூடக்கோரி கறம்பக்குடியிலும், பாக்குடியில் புதிதாக கடை திறக்க உள்ளதை கைவிடக்கோரி அறந்தாங்கியிலும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறைஅருகே ஆர்.எஸ். மாத்தூர் மற்றும் ஈச்சங்காடு கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி பெண்கள் 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளிருந்த மதுப்பாட்டில்களை சாலையில் போட்டு உடைத்தனர்.
இதையடுத்து டாஸ்மாக் மதுப்பாட்டில்களை சேதப்படுத்தியதாக 40 பெண்கள் உள்பட 70 பேர் மீது குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்து ஆர்.எஸ்.மாத்தூரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன், போராட்டம் நடத்திய பெண்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்குடியை நோக்கி நேற்று மதியம் ஒரு அரசு பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் பால்ராஜ் (வயது 55) ஓட்டினார். எதிரே ராமநாதபுரத்தில் இருந்து சேலத்தை நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சை டிரைவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் (35) ஓட்டினார். திருமயத்தை அடுத்த ஊனையூர் அருகே வந்தபோது 2 அரசு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அப்போது காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றோரு அரசு பஸ், விபத்தில் சிக்கி நின்ற சேலம் அரசு பஸ்சின் பின் பகுதியில் மோதியது. இந்த விபத்தில் 3 அரசு பஸ்களின் முன்பகுதியும் சேதமடைந்தது.
மேலும் டிரைவர்கள் பால்ராஜ், முருகேசன் மற்றும் காரைக்குடி நோக்கி சென்ற அரசு பஸ்சிலும், சேலத்தை நோக்கி சென்ற அரசு பஸ்சிலும் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜபரத்(17), ஜெமாலா (34), ரேவதி (35), தொல்காப்பியன் (11), தாமரை (15), கமலா (35), அருள்பிரகாஷ் (25), கல்பனா (33), சிவக்குமார் (41), பால்ராஜ் (55) ஆகிய 12 பேர் காயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் டிரைவர் முருகேசன், ராஜபரத் உள்பட 3 பேர் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பஸ்களில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதுக் கோட்டை-காரைக்குடி நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






