என் மலர்
புதுக்கோட்டை
திருமயம் பெல் நிறுவன ஊழியர்கள் இணைந்து புதிய சென்டினரி பெல் சிட்டி ரோட்டரி சங்கம் என்ற பெயரில் புதிதாக சங்கம் உருவாக்க உள்ளனர். அதன் பொதுக்குழு கூட்டம் திருமயம் உள்ள சத்திரத்தில் சங்கத்தின் வருங்கால தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
மண்டல இயக்குனர் டாக்டர் சலீம். துணை ஆளுனர் முத்துசாமி மக்கள் தொடர்பு இயக்குனர். மாருதி மோகன்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நமது ரோட்டரி என்ற புத்தக த்தினை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
முடிவில் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சார்பில் நீர் மேலாண்மை பிரசாரம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
நபார்டு வங்கி நாடு முழுவதும் நீர்மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளில் உள்ள 500 கிராமங்களில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதுவரை 380 கிராமங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் 380 கிராமங்களில் 25 இடங்களில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டும், 5 கிராமங்களில் நீர்வரத்துவாரிகள் சுத்தம் செய்ததன் மூலம் 510 ஏக்கர் நிலத்திற்கு நீர் கிடைக்கும் வகையிலும், 25 இடங்களில் நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மை மூலம் மழைபெற மரம் வளர்த்தல், மழைநீரை சேமித்தல், நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், அரசு மானிய திட்டங்கள் நீர் சுழற்சியின் முக்கியத்துவம், பயிர் மாற்றத்தின் அவசியம், நீர் நிலைகளை தூர்வாரி புதுப்பித்தல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், சமஉயர வரப்புகள் அமைத்தல் உள்ளிட்ட மற்றும் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கப் பட்டுள்ளதுடன், பிளாஸ்டிக் உபயோகத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையும், வேளாண் கல்லூரி கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 21 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம் நபார்டு திட்டத்தின் கீழ் விரைவில் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் நீரின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை சேமித்து பயன்பெறும் வகையில் நீர்மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பெற்றிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சோமசுந்தரம், ஆசிரியர்கள், பள்ளிமாணவ, மாணவிகள், சுயஉதவி குழு பெண்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது 32). இவருக்கும் ஆலங்குடியை அடுத்த பாத்தம்பட்டியை சேர்ந்த கணேசன் (35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு கவிதா (5), நாடியம்மாள் (2) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே கடந்த பல மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு முத்து லட்சுமி கணவருடன் கோபித்துக்கொண்டு பரவாக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து கணேசனின் உறவினர்கள் முத்துலட்சுமியுடன் சமரசம் பேசி மீண்டும் குடும்பம் நடத்த பாத்தம்பட்டிக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன் தினம் மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த முத்து லட்சுமி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய முத்துலட்சுமி பாத்தம்பட்டியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்று பகுதிக்கு சென்றார். அங்கு தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசியதோடு தானும் குதித்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முத்து லட்சுமியும், மூத்த மகள் கவிதாவும் பரிதாபமாக இறந்தனர்.
இளைய மகள் நாடியம்மாள் உயிருக்கு போராடினார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்ட மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந்தேதியுடன் முடிந்தது. 61 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு போதிய மீன்பாடு கிடைக்கவில்லை.
கடந்த வாரம் ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தும் சென்றனர். ஏற்கனவே தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை சிறையில் வாடும் நிலையில் தற்போது மேலும் 6 மீனவர்களை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று அதிகாலை மீன் துறை அலுவலக அனுமதியுடன் 116 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான படகில் சந்தனகுமார், வெற்றி, முகேஷ், நாகராஜ் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்திய கடல் பகுதியான நெடுந்தீவு அருகே வலையை விரித்து மீன்களுக்காக காத்திருந்தனர்.
அப்போது அங்கு குட்டி ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் மின்னல் வேகத்தில் வந்தனர். அவர்களை பார்த்ததும் அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலர் வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட்டனர். ஆனாலும் ஒரு படகை மட்டும் இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
பலமுறை எச்சரித்தும் எங்கள் நாட்டிற்குள் வந்து ஏன் மீன்பிடிக்கிறீர்கள்? என்று திட்டியுள்ளனர். மேலும் அவர்களின் படகுக்குள் தாவிக்குதித்த கடற்படையினர் வலைகளை அறுத்து சேதப்படுத்தியதோடு, மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் அதிலிருந்த சந்தனகுமார், வெற்றி, முகேஷ், நாகராஜ் ஆகிய 4 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், அவர்களுக்கு சொந்தமான படகையும் ரோந்து கப்பலில் கட்டி இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள காங்கேசன் துறை முகாம் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள் இன்று பிற்பகலில் இலங்கை ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினரை மட்டுமின்றி சக மீனவர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். வட்ட பிரதிநிதி ராஜா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் திருமலை கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்.
வருவாய் நிர்வாக ஆணையரை மாற்ற வேண்டும், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சங்க பொறுப்பாளர்களை அவமதித்த சிவகங்கை மாவட்ட கலெக்டரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அறந்தாங்கி தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் செந்தில்குமார், பொருளாளர் மாரிமுத்து, செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 58 விடுதிகள் (52 பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் 6 கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வருகின்றன. 2017-2018-ஆம் கல்வியாண்டிற்கு விடுதிகளில் சேர்வதற்கு, 4ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்கள் மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவியர்களுடைய சொந்த ஊருக்கும் - விடுதிக்கும் 5 கிமீ தூரத்திற்கு குறையாமல் இருக்கவேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட பள்ளி விடுதிக்காப்பாளர்- காப்பாளினிகளிடம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விடுதிக் காப்பாளினிகளிடம் 12.07.2017-க்குள் ஒப்படைக்க வேண்டும்.
கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு மாணவ,மாணவியர்கள் 21.07.2017-க்குள் அந்தந்த விடுதிக்காப்பாளர், காப்பாளினிகளிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்கவேண்டும். காலக்கெடுவுக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே. புதுப்பட்டி கடை வீதியில் நகைக்கடை வைத்திருப்பவர் செல்வராஜ் (வயது 50). இவரது மகன் தினேஷ்பாபு (20). நேற்றிரவு இவர்கள் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டினர். பின்னர் அவர்கள் இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது ஒரு பையில் 50 பவுன் நகையை எடுத்து சென்றனர்.
தல்லாம்பட்டி அருகே சென்ற போது பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், செல்வராஜ் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச்சென்று திடீரென வழி மறித்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தினேஷ்பாபு மற்றும் செல்வராஜை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த 50 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்ததும் கே.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் தந்தை- மகன் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. லோகநாதன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலக தாக்குதலைக் கண்டித்தும், இதில் தொடர்புடைய மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்ட் கட்சி சாரபில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், வர்த்தகத்திற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் புதுக்கோட்டை கீழராஜவீதி சாலையை நகராட்சி சாலையாக மாற்றம் செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் சண்முக பழனியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்பு ரையாற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி நகரச் செயலாளர் சி.அன்பு மணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜியாவு தீன், டி.சலோமி, துரை.நாராயணன், ஆர்.நிரஞ்சனா, சி.அடைக்கலாமி, நகரக்குழு உறுப்பினர்கள் ஏ.முத்தையா, ஆர்.சோலையப்பன், எம்.கணேஷ், எம்.கோவிந்தராஜன், எம்.சித்ரா. டி.நடராஜன், பழ.குமரேசன் உள்ளிட்டோர் பேசினர்.
புதுக்கோட்டை அருகே பெய்த பலத்த மழையால் மின்னல் தாக்கி விவசாயி பலியானார். இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள கோட்டைக்காரன்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(வயது 45). விவசாயி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு சந்தோஷ், தினேஷ் என்ற 2 மகன்களும், சேர்மலதா, சவுந்தர்யா என்ற மகள்களும் உள்ளனர்.
நேற்று மாலை கணேசன், சேர்மலதாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த காற்றும் வீசியது. இதில் மின்னல் தாக்கியதில் கணேசன் உடல் கருகினார். மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் சேர்மலதா மயக்கமடைந்தார்.
இதையடுத்து அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நீர்பழனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சேர்மலதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களுக்கு 18 சதவிகித வரிவிதிப்பு செய்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் ஜிஎஸ்டி மசோதாவைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொருளாளர் எம்.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் சண்முகராஜா மற்றும் நிர்வாகிகள் அமுதன், ஞானசேகரன், சித்ரா உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலளார் சலோமி ஆகியோர் பேசினர். முடிவில் கிரிஜா நன்றி கூறினார்.
புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வேளாண் சாகுபடிக்காக பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்து நாட்கள் நடைபெற்ற போராட்டத்தால் அந்த மாநிலம் ஸ்தம்பித்தது. பிறகு கடனை அந்த மாநில அரசு ரத்து செய்தது.
பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 9 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களில் இந்தப்போராட்டம் தொடர்கிறது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சாகுபடி செலவைவிட 1½ மடங்கு கூடுதல் விலை வைத்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரையை அரசு ஏற்க மறுத்தது. மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது அதை வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு மோடி அரசும் வழங்க மறுத்து வருகிறது. அதே போல தேசிய வங்கிகளில் பெற்ற விவசாயக் கடனையும் ரத்து செய்வதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்காதது, வார்தா புயல் நிவாரணம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு மாறாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இரு அணிகளும் மத்திய அரசிடம் நெருக்கம் காட்டுவதிலேயே போட்டி போடுகிறது. அமலாக்கத் துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்ற தனக்கு கீழ் இயங்கும் அமைப்புகளை வைத்து இரு அணிகளையும் மிரட்டி தங்கள் பக்கம் வைத்திருக்கிறது மத்திய அரசு.
காவிரி மேலாண்மை வாரியம், நீட் தேர்வு உள்ளிட்ட விவாகரங்கள் நீதிமன்றத்தில் இருக்கும்போது சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களுக்கு பணப்பரிமாற்றம் தொடர்பாக தமிழக சட்ட மன்றத்தில், எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தை காரணம் காட்டி தற்பொழுது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை விவாதம் நடத்த அனுமதிக்காததை எங்கள் கட்சி ஏற்கவில்லை.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கூட்டத் தொடரிலாவது சட்டம் கொண்டுவர மாநில அரசு முயற்சிச்க வேண்டும். வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வரும் பா.ஜ.க.வின் வேட்பாளரை அ.தி.மு.க.வின் இரு அணிகளும் ஆதரிக்கக் கூடாது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தமிழகத்தில் பல வடிவங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி, ஆணவக் கொலைகளுக்கு தனியாக சட்டம் இயற்ற வலியறுத்தியும் பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது. இந்தப் பயணம் சென்னைக்கு வரும் 23-ந் தேதி வருகிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது . உடனடியாக காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பல மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால், கிராமப்புறங்களில் பல பணிகள் முடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முதல் கையொப்பமிட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து கூறியதாவது:-
தமிழக அரசு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதன்படி குழந்தை தொழிலாளர்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் நாள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களிலும் விழிப்புணர்வு ஒட்டுவில்லை ஒட்டப்பட்டது.
தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தினால் ரூ.50,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தை குழந்தை தொழிவாளர் அற்ற மாவட்டமாக மாற்றும் வகையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து கடைகள், உணவகங்கள், வர்த்தகம் மற்றும் தொழிற் நிறுவனங்கள், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் செய்யும் கடைகளில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு புகார்களுக்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி தொழிலாளர் ஆய்வாளர் சுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, உதவி ஆய்வாளர் குணசீலன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






