என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மானிய விலையில் பயனாளிகளுக்கு இடுபொருட்களை கலெக்டர் கணேஷ் வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம்,கீரனூர் உள் வட்டத்திற்கு உட்பட்ட கீரனூர், மருதூர், வாலியம்பட்டி, வாழமங்கலம், ஒடுக்கூர், ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட மங்கதேவன் பட்டி, நாஞ்சூர், ஒடுகம்பட்டி, சீமானூர், வத்தனாக்குறிச்சி, வடுகப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு 1,426-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    வருவாய் தீர்வாயம் நடைபெற்ற குறுவட்டங்களை சார்ந்த வருவாய் கிராம மக்கள் கலந்து கொண்டு ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் நலத் திட்டஉதவி கோருதல், பட்டா மாறுதல், பட்டா வழங்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், வருவாய் தீர்வாயம் நடைபெறும் குறுவட்டங்களை சேர்ந்த கிராமங்களுக்கான அடங்கல் மற்றும் கணக்கு புத்தகங்களை பார்வையிட்டு கணக்குகள் சரியாக உள்ளனவா என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கேட்டறிந்து, அந்த கிராமங்களுக்கான கிராம புலப்படங்களை பார்வையிட்டு தணிக்கை செய்தார்.

    நில அளவைத்துறையினர் பயன்படுத்தும் நில அளவை கருவிகள் சரியாக உள்ளனவா? என்றும் ஆய்வு செய்தார்.

    மேலும் வேளாண்மைத் துறையின் சார்பில் தேசிய மண்வள அட்டை இயக்க திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளும், நீடித்தமானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மானிய விலையில் உளுந்து இடுபொருட்களும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் ராஜகோபால், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, வட்டாட்சியர்கள் கலைமணி, சுப்பையா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விராலிமலை அருகே நடுரோட்டில் கார் கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை:

    சென்னையை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அவரது மனைவி குணசுந்தரி  மற்றும் மகன் கார்த்திக், மகள் பிரியா, உறவினர்கள் சுப்புலட்சுமி , சவுமியா ஆகியோருடன் விருதுநகரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் விருதுநகர் சென்றார். காரை பாட்ஷா என்பவர் ஓட்டினார்.

    இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கசவனூர் திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டு பாட்டை இழந்த கார் நடு ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேரும் காய மடைந்தனர் . பலத்த காயமடைந்த குணசுந்தரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செவிலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேலும் குணசுந்தரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் பணியின் போது கவனக்குறைவாக இருந்த சிறை காவலர்கள் 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சிசிறைத்துறை டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர் கடந்த 2.10.16 அன்று ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், திருமயம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட சுரேஷ்குமார் உள்ளிட்ட கைதிகளை ஜெயிலில் உள்ள அறைகளில் இருந்து சிறை காவலர்கள் திறந்து விட்டனர். அப்போது ஜெயில் சுவற்றின் மீது ஏறி கைதி சுரேஷ்குமார் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சிறை காவலர்கள் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தனர்.

    இந்நிலையில் சுரேஷ்குமார் தப்பி ஓடிய சம்பவத்தில் பணியின் போது கவனக்குறைவாக இருந்த சிறை காவலர்கள் அன்பழகன், ரவி, மோகன் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

    புதுக்கோட்டையில் ஆதரவற்றோருக்காக புதிதாக கட்டப்பட்ட “நம்ம இல்லத்தை” அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டையில் நகராட்சி சார்பில் ஆதரவற்றோருக்காக புதிதாக கட்டப்பட்ட “நம்ம இல்லத்தை” மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி தலைமை யில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர்பி.கே.வைரமுத்து முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

    நகர்பகுதிகளில் வீடு இல்லாமல் ஆதரவற்ற நிலையில் சாலையோரங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் தங்கியுள்ளார்கள். இவ்வாறு தங்கியுள்ள ஏழை மக்களின் துயரத்தை போக்கும் வகையில் புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப் பேட்டையில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற வீடு அற்ற ஏழை மக்களுக்கான நம்ம இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இக்கட்டடம் 2500 ச.அ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் தங்கும் இடம், கட்டில், மெத்தை, தலையனை, படுக்கைவிரிப்புகள் 6 கழிவறைகள், 4 குளியலறைகள், மின்விசிறி, பாதுகாப்பு சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் எழிலுற கட்டப்பட்டுள்ளதுடன் தற்பொழுது இந்த இல்லத்தில் தங்கியுள்ள 39 நபர்களுக்கும் 3 வேலையும் இலவச உணவு வழங்கப்படும்.

    மேலும், இவர்களுக்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வீடில்லாமல் பொது இடங்களில் வசித்து வரும் ஏழை பொது மக்கள் மிகுந்த பயன்பெறுவார்கள். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடு இல்லாத ஆதரவற்றோர் நகராட்சியின் ‘நம்ம இல்லத்தை” பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராமையா, முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் சேட்(என்ற) அப்துல்ரஹ்மான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், தியாகு, கூட்டுறவு சங்கத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டைசிறையில் இருந்து கைதி தப்பி ஓடியதால் அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜமோகன். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 25). இவர் கடந்த 2.10.16-ந்தேதி, அதே பகுதியை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் திருமயம் அனைத்து மகளிர் போலீசாரால் கடந்த 6.10.16-ந்தேதி கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று மதியம் உணவுவிற்காக சிறை காவலர்கள் சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து கைதிகளையும் ஜெயிலில் உள்ள கைதிகள் அறையில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது வரிசையின் முதல் ஆளாக உணவு வாங்கி சுரேஷ்குமார் சாப்பிட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் தான் அணிந்திருந்த கைலியை கொண்டு, கயிறுபோல் திரித்து கொண்டு, அதனை சுமார் 20 அடி உயரம் உள்ள சிறையின் சுவற்றின் மேல் உள்ள கல்லில் மாட்டினார். பின்னர் அதன் மூலம் சுவற்றில் ஏறி தப்பி ஓடினார். உணவுவேளை முடிந்த பிறகு மீண்டும் அனைத்து கைதிகளையும் அறையில் அடைக்க, சிறை காவலர்கள், கைதிகளின் பதிவேட்டை சரிபார்த்தனர். அப்போது சுரேஷ்குமார் காணவில்லை என்பது தெரியவந்தது.

    இது குறித்து சிறை துறை அதிகாரிகள் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் சுரேஷ்குமார் எப்படி தப்பித்தார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய கைதி சுரேஷ்குமாரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கீரனூர் அருகே வாலிபரின் தொல்லையால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை  அடுத்துள்ள துவரவயல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவீரன், கூலி தொழிலாளி.  இவரது மகள் சசிகலா (வயது 20). இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த முத்துச்சாமி மகன் குணா (24). செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார்.

    சசிகலா தினமும் மாலை கல்லூரியில் இருந்து ஊருக்கு வந்ததும் வீட்டுக்கு நடந்தே செல்வார். சம்பவத்தன்று நடந்து செல்லும் போது சசிகலாவை வழிமறித்த குணா, தனது மோட்டார் சைக்கிளில் ஏறும்படி தகராறு செய்துள்ளார்.

    இது குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் குணா மீது சசிகலாவின் பெற்றோர்  புகார் செய்தனர். இதையடுத்து குணாவை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த பிரச்சினையால் சசிகலாவுக்கு குணா தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று சசிகலா வீட்டிற்கு சென்ற குணா, அவரை அவதூறாக பேசியுள்ளார். இதில் மனமுடைந்த சசிகலா வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்  சாகுல், ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக  குணா மற்றும் அவரது தந்தை முத்துசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜி.செங்கொடியான் தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜி.செங்கொடியான் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒ.கே.பி. கார்த்திக் பிரபாகரன், வீரமணி, வீரவெற்றி, பாண்டியன், உமாகணேசன், ஆகியோர் முன்னிலையில் கூட்டத்திற்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமசுப்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    டி.டி.வி.தினகரன் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க பொதுச் செயலாளர் வழிக்காட்டுதலில் கட்சியின் சாதி அரசியல் கிடையாது சாதி என்றால் அ.தி.மு.க தான். அ.தி.மு.க கட்சியின் நல்ல தலைமையை டி.டி.வி. தினகரன் மூலமாக தான் நடத்தப்படும். கட்சிக்கு நல்ல தலைமை கிடைத்துள்ளது. கட்சி தலைமைக்கு வலுசேர்க்குவும் ஊன்று துணையாக இருப்போம் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை பாசறை செயலாளர் அருண்குமார், ஒன்றிய அம்மா பேரவை சக்திவேல், புதுக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, குமார்,செந்தில், சுரேஷ் மலையூர்ராஜா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஒன்றியத்தில் உள்ள கந்தர்வ க்கோட்டை, விராலிமலை, கறம்பக்குடி, அறத்தாங்கி, மணல்மேடுக்குடி, திருமயம், பொண்ணமராவதி, ஆலங்குடி பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் இன்று 50-வது நாளை எட்டியுள்ளது. நேற்று நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி சிறுவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2-ம் கட்ட போராட்டத்தை கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கினர். இன்றுடன் போராட்டம் 50-வது நாளை எட்டியுள்ளது.

    நேற்று நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் விவசாயிகள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டார். அப்போது அவர், தொழு நோய் தாக்கியவர் போல் வேடமணிந்து கள்ளிச்செடியிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    மேலும் அப்பகுதி ஆண்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கைகளில் பதாகைகள் ஏந்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து விவசாயிகள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் தங்கசண்முக சுந்தரம் கூறுகையில், விவசாய நிலங்களுக்கு பாதுகாப்பாக கள்ளிச்செடியை தான் வரப்புகளில் வளர்த்து வருவோம். அது போல மத்திய, மாநில அரசுகள் விவசயிகளுக்கு பாதுகாப்பாக இல்லாமல், விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

    எனவே, மத்திய மாநில அரசுகள் விவசாயிகளாகிய எங்களை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை செயல் படுத்தமாட்டோம் என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.





    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை-டெல்லியில் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்று அய்யாக்கண்ணு கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த பிப்ரவரி 16-ந்தேதியில் இருந்து போராட்டம் நடைபெற்றது. மத்திய - மாநில அரசுகள் அளித்த வாக்குறுதியை ஏற்று மார்ச் 9-ந்தேதி போராட்டம் கைவிடப்பட்டது.

    பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதனால் விரக்தி அடைந்த இளைஞர்கள் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்களத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் ஆதரவு அளித்தாலும் விடாது போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த போராட்டக்களத்தை தீவிரப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இன்று 49-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இந்நிலையில் நேற்று நடந்த போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மமேந்திர பிரதான் அளித்த உத்தரவாதத்தை அவர் நிறைவேற்றவில்லை.

    இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரி விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். அதில் தீர்வு கிடைக்காவிட்டால் தலைமை செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன்பிறகு புதுடெல்லியிலும் போராட்டம் நடத்துவோம். போராட்டம் நடத்த நெடுவாசல் மக்களும் அனுமதி அளித்துள்ளார்கள். ஜூன் 16-ந்தேதி புதுடெல்லியில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற உள்ளது . அதில் 28 மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளன.

    அதிலும் இந்த திட்டம் தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளோம். அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்காக போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமடைய செய்யும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த பிப்ரவரி 16-ந்தேதியில் இருந்து போராட்டம் நடைபெற்றது. மத்திய-மாநில அரசுகள் அளித்த வாக்குறுதியை ஏற்று, 41 நாட்களாக நடந்த போராட்டம் கடந்த மார்ச் 9-ந்தேதி கைவிடப்பட்டது.

    பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதனால் விரக்தியடைந்த இளைஞர்கள் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். போராட்டக் களத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் ஆதரவு அளித்தாலும் விடாது போராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் போராட்டக்களத்தை தீவிரப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று 48-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    நேற்று நடந்த போராட்டத்தில் ஆலங்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன், திட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்த நெடுவாசலை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, செந்தில்தாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    போராட்டக்குழுவினர் கூறும் போது, எங்களின் அழைப்பை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களை சேர்ந்தோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த திட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தண்ணீர் குழாயை திறந்து ஒரு ஆடு நீர் அருந்துவது பொதுமக்களிடையே வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னமராவதி:

    தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் நீர் இல்லாததாலும் டெல்டா பகுதியில் கடும் வறட்சி நிலவுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி கால் நடைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    பெரும்பாலான பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து குடிநீருக்காக மான், யானை போன்ற வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தண்ணீர் அருந்தி செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமூக வலைதளங்களில் குரங்குகள், பறவைகள் தாகத்தை தீர்க்க குடிநீர் குழாயில் நீர் அருந்துவது போன்ற படங்கள் வலம் வந்துள்ளன.

    தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தண்ணீர் குழாயை திறந்து ஒரு ஆடு நீர் அருந்துவது பொதுமக்களிடையே வியப் பினை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னமராவதி பட்டமரத்தான் கோவில் எதிரே பேரூராட்சியின் சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த குடிநீர்தொட்டியை ஆடு ஒன்று தனது தலையால் குழாயை திறந்து நீர் அருந்தி செல்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த ஆடு தினமும் இக்குடிநீர் குழாயை தேடி வந்து நீர் அருந்தி செல்கிறது.

    இது அப்பகுதி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து நூதன போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று 46-வது நாளாக போராட்டம் நடக்கிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்களை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று 46-வது நாளாக போராட்டம் நடக்கிறது.


    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உருவபொம்மையை கட்டையால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், சிறுவர்கள்.

    நேற்று நடந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், சிறுவர்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உருவபொம்மையை கட்டையால் அடித்து, கிராமத்தின் எல்லையில் கொண்டுபோய் வீசினர். இந்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×