என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறைப்பிடித்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 147 விசைப் படகுகளில் 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அங்கு மின்னல் வேகத்தில் வந்தது.

    இதைப்பார்த்ததும் புதுக்கோட்டை மீனவர்கள் அச்சத்துடன் அங்கிருந்து வலைகளை சுருட்டிக் கொண்டு புறப்பட தயாரானார்கள். ஆனால் அதில் ஒரு படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களின் படகில் ஏறிய கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை சரமாரியாக தாக்கினர்.

    பின்னர் அந்த படகில் இருந்த நாகமுத்து (வயது 43), அய்யமுத்து (37), ராமமூர்த்தி (44) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.



    இதேபோல் ஜெகதாபட்டினத்தில் சங்கர் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற கணேஷ் (23), மதன் (20), பூபாலன் (45), சதீஸ் (30), அர்ச்சணன் (45) ஆகிய 5 பேரையும் எல்லைதாண்டி வந்ததாக கூறி சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் படகையும் பறிமுதல் செய்தனர்.

    ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மற்றும் அவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கையில் உள்ள காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று பிற்பகலில் அவர்கள் இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னரே அவர்கள் விடுதலையாவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்ற விபரம் தெரிய வரும்.

    கடந்த 2 வாரங்களில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 85-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 85-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.



    நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதில் மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக தென்னை மட்டைகளை எரித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து போராட்டக்காரர்கள் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டம் வெளிநாடுகளில் ஏற்படுத்திய பாதிப்புகளின் அடிப்படையில்தான் இந்த திட்டத்தை எதிர்த்து வந்தோம். ஆனால் தற்போது கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நெடுவாசலில் செயல்படுத்தினால் நெடுவாசலும் எரியும். அப்போதும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றுமே நடக்காதது போன்று காட்டிக் கொள்ளும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த போராட்டத்தை நடத்தினோம் என்றார்.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற கியூ பிரிவு அலுவலக திறப்பு விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) செந்தில்குமார் சென்றார். பின்னர் அங்கிருந்து நெடுவாசல் அருகே நல்லாண்டார் கொல்லைக்கு 4 கார்களில் போலீசாருடன் சென்றார். அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எரிபொருள் பரிசோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை அவர் ஆய்வு செய்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த இடத்துக்கு சென்றனர். மேலும் அவரை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களிடம் இந்த இடத்தை பார்வையிடுவதற்காக வந்தேனே தவிர, வேறொன்றும் இல்லை என்று கூறிவிட்டு சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    நெடுவாசலில் போராடும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொதுமக்கள் மிக்சர் சாப்பிட்டு நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 83-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டும், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல மாதங்களாக திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மிக்சர் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹைட்ரோகார்பன் போராட்டக்குழு சார்பில் உயர்மட்டக்குழு அமைத்து போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக பல முயற்சிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். அதனால், போராட்டம் மேலும் தீவிரமடைய தொடங்கி உள்ளது. நேற்றைய போராட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி இளைஞர்களும் பெண்களும் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள பல கடைகள் மூடப்பட்டன. அரிமளம் சாலையில் 42-வது வார்டில் உள்ள கடை நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தள்ளி இருப்பதால் அந்தக் கடைமட்டும் மூடப்படவில்லை. இதனால், நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த குடிமகன்களும் இந்தக் கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இதனால், இந்தப் பகுதி நாள் முழுவதும் கலவரப்பூமியாய் காட்சியளிக்கிறது. கடையில் மதுப்பாட்டில் வாங்குபவர்களை ஒழுங்கு படுத்துவதற்கே தினந்தோறும் காவல்துறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கடை குடியிருப்பின் மையப் பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    மதுவை வாங்கியவர்கள் குடியிருப்புகள் இருக்கிறது என்றும் பாராமல் ஆங்காங்கே திறந்தவெளியில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே வீசிச் செல்கின்றனர். போதை தலைக்கேறியதும் அங்காங்கே தகராறுகளும் அடிக்கடி அரங்கேற்றப்படுகிறது. இந்தக் கடை புறநகர்ப் பகுதியில் இருப்பதால் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் திறந்தவெளி மது அருந்தும் கூடமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது விவசாயத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

    இதனால், மேற்படி டாஸ்மாக் கடையைச் சுற்றியுள்ள அன்னச்சத்திரம், கொசலாக்குடி, கணக்கம்பட்டி, உப்புப்பட்டி, பொன்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். கடையை அப்புறப்படுத்தக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இத்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து நேற்று கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராடத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், நகரச் செயலாளர் சி.அன்பு மணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜியாவு தீன், ஜி.நாகராஜன், வாலி பர் சங்க நிர்வாகிகள் தமிழ ரசன், சோலையப்பன், பாண்டியன், அருண், விக்கி, விஷாலி, திவ்யா, சுரோஷ், ராஜா மாதர் சங்கம் சார்பில் சுசீலா, காயத்திரி, சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை அகற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய டாஸ்மாக் மாவட்ட மேலாளர் விடுப்பில் இருப்பதால் வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அது வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது எனவும் முடி வெடுக்கப்பட்டது.

    இதுகுறித்து போராட்டக் குழுவினர் தெரிவித்தபோது: வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் பேச்சு வார்த்தையில் கடை அகற்றப்படும் என நம்புகிறோம். ஒருவேளை கடை மூடப்படாவிட்டால் கடையை அகற்றும் வரை மீண்டும் எங்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் பொதுமக்கள் பாஜகவினர் என 100க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளர் மற்றும் திருமயம் காவல் உதவி ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை 15 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    புதுக்கோட்டை நல்லாண்டார் கொல்லையில் ஓ.என். ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து சில தினங்களாக வாயு கசிவதால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் நல்லாண்டார் கொல்லை, வடகாடு, வானக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என். ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க சோதனை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வட காடு, கோட்டைக்காடு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நல்லாண்டார் கொல்லையில் ஓ.என். ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள ராட்சத குழாயில் இருந்து சில தினங்களாக வாயு கசிவு ஏற்பட்டு, அதனால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் நல்லாண்டார்கொல்லையில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, நல்லாண்டார்கொல்லையில் குடியிருப்புக்கு அருகே ஓ. என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறு உள்ளது. அப்பகுதியில் தான் எங்கள் விவசாய நிலங்கள் உள்ளன. தினமும் நாங்கள் அங்கு சென்று வேலை செய்ய வேண்டும்.

    கடந்த சில தினங்களாக ஆழ்குழாய் கிணற்றில் உள்ள ராட்சத குழாயில் இருந்து வாயு கசிந்து வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் போது கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் அதை சுவாசிக்கும் போது தலைசுற்றல், மயக்கம் ஏற்படுகிறது. இதனால் எங்களுக்கும், குழந்தைகளுக்கும் தீங்கு நேரிடுமோ? என்ற அச்சமும், வாயு கசிவால் தீ விபத்து ஏற்படுமோ? என்ற அச்சமும் உள்ளது. எனவே மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.

    இதனிடையே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி இன்று 83-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை தாக்கிய போலீசாரை கண்டித்தும், கைது செய்த விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் பேரணியாக சென்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2-வது கட்டமாக போராடி வருகிறோம். கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய விவசாயிகளை மாநில அரசு போலீசாரை கொண்டு தடியடி நடத்தி அடக்கு முறையை கையாண்டுள்ளது. மத்திய, மாநில விவசாயிகளாகிய எங்களை துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல்படாமல், விவசாயத்தை அழிக்கும் இது போன்ற திட்டங்களை உடனடியாக ரத்து செய்து அறிவிக்க வேண்டும் என்றனர்.

    ஹைட்ரோகார்பன் திட்டபாதிப்பை விளக்கும் வகையில் நெடுவாசல் பொது மக்கள் மயங்கி விழுந்தது போன்று நடித்து காட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில், நெடுவாசலில் 80-வது நாளாக நேற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், பலமாதங்களாக போராடிவரும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    இந்த நிலையில் நேற்று காலை தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கொடியாலம் சாலையில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவன ஆழ்துளை எண்ணெய் கிணறு அருகே வயல் பகுதியில் செல்லும் குழாய் உடைந்து, அதில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. தீப்பற்றியும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று கூறி அந்த பகுதி பொது மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெடுவாசலிலும் இது போன்று சம்பவம் நடந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் நெடுவாசல் பொதுமக்கள் மயக்கம் அடைந்து விழுந்து கிடப்பது போன்று நடித்து காட்டினர். இந்த நூதன போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கந்தர்வக்கோட்டையில் வாலிபரை தாக்கிவிட்டு இளம் பெண்ணை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்த மல்லிகைநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் பிரியங்கா (வயது 25). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று பிரியங்கா கந்தர் வக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு தனது உறவினர் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். கந்தர்வக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் வேம்பன்பட்டி என்ற இடம் அருகே சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது பின்னால் வேகமாக ஓரு கார் வந்தது. அந்த கார் திடீரென மோட்டார் சைக்கிளை வழி மறித்து நின்றது. அதில் இருந்து 5 பேர் இறங்கினார்கள். அவர்கள் அஜித்குமாரை தாக்கி கிழே தள்ளி விட்டு பிரியங்காவை காரில் கடத்தி சென்றனர்.

    இது குறித்து கலியமூர்த்தி கந்தர்வக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் கந்தர்வக் கோட்டை அருகே உள்ள சோமபுரத்தை சேர்ந்த பாலு, பாலமுருகன், ராசு, செல்லத்துரை, வீரபாண்டி ஆகிய 5 பேர் தன் மகள் பிரியங்காவை கடத்தியதாக கூறியுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தியின் உறவினர்கள் சுமார் 200 பேர் பெண்ணை கடத்தியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க கோரி கந்தர்வக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரே சாலை மறியல் செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை டி.எஸ்.பி. ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பெண்ணை கடத்தியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி கூறினார்.

    இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இளம்பெண்ணை கடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    ஆலங்குடி அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய கோர விபத்தில் 2 பேர் பலியானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த அடப்பன்வயல் கிராமம் 2-வது தெருவை சேர்ந்தவர் சார்லஸ் மகன் எபினேசர் (வயது 22). இவரது நண்பர்கள் காந்தி நகரை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் தினேஷ் (23) மற்றும் அடப்பன்வயல் 7-வது தெருவைச்சேர்ந்த முகமது கனிமகன் அ‌ஷரப் இப்ராகிம் (23).

    இவர்கள் 3 பேரும் இன்று காலை பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். வடகாடு அருகே உள்ள கோவில்பட்டி வளையில் அவர்கள் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலை யோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இந்த கோர விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் எபினேசர் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து பலியானார். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஆலங் குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அ‌ஷரப் இப்ராகிம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பொதுமக்கள் 76-வது நாளாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பொதுமக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி 2-வது கட்ட போராட்டத்தை தொடங்கி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 76-வது நாளாக நேற்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், போராடி வரும் மக்களை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும்போது, அதில் இருந்து வெளியேறும் கழிவுகளை தெர்மகோல் போட்டு மூடுவதுபோல சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் நிருபர்களிடம் கூறுகையில்,

    பல மாதங்களாக போராடி வரும் எங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால், அதிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளால் பெரும் சுகாதாரகேடு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும். இதை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தும் விதமாக, ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்கும்போது அதிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகளை தெர்மகோல் போட்டு மூடும் போராட்டத்தை நடத்தினோம். திட்டத்தை ரத்து செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். அதனால், திட்டத்தை உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றனர்.
    புதுக்கோட்டை அருகே ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மண மேல்குடி பத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 39). இவர் மீது மண மேல்குடி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் உள்பட 9 வழக்குகள் உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜேசுராஜூக்கும், அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஜேசுராஜ், குமாரை சரமாரி தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசுராஜை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    கடந்த 22-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்த அவர், தன்னை சிறைக்கு அனுப்பிய குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்றிரவு பத்தக்காடு வண்ணாங்குளம் பகுதியில் குமார் மற்றும் அவரது சகோதரர்கள் ராஜ் கமல், சிவப்பிரகாசம் ஆகியோர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஜேசுராஜ் மற்றும் அவரது தம்பி ஞானப்பிரகாசம் ஆகியோர் வந்தனர். உடனே ஜேசுராஜ், குமாரிடம் என்னை ஜெயிலுக்கு அனுப்பியது நீதானே, உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

    தகராறு முற்றவே ஆத்திரமடைந்த குமார், அரிவாளால் ஜேசுராஜ் மற்றும் ஞானப்பிரகாசத்தை சரமாரி வெட்டினார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே ஜேசுராஜ் இறந்தார். ஞானப்பிரகாசம் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மணமேல்குடி போலீசார் ஜேசுராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்த குமார், ராஜ்கமல், சிவப்பிரகாசம் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட ஜேசுரா ஜூக்கு திருமணமாகி பொன் சியா என்ற மனைவியும், ஜோஸ்வா என்ற மகனும் உள்ளனர். பொன்சியா கணவரை பிரிந்து மகனுடன் கோவையில் வசித்து வருகிறார்.

    பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஜேசுராஜை கடந்த 2015-ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த அவர் குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் குமாருடன் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவம் நடந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மேலும் 3 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 247 விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் ஜலாலுதீன் (வயது 50), ராசு (62), அசார் (40) ஆகிய 3 பேரும் ஒரு விசைப்படகில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 37 கடல் மைல் தொலைவில் உள்ள இந்திய கடல் பகுதியான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 3 பேரையும் விசைப்படகுடன் சிறைப் பிடித்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர்.

    கடந்த 22-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 3 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



    சிறைபிடிக்கப்பட்ட ஜலாலுதீன், அசார் ஆகியோர் நாளை ரம்ஜான் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட இருந்தனர். இதற்காக கடலுக்கு சென்று அதிக மீன்கள் பிடித்து வருமானம் கொண்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றனர்.

    மேலும் அவர்களின் வருகைக்காக குடும்பத்தினரும் காத்திருந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதை அறிந்த இருவரது குடும்பத்தினரும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளதோடு ரம்ஜானை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு கடந்த வாரம் தான் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைப்பிடித்து வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மத்திய- மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக 74-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நெடுவாசலை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 2-ம் கட்டமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 74-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. நேற்று நடந்த போராட்டத்தில் மக்களின் கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததை சுட்டிக்காட்டும் விதமாக போராட்டம் நடைபெற்றது.



    இதைத்தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசுதான் ரத்து செய்ய வேண்டும் என்கிறது மத்திய அரசு. ஆனால் திட்டத்தை அறிவித்த மத்திய அரசுதான் ரத்து செய்ய வேண்டும் என்கிறது மாநில அரசு. இதில் யாருக்கு அதிகாரம் உள்ளது எனத்தெரியவில்லை.

    எனவே இந்த திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வி.ஆர்.கே. திருமண மகாலில் நாளை 25-ந்தேதி காலை 9 மணிக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் நெடுவாசலை சுற்றியுள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு கட்சிகள், விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது என்றனர்.

    ×