என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்க தலைவர் மாருதி மோகன்ராஜ் சந்தித்து மனு அளித்தார்.
அதில் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதுக்கோட்டை-காரையூர் -துவரங்குறிச்சி- திண்டுக்கல் சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்.
வேதாரண்யம்-பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை - திண்டுக்கல்-பாலக்காடு -கோழிக்கோடு ஆகிய வரலாற்று நகரங்களை இணைத்து பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் சார்பில் பொது மக்களுக்கும், மாவட்ட போக்குவரத்து அலுவலக துறையினருக்கும் பெரும் உதவியாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், நகரில் வாகன விபத்து நடந்தால் உடனடியாக அவர்களுக்கு உதவிடவும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் தனியாக இடம் ஒதுக்கி தருமாறும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழக முதல்வரிடம் இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் வைரமுத்து, கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் சங்க செயலாளர் சேது.கார்த்திகேயன், துணை.தலைவர் ஜெயக்குமார், கவிஞர் தங்கம்மூர்த்தி, சலீம், சொக்கலிங்கம், கவிஞர் சம்பத்குமார், ரமேஷ், பாரதி பாபு, முத்துசாமி, ஜேம்ஸ், இனியன், ரவிச்சந்திரன், கருணாகரன், கருப்பையா, பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய, மாநில அரசுகள் ஒரு காலக்கெடுவிற்குள் தமிழகத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் இருந்த போது பேரம் பேசப்பட்டதாக வந்த வீடியோவை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மறுத்துள்ளார். இருப்பினும் உண்மை தன்மையை சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு முதல்வர் கையில் இல்லை. 3 எம்.எல்.ஏ.க்கள் கையில் தான் தமிழக அரசு உள்ளது. ஆந்திரா அரசு சித்தூர் கோசலாற்றின் குறுக்கே 5 தடுப்பணைகளை கட்டி வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் பஞ்சம் கடுமையாக ஏற்படும். எனவே தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரை சந்தித்து தடுப்பணை கட்டும் ஆந்திர அரசை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தமிழக சட்டமன்றம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மீனவர் பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை, மாட்டிறைச்சி விவகாரம் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது ஜனநாயக உரிமை. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க த.மா.கா. தயாராக உள்ளது. தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது. ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டையில் கடந்த 9-ந்தேதி புதிததாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு மருத்துவக் கல்லூரியை திறந்து வைத்தார்.
முன்னதாக இந்த விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
முதல்வர் வரும் வழியில் சாலை மறியல் செய்ததாக அவர்கள் மீது புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் கைதான 3 எம்.எல்.ஏ.க்களும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 11-ந்தேதி புதுக்கோட்டையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பேசிய மு.க ஸ்டாலின் சட்ட விரோதமாக எம்.எல்.ஏ.க்களை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று அறிவித்தார். அதேபோல் எதற்காக எம்.எல்.ஏ.க்களை கைது செய்தார்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் பேசினார்.
இந்தநிலையில் புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கைதான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் இன்று, தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
அதில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், ஏ.டி.எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. பாலகுரு, இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 167, 341, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு குறித்த மனு மீதான விசாரணையை நீதிபதி நாகராஜன் வருகிற 20-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தெற்கு ராயப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியையாக வீராச்சாமி என்பவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 37) பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் தலைமையாசிரியராக மதிவாணன் (47) பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் புவனேஸ்வரிக்கு , மதிவாணன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரிக்கவே, மனமுடைந்த புவனேஸ்வரி கடந்த 7-2-2015 ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லியாகத் அலி இன்று தீர்ப்பு அளித்தார்.
அதில் தலைமையாசிரியர் மதிவாணனுக்கு, 354(2ஏ) பெண்ணை பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியது என்ற பிரிவின் கீழ் 2 வருட சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இதே போல் 4பி(2) பெண்வதை தடுப்பு சட்டம் என்ற மற்றொரு பிரிவின் கீழ் 5 வருட சிறை தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.
பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை செய்த வழக்கில் தலைமையாசிரியருக்கு 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் கடந்த 9-ந்தேதி புதிய அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்ற புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து புதுக்கோட்டையில் நேற்று மாலை தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை. அரசியல் அநாகரீகம். புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டு 26.2.2011 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை விழா மேடையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசி விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டதால் தி.மு.க. முடங்கி போய் விடாது. கைது செய்ய செய்யத்தான் தி.மு.க. கம்பீரமாக எழுந்து நிற்கும்.
கைது செய்யப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது பொய் வழக்கை காவல்துறை போட்டுள்ளது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு. க. சார்பில் வழக்கு தொடரப்படும்.
ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். அவர்களே கவிழ்ந்து விடுவார்கள். அதன்பிறகு தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் மலரும். அப்போது இன்று கைது செய்த காவல்துறையினர் எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். பா.ஜனதா கட்டப்பஞ்சாயத்து செய்கிறது என்று நான் கூறியதற்கு பா.ஜனதா தலைவர் தமிழிசை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார்.

ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் ஒரு குட்டிக்கதை கூறினார். அதில் நாட்டாமை என்று யாரை கூறுகிறார் என்று தமிழிசை பதில் அளிக்க வேண்டும்.
மேலும் கடந்த 2011-ம் ஆண்டு மைனாரிட்டி ஆட்சியாக தி.மு.க. நடந்தது. இதனால் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வதற்கு தி.மு.க.விற்கு தகுதி இல்லை என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அன்றைக்கு மைனாரிட்டி ஆட்சியாக இருந்தாலும் ஒரே முதல்வராக 5 ஆண்டு காலம் ஆட்சி செய்தோம். ஆனால் இன்று ஒரே ஆண்டில் 3 முதல்வர்கள். எனவே தி.மு.க.வை பற்றி பேச அ.தி.மு.க.விற்கு எந்த அருகதையும் கிடையாது.
அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தினகரனுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். ஆனால் தற்போது தினகரனை எம்.எல்.ஏ.க்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் சென்று பார்த்து வருகின்றனர். இதனால் தினகரனை சந்தித்த எம்.எல். ஏ.க்களை கட்சியில் இருந்து நீக்க ஜெயக்குமார் தயாரா?
மத்திய அரசின் பினாமியாகத்தான் இந்த அரசு நடந்து வருகிறது. மேலும் செயல்படாத அரசாகத்தான் உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் என்பது முதல் படிதான். ஆட்சியை அகற்றும் வரை போராட்டம் தொடரும்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூற தயாரா? அப்படி அவர் கூறினால் நான் இந்த ஆட்சியை நிலையான ஆட்சி என்று ஒப்புக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துக்கருப்பன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைப்பித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதுக் கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சி புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டற்கும், முன்னர் நன்றாக செயல்பட்ட தலைவர்களை மாற்றப்பட்டதற்கும் மேலிடத்தில் புகார் செயப்படும். தற்போது அதிமுக 3 அணியாக உள்ளது. இது 6 அணியாக மாற வாய்ப்பு உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு தவிர, மோதல்கள் கிடையாது. கடந்த ஜெயலலிதாவின் 5 ஆண்டு ஆட்சியில் இருந்த நிர்வாகம் தற்போது மிக மோசமாக உள்ளது. மூன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவிற்கு கலந்து கொள்ள விடாமல் கைது செய்தது மிகவும் கண்டிக்கதக்கது. இதில் அ.தி.மு.க. ஆட்சி அராஜக போக்காக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் கடந்த 9-ந்தேதி நடந்த அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்க சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோரை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் போலீசார் கைது செய்தனர்.
தமிழக முதல்வரை வழி மறிக்கும் திட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் முன்னெச்சரிக்கையாக அவர்களை கைது செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கைதான எம்.எல்.ஏ.க்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை பி.யு.சின்னப்பா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லப் பாண்டியன் மதுரை ஐகோர்ட் கிளையில், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க மனு தாக்கல் செய்தார். நீதிபதி, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தார்.

இதையடுத்து இன்று மாலை திட்டமிட்டப்படி புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றார். அங்கு தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் அவர், புதுக்கோட்டைக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
பதில்:- நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்தல் இப்பொழுது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.

கேள்வி:- ஒரு அமைச்சர், பா.ஜ.க. ஒன்றும் தீண்டத்தகாத கட்சியில்லை, அதனால் ஆதரவு கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறாரே?
பதில்:- எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.
கேள்வி:- எய்ம்ஸ் மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் அமைவதாக ஒரு தகவல் வந்துள்ளது, அதற்கு நீங்கள் ஏதாவது பரிந்துரை செய்திருக்கிறீர்களா?
பதில்:- எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய வேண்டுமென்று ஏற்கனவே ஜெயலலிதா மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறார். அதன்படி எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு தமிழகத்தில் அமைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கேள்வி:- குடிநீர் தட்டுப்பாடு, நீட்தேர்வு, மாட்டிறைச்சி என அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல்- அமைச்சர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனரே?

பதில்:- நீட்தேர்வு குறித்து எத்தனை முறை பேட்டி கொடுத்தேன் என்று அத்தனை பேருக்கும் தெரியும். பிரதமரை 3 முறை சந்தித்தபோது, நீட் தேர்வு குறித்து அவரிடத்திலே விவரமாக, விளக்கமாக, தமிழக மாணவர்கள், ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று பலமுறை கோரிக்கை வைத்திருக்கின்றேன், உங்களுக்கு தெரியும்.
கேள்வி:- மாட்டிறைச்சி சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்:- இன்னும் மத்திய அரசினுடைய முழுமையான அறிக்கை கிடைக்கப்பெறவில்லை. அது கிடைத்தவுடன் எங்களுடைய நிலைப்பாட்டை கூறமுடியும். அதற்கிடையிலே மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி, எதிர்க்கட்சியினுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கிறார்.
கேள்வி:- தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டங்களில் அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்:- மக்களுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்தினாலும், அதை ஜெயலலிதாவின் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
கேள்வி:- தமிழக அரசு ஸ்திரத்தன்மையற்ற அரசு என்ற ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். இரண்டு அணிகளின் இணைப்பு சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள்?
பதில்:- தமிழக அரசு வலிமையாக இருக்கிறது. 123 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டு, ஒரு வலிமையான கட்சியாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஏற்கனவே, 100 நாள் திட்டத்தைப் பற்றி, தெளிவாக எல்லா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் விளம்பரப்படுத்தி இருக்கிறோம்.
இதுவரை எந்த ஒரு அரசும் செய்யாத அளவிற்கு ஜெயலலிதா அரசு, ஜெயலலிதா வழியிலே நின்று சிறப்பான திட்டங்களை இன்றைக்கு நாட்டு மக்களுக்கு தந்திருக்கிறது. விவசாயிகளுக்கு ஏரி, குளம், அணைகளிலே வண்டல் மண் அள்ளுகிற திட்டத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது. மணல் விற்பனையை அரசே ஏற்று இன்றைக்கு நடத்திக்கொண்டிருக்கிறது.
அதோடு இன்றைக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குறைக்கப்பட்டிருக்கிறது. இப்படி, ஏராளமான திட்டங்களை அரசு குறுகிய காலத்திலே விரைந்து செயல்பட்டு இன்றைக்கு மக்கள் மனதிலே இடம்பெற்றிருக்கிறது. பொறுக்க முடியாதவர்கள், வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
கேள்வி:- மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:- மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற கேள்வி எழவில்லை. இருந்தாலும், காலியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதற்கு அரசு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எப்பொழுது பார்த்தாலும் இந்த அரசு பினாமி அரசு, சுனாமி அரசு, ஜெராக்ஸ் அரசு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவுடைய அரசைப் பொறுத்தவரை, இது நிலையான அரசு. மக்கள் என்ன எண்ணுகிறார்களோ, அதை நிறைவேற்றுகிற அரசாக இருந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி பத்திரிகைகளையும், ஊடகங்களையும் சந்தித்து பேசினால் தான் அந்த அரசு இருக்கிறதென்று நினைக்காதீர்கள்.
ஜெயலலிதாவுடைய நிலையான அரசு, உறுதியான அரசு, 123 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசு. இவர்களுடைய ஆட்சிக்காலத்திலே மைனாரிட்டி அரசாக இருந்தது. எங்கள் ஆட்சியைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்தபோது இதனை ஏற்றுக்கொண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்க ரூ.231 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்தார்.
அதன் அடிப்படையில் புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மச்சுவாடி அருகே நிலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிட கட்டுமான பணிகள் தொடங்கின. சரியாக 11 மாதங்களில் இந்த பணிகள் முழுமை அடைந்தன.
இந்த அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனைத்து வகையான அதிநவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 75,056 சதுர அடியில் புற நோயாளிகள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அனைத்து துறை சம்பந்தப்பட்ட வெளி நோயாளிகள் பரிசோதனை அறைகளும், ரத்த வங்கி, ரத்தப் பரிசோதனை மையங்கள், சிறு அறுவை சிகிச்சை அரங்கம் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 3 லட்சத்து 28 ஆயிரத்து 332 சதுர அடியில் உள்நோயாளிகள் பிரிவு 5 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் செல்வதற்காக 6 பெரிய லிப்டுகள், மருத்துவ உபகரணங்களை எடுத்து செல்ல 3 லிப்டுகள், தரைதளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு மற்றும் அனைத்து தீவிர சிகிச்சை பிரிவுகளும் உள்ளன.
முதல், இரண்டு, மூன்று மற்றும் 4-வது மாடிகளில் அனைத்து துறைகளின் உள்நோயாளிகள் படுக்கை பிரிவு அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்டு புதிய அரசு மருத்துவக்கல் லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.
விழாவுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை முன்னிலை வகித்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
இதில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் நன்றி கூறினார்.
முன்னதாக விழாவில் கலந்து கொள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 11 மணிக்கு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழா நடைபெறும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு வந்தார். விழா முடிந்ததும் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து மாலை தனியார் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக புதுக்கோட்டை வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகர் முழுவதும் முதல்-அமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன. திறப்பு விழா நடைபெற்ற மருத்துவக்கல்லூரி வளாகம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலித்தது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவரங்குளம் அருகே உள்ள அழகம்பாள்புரத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 58). இவர் ஆலங்குடி அரசு வங்கியில் ஒரு லட்சம் பணம் எடுத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வைத்து பூட்டி விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
திருவரங்குளம் கடை வீதியில் தனது பைக்கை விட்டு விட்டு கடைக்கு சென்றார். மர்ம நபர்கள் மூன்றுபேர் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து ராமநாதன் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க ரூ.231.23 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன்படி கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு நாளை 9-ந்தேதி புதிய மருத்துவக்கல்லூரி திறப்பு விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்குகிறார். மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை முன்னிலை வகிக்கிறார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துகொண்டு புதிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்து அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே. வைரமுத்து மற்றும் எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.
விழாவையொட்டி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகளை நேற்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். முதல்வர் வருகையையொட்டி புதுக்கோட்டையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய மருத்துவக்கல்லூரி குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

இக்கல்லூரி சுமார் 9 லட்சம் சதுரடியில் ரூ.231.23 கோடி மதிப்பில் 31 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இரு விரிவுரையாளர் அரங்கம், நூலகம், கலையரங்கம், ஆய்வுக்கூடம், பயிற்சிப்பட்டறை அரங்கம், 20.559 சதுர மீட்டர் பரப்பளவில் மருத்துவமனைக்கென 700 படுக்கைகள் கொண்ட அறைகள், வெளி நோயாளிகள் பிரிவு, பிணவறை, கட்டண கழிப்பிடம், நவீன சமையல் கூடம் , இருசக்கரம் வாகனம் நிறுத்துமிடம், அவசர ஊர்தி நிறுத்துமிடம், வங்கி, தபால் நிலையம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது .
ஆண், பெண் இருபாலருக்கென தனித்தனி விடுதி கட்டிடம், முதல்வர் குடியிருப்பு, இருக்கை மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பு, உடற்பயிற்சிக்கூடம், ஆண், பெண் குடியிருப்புகள் என மொத்தம் சுமார் 9 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் 2017- 2018 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். புதிய மாணவ சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கி விட்டது .
இவ்வாறு அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.






