search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் - இளைஞர்கள் போராட்டம்
    X

    புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் - இளைஞர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி இளைஞர்களும் பெண்களும் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள பல கடைகள் மூடப்பட்டன. அரிமளம் சாலையில் 42-வது வார்டில் உள்ள கடை நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தள்ளி இருப்பதால் அந்தக் கடைமட்டும் மூடப்படவில்லை. இதனால், நகரத்தில் உள்ள ஒட்டுமொத்த குடிமகன்களும் இந்தக் கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இதனால், இந்தப் பகுதி நாள் முழுவதும் கலவரப்பூமியாய் காட்சியளிக்கிறது. கடையில் மதுப்பாட்டில் வாங்குபவர்களை ஒழுங்கு படுத்துவதற்கே தினந்தோறும் காவல்துறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்தக் கடை குடியிருப்பின் மையப் பகுதியில் இருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    மதுவை வாங்கியவர்கள் குடியிருப்புகள் இருக்கிறது என்றும் பாராமல் ஆங்காங்கே திறந்தவெளியில் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே வீசிச் செல்கின்றனர். போதை தலைக்கேறியதும் அங்காங்கே தகராறுகளும் அடிக்கடி அரங்கேற்றப்படுகிறது. இந்தக் கடை புறநகர்ப் பகுதியில் இருப்பதால் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் திறந்தவெளி மது அருந்தும் கூடமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது விவசாயத்தையும் பெருமளவில் பாதிக்கிறது.

    இதனால், மேற்படி டாஸ்மாக் கடையைச் சுற்றியுள்ள அன்னச்சத்திரம், கொசலாக்குடி, கணக்கம்பட்டி, உப்புப்பட்டி, பொன்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். கடையை அப்புறப்படுத்தக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இத்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து நேற்று கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராடத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், நகரச் செயலாளர் சி.அன்பு மணவாளன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ஜியாவு தீன், ஜி.நாகராஜன், வாலி பர் சங்க நிர்வாகிகள் தமிழ ரசன், சோலையப்பன், பாண்டியன், அருண், விக்கி, விஷாலி, திவ்யா, சுரோஷ், ராஜா மாதர் சங்கம் சார்பில் சுசீலா, காயத்திரி, சித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை அகற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய டாஸ்மாக் மாவட்ட மேலாளர் விடுப்பில் இருப்பதால் வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவது எனவும் அது வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது எனவும் முடி வெடுக்கப்பட்டது.

    இதுகுறித்து போராட்டக் குழுவினர் தெரிவித்தபோது: வருகின்ற ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும் பேச்சு வார்த்தையில் கடை அகற்றப்படும் என நம்புகிறோம். ஒருவேளை கடை மூடப்படாவிட்டால் கடையை அகற்றும் வரை மீண்டும் எங்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் பொதுமக்கள் பாஜகவினர் என 100க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளர் மற்றும் திருமயம் காவல் உதவி ஆய்வாளர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடையை 15 நாட்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
    Next Story
    ×