search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதிதிராவிடர் விடுதி"

    • சிவகங்கையில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவர்கள் நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர், கழிவறை வசதி, சமையற்கூடம், மாணவிகளின் வருகை பதிவேடு போன்றவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும் மாணவ-மாணவி களிடம் குறைகளை கேட்ட றிந்து கலந்துரையாடினார்.

    அப்போது அமைச்சர் கயல்விழி கூறியதாவது:-

    முதலமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு எதிர்கால லட்சியங்கள், தங்களது படிப்பின் நோக்கங்கள் ஆகியன குறித்து முழுமையாக அறிந்து செயல்பட வேண்டும். தங்களது குடும்ப சூழ்நிலையை அறிந்து, பெற்றோர்களை மனதில் கொண்டு நல்லமுறையில் படிப்பதுடன், கூடுதலான தனித்திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சிவக்குமார், மானாமதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாதுரை மற்றும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் விடுதி காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • மேலும் விவரங்களுக்கு விடுதி காப்பாளா்களை அணுகி விவரம் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான 40 விடுதிகள் உள்ளன. அதில் பள்ளி மாணவா்களுக்கு 22 விடுதிகள், மாணவிகளுக்கு 13 விடுதிகள் செயல்படுகின்றன.

    கல்லூரி மாணவிகளுக்கு 2,மாணவா்களுக்கு 3 என விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டம், பட்டமேற்படிப்பு வரையில் பயில்வோரும் சேரலாம்.

    10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி நூல்கள் இலவசமாக வழங்கப்படும்.

    விடுதிகளில் சேருவதற்கு பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிப்போரது வீட்டில் இருந்து விடுதி 5 கிலோ மீட்டா் தூரத்துக்கு அதிகமாக இருப்பது அவசியம். இந்த விதியானது பெற்றோரை இழந்த மாணவா்களுக்குப் பொருந்தாது.

    பள்ளி விடுதிகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கு வரும் 25-ந் தேதி வரையிலும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு விடுதி காப்பாளா்களை அணுகி விவரம் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×